சண்முக சட்கண்டம் - ஆணைமுகன் வணக்கம்

 அன்பிலொரு விண்ணப்பம் ஆணைமுகா உனக்கு வைத்தேன்

முன்பிலொரு கிண்ணத்தில் மோதகமும் உனக்கு வைத்தேன்

வன்பிறவி விட்டிங்கு வானுலகை அடைய எண்ணி

என்பிறவி தன்னுள்ளே ஏரகனை எழுத வந்தேன். 1







கந்தமலர் பாதமதை கச்சிதமாய் நான்பற்ற

செந்தமிழும் நாவளர செல்வமதை நீதந்து

முந்துவினை தான்மடிய மந்திரமாம் வேலானை

உந்துமனத் தால்மொழிய உள்ளமதில் நீநின்று 2


பாரதமாம் காவியத்தை பாரரிய ஏடமர்த்தி

வாரணத்தை தானுடுத்து வைரவரி தந்ததுபோல்

காரணமாய் நீயிருந்து கந்தகுரு பாடலினை

பூரணமாய் நான்முடிக்க பூந்தமிழை நீவழங்கு. 3






ஆதிசிவன் பார்வதியை ஆசையொடு வலம்வந்து

பூதியருள் மாம்பழத்தை பூரணமாய் ருசித்தோனே

ஆதிமுதல் மூலவனே ஆணைமுக நாயகனே

ஓதியுனை வேண்டுகிறேன் ஓரெயிறு கொண்டவனே. 4


வந்தனைகள் செய்தவுடன் வந்திறங்கி வரமருள்வாய்

சிந்தனையில் நின்றவுடன் சீர்தமிழை எனக்கருள்வாய்

எந்தவினை தான்வரினும் என்துணையாய் இருந்தருள்வாய்

சந்தமுடன் நான்பணிய சித்தியென அமர்ந்தருள்வாய்.. 5


அன்றொரு நாளதிலே அகத்தியனுக் கருள்செய்தாய்

பின்னொரு நாளதிலே அருணகிரிக் கருள்செய்தாய்

முன்னொரு நாளதிலே முனிவருக்கு மருள்செய்தாய்

என்னுடை பாவடியுள் எழுந்தருளிப் பொருள்செய்வாய் 6


பற்றுள்ள பாருலகில் பட்டதெல்லாம் போதுமென்றே

கற்றுள்ள தேன்தமிழில் கட்டுவித்தேன் உன்கருணைப்

பெற்றுள்ள பாவலர்கள் போற்றுவகை யாயமைய

உற்றுள்ளே நீயிருந்து உண்மைபட செய்திடுவாய்.. 7


எப்போதும் எல்லோர்க்கும் எல்லாமும் நலமாக

தப்பாத பாவாக தானாக அமையவே

முப்பாகு போலாகி மும்மாயை விலகவே

சுப்பன்தன் சொல்லாக சித்தாக அமைகவே.. 8


வில்லேகும் அம்பாக விரும்பி உரைப்போர்

சொல்லேகும் முன்பாக சுகஞ்சேர வரைபோல்

வல்லார்க்கும் தெம்பாக  வளஞ்சேர முறையாய்

எல்லார்க்கும் எல்லாமும் எளிதாக கிடைக்க 9.


அரசமரத் தரசன் ஆணைமுகன் பாதமதில்

சிரசமதை பதித்து சீதளத்தில் போதமொடு

சரவணத்தாள் பிடித்து சந்தமொடு யாப்பினொடு

பரவுகின்ற படிப்பை பக்தியொடு ஓதுகவே.. 10


إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم