இன்னொரு முதலிரவு..

மழலை வாயில் மெல்லுங்கோந்தாய்
சிக்கி கொள்ளும் காதல்தானும்
குழலை கலைக்கும் சுவாசக் காற்றின்
வழியே உள்புகுந்து வீசிய மென்தென்றல்
தன்னில் உன் முகம் பதிந்துவிட்டது.

மழை சொட்டிப்போன மேகத்தின் பயணம்போல்
தழைகளுக்குள் கலைகளுக்குள் வலைகளுக்குள் வாசலுக்குள்.
வாடிக்கையாய் தேடித்திரிகிறது அர்த்தமில்லா
அற்ப சிந்தனை மூடநம்பிக்கை..

தவறி விழுந்த குங்குமத்தின் நெடியவாசம்
தவறாய் உன்னிருப்பினை நினைவூட்டுவது இம்சை..
நினைவெல்லாம் அந்த நெற்றித் திலகத்தில்
அன்றிட்ட ஆசையில்லா முத்தகளே.

எங்கிருந்தோ இந்த களவாணிக் காற்று
எடுத்து வந்தசில மலர்களின் நறுமனம்..
எருக்கம் செடிச்சொட்டும் பாலாய் இதயக்கரை
எய்திய அம்பாய் நீவாராது போயின்

இந்நினைவுகள் என்னை கூர்வேலாய் தைக்கும்
உடலினையே தானமாய் தந்தினும் இதயம்
மட்டும் என்னிடம் இருக்கட்டும் இறுதிவரை.
அது நீயெனக்கு தந்தது என்பதால்

மரணத்தின் நொடி வசீகரமானது காதலைபோல
உள்ளிருக்கும் பிராணவாயு வெளியேற வெளியுட்புக.
நெரிசலிடை தகராறு மூளைச்செல்கள் ஓயும்சாதகம்
மீண்டும் ஓர்கருப்பை முயற்சி- எதிர்வினை.

வாழ்வென்பது ஒன்றே இன்னொரு மனது
வாழும்வரை அதனுள் நிறைந்திருப்பது வாழிநீ..
எனை பிரிகிறாய் என்று நினைக்கிறாய்
தனை பிரிகிறாய் எனை சேர்கிறாய்
இதுவும் ஒருவித கலவி தான்
இதுவும் இன்னொரு முதலிரவு தான்..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post