சண்முக சட்கண்டம் - 16 - அருகுதான்

 அருகுதான் விரும்பி அணிகிற

~ஆணமுகன் இளைய கந்தா

அருகுதான் விரும்பி அணிகிற

~ ஆதிபரன் இளைய கந்தா

குருகுகள் விரும்பி அமர்கிற

~ குன்றினை குடிலாய் கொண்ட

குருகுகப் பெருந்தோள் மதியது

~ குன்றிட விடுவ தோநீ.. 1


திருமகள் மனதில் மகிழ்தரு

~ தேவனனின் மருக  கந்தா

திருவடி தொழுக வெனவரு

~ தமிழவள் குடியோய் கந்தா

இருடிகள் படைய நொடியினில்

~இற்றிடவே உதித்த கந்தா

மருவிலா குமரத் தனிப்பொருள்

~ முக்திதரு முதலே கந்தா 2


அருகினில் கதிராய் அருள்தரும்

~ஆதிதுணை யெனவே வந்த

முருகனின் அருளால் முகிலென 

~மேவிடும்  நிலைய துண்டே. 

கருவிய மனங்கள் கடிந்துடன்

~காய்ந்திடவே சுடராய் தீய்ந்த

திருவவள் மருகன் திகம்பரன்

~தோன்றலினை சுமந்த மஞ்ஞை. 3


உருவென உமையாள் அருவென

~உள்ளதொரு பொருளே பக்தர்

வரும்படி அழைத்தால் விருவிரு

~வென்றெதிரே வருகும் ஒன்றே

பெரும்படை தனையே பொடிபட

~புக்கியதோர் தனித்த பேரே

பெருமென உடைய பெருந்திறன்

~பெற்றதனிப் புகழ்சேர் வேலே.4


கருவிழி மகளிர் கரமதில்

~காமமதால் விழுக நேரா

திருவருள் வழங்கி திருக்குகன்

~தேசினிலே ஒருவாய் கூட

மருகிடும் மனதை மதிகொடு

~மாயவனை நெகிழ செய்யும்

பெருந்துணை உமக்கும் பணிவடு

~போற்றிடநான் புரிவ தித்தே. 5


மருவில இளையோன் மகிழ்மதி

~கொண்டவனை வணங்கித் தோயும்

மருந்தெனத் திகழும் மருந்தவன்

~மாணடியில் மகவாய் சேர

பருந்தெனப் பறந்தே பழனியில்

~ பாலகன்தன் பதத்தை நாடி

இருந்தென திடத்தே இருந்தன

~ இந்நொடியில் இருந்தேன் தானே 6


விருதென மறுமை வரும்நொடி

~ வேலதனை ஔிசெய் துத்தா

வருந்துயர் அதனில் வறுபட

~வேந்தவனே மயிலை தந்து

அருந்துயர் படுமுன் அதனடி

~ஆதியினை பொசுக்கிச் சுட்டு

இருந்தென துளத்தே இனிவரு

~தீதெலாமும் நசிய விட்டே 7


கருதிட இனிதாய் கவிநயம் 

~கூடிடுமே உனையும் எண்ண

கருத்தினில் இருத்தி கனிந்தவர்

~சிந்தனையில் விளங்கும் ஞான

செருக்கினை விலக்கி செழுமயில்

~சித்தனைத்தான் வணங்கி வாழ்வில்

உருக்கிடும் துயரம் உவர்படும்

~உள்ளமதை தருகும் வேளே. 8


கருவினில் துணையாய் குருவென

~கூடியேநீ குழைந்தாய் எந்தாய்

மருள்வரு பொழுதில் மருந்தென

~மாறியேநீ மனதில் நின்றாய்

கருமலை முருகா கடந்திடக்

~ கோடியாய்நீ வழிசெய் தென்னை

இருவினை அதனில் இடருற

~இன்றியேநீ சுடராய் வந்தே.. 9


சருகென பிரிந்தே சகலமும்

~சித்தமென்றே சரியாய் கற்று

இருமலத் ததனை இடர்பிறப் 

~பின்றியேநீ துணையாய் வந்து

தெருவதில் கிடக்கும் துகளென

~தொன்மமதை திருத்தி இன்ப

துருவமும் கொடுத்து துணையென

~தென்னவரின் இளையோன் நீவா  10





Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post