முற்றத்து அன்னங்கள் முழுமதியொளி பிம்பிக்கும் குளத்தினை பாலென்றெண்ணி பருகசெல்கின்றன..
அன்னப் பிம்பங்கண்ட பொய்கை மீன்கள்
நாரையோ கொக்கோ யெனவஞ்சி பதுங்குகின்றன..
மெல்ல மெல்ல நடைபயில்கிறது வான்வெண்ணுருண்டை..
இன்னும் இன்னும் குழப்பமோயவில்லை அன்னங்களுக்கும் மீன்களுக்கும்...
கண்சிமிட்டி அழைக்கின்றன காதலி விண்மீன்கள்.
பகற்துயில் முடித்த அல்லிகள் மலர்ந்து விருந்தாளி வண்டினை உபசரிக்க
வந்து விருந்துண்டு வாயாறப் பாடின
அகவல் மறந்து அகவற்பா விசைத்தன மயில்கள்
பனுவல் படித்து பகலைக் கழித்தன
பசலை யறியா பச்சிளம் இலைகள்..
மழலையாய் மருவின ஒண்டியிருக்கும் குருவிகள்
பழனம் தன்னில் பதுங்கத் தேடிவந்த
தவளை குதித்து புதுத்தாளம் பகரின..
மாகனும் பையவந்து காதலனாய் தழுவினான்.
கூசிட்ட அல்லிக்கொடி தேன்சிந்தின காற்றில்
மதன வதனியாய் குலுங்கிச் சினுங்கின
மரங்களாகப் போகும் மழலைச் செடிகள்.
கறவைக்கு ஏங்கின பசுக்கள் மாவென்றழைக்க
கண்டறிந்த கன்றுகள் துள்ளிவர பாலூட்டல்.
யாவுமே அற்றுபோனது அந்த மாயன்
யாதவன் இசைத்த குழலிசையால்..
Post a Comment