விழையாற் பதிகம்

கேளாய் கெடுவாழ்வில்  கெட்டிங்கு தவிக்கின்றேன்
தேளாய் கொட்டுகின்ற துன்பத்தில் தகிக்கின்றேன்
வாளாய் வெட்டியென்னு வெறுங்கூறாய் நறுக்கின்ற
நாளாய் தினந்தோறும் அழுகின்றேன் அருளாளா.. 1

ஏனோ இப்பிறவி என்றுயெல்லாம் விடுகின்றேன்
ஞானம் தந்தேற்பாய் என்றுநாளும் தொழுகின்றேன்
மானை கையிலேந்தி மங்கையோடு விடையேறி
யானை கொன்றெறிவாய் இன்றேதான் பெருமானே. 2

ஏதும் புரியாமல் பிழைசெய்தேன் அறியேனே.
பாதம் பிடித்திட்டேன் பதில்சொல்வாய் பெருமானே
ஆதி முதலந்தம் அதுநீயே எனுமாறே
நீதி முதல்தீதும் இனிநீயே நீலகண்டா..3

காதல் கொண்டுன்னை கரங்கூப்பி நினைக்கின்றேன்
போதம் என்றுன்னை புத்திக்குள் வைக்கின்றேன்
வாதம் வம்பின்றி வந்துன்னை பணிகின்றேன்
பாதம் தந்தென்றன் பற்றெல்லாம் பறிப்பாயே.4

ஊடாய் உயிரோடு உடலாகி உணர்வானாய்
காடாய் கடலானாய் கயிலைகோன் மலையானாய்
ஈடாய் தரயேதும் இலையேழை எனையும்மோர்
சீடாய் புனைவாயே சிவபரமே குருநாதா.5.

வாகாய் வழிதேடி விரைகின்ற அறிவில்லேன்
போகா வழிசென்றே பிழையெல்லாம் புரிகின்றேன்
ஆகா செயலெல்லாம் அறியாமல் செய்திட்டேன்
வேகா பிணமானேன் பெரியோனே மீட்பாயே.. 6

தானாய் துணையின்றி தனைநீக்கும் திறனில்லேன்
வானாய் விரிந்தோனே வழியொன்றை விளம்பாயோ
மானாய் புலிக்கஞ்சி மதியின்றி மடிகின்றேன்.
ஊனாய் உடனாகி உருசெய்து ஏற்பாயே..7

மண்ணே மறையோதும் முனிப்பெம்மா னருளாளா
அண்ணா மலையாகி அருகாதே விரைந்தாயோ
உண்ணா பொருளென்றே உயிரென்னை வெறுப்பாயோ
எண்ணா தெனையிங்கே எரியுள்ளே இடுவாயோ.. 8

தீயாய் திரியாகி துளிராகும் ஔியாகி
வேயா சுடரோனே வெளியாகி நிறைந்தோனே
சாயா பெருமன்பால் சரணானேன் சிரந்தாழ்த்தி
மாயா நிலையெய்தும் மதிதந்தே அருள்வாயே.. 9

வந்தேன் சரணென்றே வணங்கிட்டேன் விழைதீர்க்க
உந்தன் கழல்சேர்ந்து உருபொருளை வேண்டியே
எந்தன் பிடிதானும் எல்லாமும் போயொழிய
செந்தேன் சிரமேற சொக்கனுனை சேர்ந்தேனே.. 10..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post