அண்டமாய் விரிந்தவொன்றை அன்பினால் அளந்தபின்னே.
கண்டமாய் பிரிந்தபின்னம் கடலதால் இணைந்ததாகி
தண்டமே கரத்திலேந்தி தண்டமிழ் கவியரிவை
கொண்டதோர் பழமுமாகி குணந்தரு மருந்ததாமே..1
மண்டலம் மிகவுசிறந்து மோனமாய் முனையுமுனிக்
கண்டதோர் மருந்துமாகி காணவர் தலைவனேத்தும்
விண்ணவர் தலைவனீந்த வில்லனை புருவமுற்ற
பெண்ணினைக் கரம்பிடித்த போகனின் கடவுளாமே 2
தண்டமும் தவமும் தாங்கி தென்மலை
கொண்டதெம் முருகக் கோனை தன்மனம்
கொண்டிடும் அடியர் காவல் தந்தவன்
கொண்டதோர் மயிலும் கூட கோயிலே. 3
விண்ணவர் பணியும் வேந்தன் விரிசடை
கொண்டவர் பணியும் கந்தன் மரவுரி
கொண்டமர் தலத்தேக் கோல பதமதில்
தண்மலர் படைத்தே தோயும் பழனியே.. 4
வண்ணமயில் வருவோர்க்கும் வந்தனைகள் புரிவோர்க்கும்
விண்ணமுது தருமாமே வேண்டுவதை தருமாமே
திண்ணமுடை முனிவோர்க்கு திக்குதரு துணையாகி
எண்ணமுடை அறிவார்க்கு எண்ணியதை தருமாமே. 5
பண்ணிசையில் பழமாகி பாட்டிசைக்கும் புலவோர்க்கு
புண்ணியங்கள் பலகோடி பொன்னெனவே தருமாமே
எண்திசையில் எதிரான எண்ணமதை தடுத்தாடி
கண்ணியமாய் நலம்வாழ கண்ணனைய துணையாமே. 6
கண்ணிமைக்கும் நொடிக்குள்ளே காரியங்கள் முடித்திடுமே
தண்நிலையில் உயிர்வாழ தக்கவைகள் புரிந்திடுமே
திண்கரத்து படைவீரர் தான்பொருந்தத் துணையாகி
கண்ணசைக்கும் குறிக்கொண்ட காரியங்கள் நிறைவாமே 7
பண்மயத்த தமிழாலே பழம்புலவர் கொண்டாடும்
தண்மயத்த தகையாளும் தனிப்பழனி குன்றேறி
எண்குணத்தன் குழவான எழிலனவன் நின்றப்பின்
சண்முகத்துக் கிணையான சகலநிலை தந்தானே. 8
சண்முகத்துக் கிணையான சகலநிலை அருள்வோனை
எண்திசையில் இருந்தேகி எழுந்தருளும் திசைபாலர்
தண்டமொடு அருள்வோனை தகுந்தபடி பணிவாரே
அண்டமுதற் பொருளாகி அகிலமென விரிந்தானே 9
வெண்ணிறத்து விரலிகளால் வேண்டியவன் பதம்தொழ
விண்ணிறைந்த அமரரெலாம் வந்திறங்கி பணிசெய
பண்ணிறைந்த புலவரெலாம் பண்ணிசைக்க முழவதிர்
விண்ணிறங்கி மழைபொழிய வன்மனமும் சிலிர்த்ததே.. 10
إرسال تعليق