வரையதனில் இறையெனவே உரைபவனை மொழியதனில்
உரைப்பதுவோ எளிதிலையே உலகெடுத்து சிறுக்குவளைத்
தரைக்கழுத்தல் தகுஞ்செயலோ தமிழதுவும் புகழ்படவே
கரைபடுமோ குமரனவன் குணமதனை கவிபுனைந்தே. 1
திரைகடலும் தான்விரும்பி தினந்தொழுகும் செந்தூரான்
நிரையதனை தானடக்க நிலமதுவும் சீர்படுமோ
இரையெனவே தானடக்க இயன்றவரை அல்லதிங்கு
வரைபடமாய் வல்லமையாய் வரையறுக்க வாய்ப்புளதோ?. 2
விரைந்தெனது உளமதிலே விளங்கிடவாய் வேலவனே
கரைபடிந்த பொழுதினிலும் கவியருள்வாய் காங்கயனே
நரைபடுமுன் நிலைபொருளை நவிழ்வதற்கே வேண்டினனே
விரைந்தெனது விருத்தமதில் விளங்கிடவே வந்திடுவாய். 3
புரைதீர்ந்த நல்லதாக புவியனைத்தும் நன்மையால்
கரைதீர்ந்த கன்மமேவ கவியதனால் நன்மைசெய்
திரைசேர தீயதோட துணைபுரியும் திண்மைக்காய்
விரைந்திந்த பாவேட்டில் விரல்பதித்து திண்மைதா. 4
உரைப்பார்க்குள் உரையாய் உணர்வாய் உறைவாய்
குரைப்பார்க்கு குரைப்பாய் குணமே தருவாய்
இரைப்பார்க்கு இரைப்பாய் இதமே பொழிவாய்.
அரைப்பார்க்கு அரைப்பாய் அருளாய் நிறைவாய். 5
நெஞ்சம் நின்று நீயே தந்தாய்
வஞ்சம் நீக்கும் வன்மை வைத்தாய்
அஞ்சல் நீங்கும் அன்பை தந்தாய்
துஞ்சல் நீக்கும் தூய்மை ஆனாய். 6
கொஞ்சம் உன்னை கொஞ்சிக் கொள்வேன்
கொஞ்சம் என்னை மிஞ்சிக் கொள்வேன்
கொஞ்சம் கொஞ்சம் கெஞ்சல் கொள்வேன்
கொஞ்சும் என்னில் குற்றம் இல்லை. 7
மஞ்சள் வெய்யில் மங்கும் ஔியை
விஞ்சும் வெய்யம் வைத்து பிறகே
கொஞ்சும் காதல் காமம் பெருகின்
கொஞ்சும் என்னில் குற்றம் இலையே 8
காமன் கண்டால் காமம் கொள்ளும்
காமன் உன்னை காணப் பெற்றால்
ஏமன் வந்தும் ஏறான் என்கும்
காமம் பொங்கும் காதல் தானே. 9
தாரகமாய் நான்மொழியும் தாமரைப் பதத்தை
பூரதத்தே தானமர்த்தி பூவுலகை வலஞ்செய்
ஏரகத்தன் தானமரும் ஏறுமயில் அழகே
சீரகத்தே காவலென சீறிவரல் கடனே. 10
إرسال تعليق