நதியை சிகையில் நிதமும் சுமந்த சிவனின் குமரா
மதியை அரவை முடியில் அணிந்த சிவனார் மகனே
கதியை அருளும் கடம்பா கதிரோன் நிகரா ஔியே
சதியை முடிக்கும் சதுர்வேல் கரத்தே உடையாய் முருகா. 1
தரணிச் சிறந்த தணிகை அமர்ந்த தனிவேல் அழகா
முரணில் பிறந்த முதியா இளையோய் முனிவோர்க் கரசே
அரணின் மகனே அமரர்த் தலைவா அறுமா முகனே
கரமே தருவாய் கடினம் துரத்தும் கடம்பா எமக்கே. 2
மரத்தை இரண்டாய் மணிவேல் தொடுத்தே மயிலாய் பிளந்தாய்
தரத்தை பிரிக்கா தருமத் தலைவா தமிழின் இறைவா
இரக்கம் அதிலே இறைவர் இணைவா இசைக்கு விரும்பி
இரவல் எனவே இருந்தோன் சிவனின் இளைய குகனே 3
பரவும் கடலில் பதமாம் கருணை பதித்தே அமர்ந்தாய்
சரமாய் வருவோர் சிரம்மேல் அருளை சரம்போல் தொடுத்தே
வரமாய் விளங்கும் வரதா விரதா வரனாய் வரிசெய்
பரவாய் குறவாய் பரிசே விதிசேர் பழியை அழித்தே. 4
கரத்தில் மலரை கனிவும் முகத்தில் சுமந்த நிலையில்
மரத்தை இருவாய் பிளந்த பிறகே திருவாய்
சுரந்த அலைவாய் கரையில் அமர்ந்து கொடியும் குடியும்
குரம்பை குடியர் குவியும் கடலில் குடிசெய் குகனே . 5
பரவை மனைக்கே பரிந்தே பணிசெய் பரமன் குமரா
பிரம்மன் மனமே திருந்த சிறையில் பிடித்த எழிலா
புரந்த வரத்தால் பிறந்த விளைவை பொடியாய் பொடித்து
கரந்த பசும்பால் எனவாம் முகங்கொள் முருகா 6
மறந்த மனதை மறவா துணைசெய் பெருமைச்
சிறந்த முருகா சிவனின் மகனே சிறுவேல் கரங்கொள்
மறங்கொள் கடம்பா மலரே முகமாய் முகையே கரும்பே
புறங்கொள் படைகள் பொடியாய் துகளாய் படுமே உனக்கே 7
திறந்த மனதால் தினமும் தொழுவார் திருவில் இருப்பாய்
அறமே வடிவாய் அகிலம் முழுதும் அமர்ந்த அருள்வாய்
திறமே தருவாய் திருவாய் வருவாய் திரைசேர் குருவே
நிறமே எழிலாய் நிமலா விரைவேல் கரமே பிடித்தே. 8
முருகா குமரா முதியா இளையா முனைவோர் முதல்வா
உருகா உளமே உளதோ உனக்கே உலகாள் தலைவா
பெருகும் உணர்வால் பெயராய் வருவாய் பொதிகை தலைவா
பருகும் பதமாய் பணியாய் வருவாய் பரமப் பொருளே. 9
வருவாய் வருவாய் வரமே வருவாய் வருங்கால் வினைகள்
எருவாய் படவே எளிதாய் வருவாய் எமயாள் முதல்வா
குருவாய் வருவாய் குகனே குமரா குணமாய் நிறைவாய்
குருவே பரமன் குருவே பரஞ்சேர் குருவே திருவே. 10
إرسال تعليق