சண்முக சட்கண்டம் - 24 - வெட்பை ரெண்டாய்

வெட்பை ரெண்டாய் கூறு செய்த வேலை பிடித்தாயே
நுட்பம் தேடும் நூலார் எண்ணும் நுண்மை தருவோனே
தட்டித் தட்டி நெஞ்சம் எங்கும் தூய்மை புரிகின்றாய்
எட்டி ஒட்டி ஓடி வந்து உள்ளம் தருகின்றாய். 1

வண்ண மஞ்ஞை மீது வந்து வன்மை தருகின்றாய்
எண்ணம் என்னும் தங்கத் தேரில் எங்கும் திரிகின்றாய்
கண்ணன் தென்னன் தேவி சொல்லக் காவல் தருகின்றாய்
வெண்ணை போல என்னை என்றும் நெய்யாய் உருக்குகிறாய். 2

பஞ்ஞை உண்ணும் தீயாய் எந்தன் பாவம் புசிக்கின்றாய்
மஞ்ஞை மீதே வேளாய் வந்து மந்தம் ஒழிக்கின்றாய்
தஞ்சம் தந்து தன்தாள் தன்னில் என்னை நிறுத்துகிறாய்
நஞ்சை உண்ட நீல கண்டன் கண்ணில் பொழிகின்றாய். 3

அப்பில் வெந்த செந்நெல் சூடும் அப்பன் வழிவந்தாய்
ஒப்பில் அன்பை தந்து என்னை ஓமில் நிறுத்துகிறாய்
தப்பித் தப்பி தேயும் என்னை தாயாய் நடத்துகிறாய்
சிப்பிக் குள்ளே முத்தை போல சுற்றி யிருக்கின்றாய். 4

நுந்தை சிந்தை தீயில் வந்து நீரில் மலருகிறாய்
விந்தை எல்லாம் விந்தை கொள்ள வாசம் வளர்கின்றாய்
சந்தம் சொல்லி பாடும் பாடல் கேட்டு மகிழ்கின்றாய்
எந்தை சிந்தை எல்லாம் நீயே என்றே பரவுகிறாய். 5

இல்லை தொல்லை என்ற வாறு இன்பம் தருகின்றாய்
முல்லை கொல்லை போல எங்கும் மாகம் வளைகின்றாய்
எல்லை இல்லா இன்பம் தந்து என்னை அசத்துகிறாய்
சொல்லை சொல்லி சொல்லாய் நின்றும் சொர்க்கம் புனைகின்றாய் . 6

கண்ணை கட்டி விட்ட வாழ்வில் காவல் வருகின்றாய்
பெண்ணை நம்பி பேயாய் போகா போகம் தருகின்றாய்
உண்ணும் உண்ணல் உள்ளே சக்தி யாக விரிகின்றாய்
மண்ணில் விண்ணல் என்று சுற்றும் மயிலில் வருகின்றாய் 7

சின்னச் சின்ன மாயம் செய்து சித்தம் வளர்க்கின்றாய்
நன்மை தீமை ரெண்டும் தந்து நித்தம் சிரிக்கின்றாய்
மென்மை வன்மை மேவச் செய்து வீரம் தருகின்றாய்
தன்னில் தன்னை காணா வண்ணம் நீயாய் விரிகின்றாய் 8

கண்டு கொண்டு வண்டாய் சுற்ற தேனாய் பொழிகின்றாய்
கண்டாய் செண்டாய் உண்டால் உள்ளம் கொள்ளும் சுவையானாய்
அண்டம் பிண்டம் ரெண்டும் தீர அண்மை தருகின்றாய்
சண்டை வந்தால் சீறும் வீரம் தந்தே செழிக்கின்றாய். 9


அன்றும் இன்றும் அன்பில் என்னை ஆண்டு அளக்கின்றாய்
தென்றல் தீண்டும் காட்டில் நின்று தெய்வம் எனவானாய்
நன்றில் நன்றாய் நன்மை தந்து நாளும் நிலையானாய்
கன்றாய் என்னை கையில் வைத்து காலம் கடக்கின்றாய். 10

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post