பிரபஞ்சம் என்னும் மாயத்துள்
பிறந்து பிறந்து இறக்க வேண்டும்..
இன்பச்சுவடு எல்லாம் தேய
இன்பத்துள்ளே தோய வேண்டும்.
மோனக் கதவுகள் முற்றும் திறந்து
ஞானக் கனலிகள் தோன்ற வேண்டும்..
தேயும் மதியும் வளர்தல் போல
காமக் களிப்பும் நிகழ்தல் வேண்டும்..
ஓய ஓய மூழ்கிக் கடலில்
மாயச்சிப்பி தேடிட வேண்டும்.
பொழியப் பொழிய மேக மழையில்
புதியப் புதிய துளிகள் சுகிக்க வேண்டும்.
விழிகள் நூறு கண்டாலும் என்
விதங்கள் மாறா நிலைமை வேண்டும்..
யாண்டும் யாண்டும் இன்பத்தூடே
யாவிலுமே தோல்வி வேண்டும்..
பட்டுப் பட்டு திருந்திட வாவது
பலப்பல பிறவிகள் வேண்டும்.
அள்ளிக்கொண்ட போதும் நானும்
அடைபடா சுதந்திரம் வேண்டும்..
நதி வேண்டும் படகுடன் துணை வேண்டும்
துணையுடன் தமிழ் வேண்டும்
தமிழுடன் கதை வேண்டும்
கதையெனும் புனைவினில் பொய் வேண்டும்.
ரசனைகள் தீர்ந்திட நல்லதொரு பயணம் வேண்டும்..
நானும் இப்பூமியின் சாமானியனாக..
إرسال تعليق