நுந்தைச் சிந்தை நீரில் தோன்றி
விந்தைத் தோற்றும் வேதம் ஓதி
வந்தாய் குன்றில் வாகை கூடி
எந்தாய் கந்தா ஏகன் தேசே. 1
சிந்தை நின்று சித்தம் செய்வாய்
விந்தை ஆன வித்தை செய்வாய்
மொந்தை கள்ளாய் மோனம் செய்வாய்
நுந்தைக் கேற்ற நந்தன் தானே. 2
கந்தம் வீசும் கந்தம் உன்னை
பந்தம் கொண்டு பக்தி செய்வேன்
முந்தும் நெஞ்சை முக்தி சேர்க்க
அந்தம் தன்னில் அன்பை ஈவாய். 3
தந்தம் தந்தம் தந்தம் என்று
சந்தம் சிந்தும் சப்தத் தாளம்
தந்தம் தொந்திம் தக்க திம்திம்
சந்தத் தாடும் செங்கட் சேயே. 4
விந்தம் விந்தம் வித்தில் விந்தம்
விந்தில் தோன்றா வித்தை காட்டி
வெந்தில் செந்தில் வெற்றில் காட்டி
இந்தின் கந்தம் இன்பந் தானே 5
உந்தல் உந்தல் உள்ளே உந்தல்
பந்தம் கந்தம் பற்றும் உந்தல்
நொந்தல் நீக்கும் நெஞ்சத் துந்தல்
தந்தாய் தந்தாய் தன்னைத் தானே. 6
இந்தைச் சூடி ஈற்றில் நிற்கும்
சிந்தை செல்லா சேடன் தன்னை
தந்தை என்றே தானாய் ஏற்று
எந்தை ஆனாய் ஏகன் சேயே. 7
பந்திப் பந்திப் பக்கம் நாடி
வந்தப் பின்னே வாழ்வில் சாற்றி
சிந்தை தந்து சித்தம் கூட்டி
விந்தை செய்வாய் வேலன் நீயே 8
மந்தை கூட்டம் மாயும் கூட்டம்
வந்தேன் ஆனால் வாழும் வாழ்வை
தந்தேன் கையில் தந்தை நீயும்
சொந்தங் காட்டி சேர்ப்பாய் உள்ளே.. 9
வந்து வந்து வன்மை நீங்கி
நொந்து நொந்து நோயால் மாண்டு
சிந்தி சிந்தி சீழாய் போகும்
தொந்தி வாழ்வின் தொல்லை தீராய்.. 10
إرسال تعليق