வாழ்க்கை துணைப் பற்றி இலக்கணம் விளக்குகிறார் பேராசான் வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்தின் வழி கணவனுக்கும் மனைவிக்கும் உண்டான ஒழுக்க நெறிகளை விளக்குகிறது மறை
51. மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
உரை : இல்லறம் சிறக்க தகுந்த குணங்களை உடையவளாயும் , கணவனின் வருவாயக்கு ஏற்ப இல்லறம் நடத்துபவளாயும் இருப்பவளே மனைவி.
52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
உரை : இல்லறத்தை சிறப்பாக நடத்தும் ஆளுமை இல்லாதவள் என்றால் அவ்வில்லம் எத்தனை செல்வமும் புகழும் இருந்தாலும் அது இல்லாது போகும்
53. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
உரை : குணமுள்ள மனைவி அமைந்தால் இல்லாதானுக்கும் எல்லாம் இருக்கும். அவ்வாறு அமையாத பட்சத்தில் என்ன இருந்தும் இல்லாதது போன்றதே.
54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
உரை : ஒருவன் பெற்றவற்றுள் கற்பெனும்(பண்பாடு கற்பித்தது என்பதே கற்பு) குணமாறா நல்மனைவிக்கு ஈடான செல்வம் ஏதுமில்லை.
55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
உரை : தெய்வத்தை தொழாதவளே ஆயினும் கொண்ட கணவனை தொழுது கண்விழிப்பதை கடமையாக வாழ்பவள் பெய்யென்று சொன்னால் மழை பெய்யும்.
56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
உரை: கற்ற கற்பின்படி தன்னை காத்து , தன்னை ஏற்றுக் கொண்டவனை உணவு உறவு முதலியனவற்றால் போற்றி . இல்லறம் குறித்த கடமைகளில் இருவரின் வாக்கையும் காத்தும் சோர்விலாதவள் பெண்.. என்று பெண்ணின் பெருமை செல்கிறார் வள்ளுவ பேராசான்.
57. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
உரை : தன்னை தான் கொண்ட மனத்திண்மையால் புகழால் காக்கும் பெண்ணின் காவலை விட காப்பவனின் சிறைகள் என்ன செய்யும்.
58. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
உரை : நற்குணங்களை கொண்ட கணவனை பெற்ற பெண்கள் இவ்வுலகிலும் வானுலகிலும் கணவனால் பெரும்சிறப்படைவர்.
59. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
உரை : தம் இல்லறத்திற்கு புகழை சேர்க்க விரும்பி மேற்சொன்ன அறம் செய்யும் மனைவி இல்லையேல் ஒருவனுக்கு தன்னை இகழ்ந்து பேசுவோர் முன் கம்பீரமாக நடக்கும் வாய்ப்பு இல்லை.
60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
உரை : ஒருவனுக்கு நன்மை என்பது இல்லம் ஆளும் நல்ல மனைவி அமைவதும் அதினிலும் நல்லது நற்குழந்தைகள் பெறுவது..
إرسال تعليق