அன்பு கொண்டதின் பெருந்தன்மையை விளக்கம் செய்கிறார் வள்ளுவ பேராசான். அவ்வழி அன்பின் உயர்வும் பெருமையும் விளங்கும்..
71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
உரை : அன்புக்கும் ஒரு மறைக்கும் தடுக்கும் கதவுதான் இருக்கிறதோ. அப்படியே அவர் மறைக்க முயன்றாலும், அவர் அன்பு செய்கிற ஒருவர் துன்பபடும் போது. அன்பு செய்பவர் கண்ணீர் காட்டி விடாதோ.
72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
உரை : அன்பில்லாதவர் எல்லாம் தனக்கென்னும் சிறுமை உடையவர் காரணம் அவருடன் எவரும் பங்குகொள்ள அவரனின் அன்பின்மை தடையாயிருப்பதால், ஆனால் அன்புடையார் எப்போதும் பிறர்க்கு உரியவர் ..
இங்கு என்பு என்பதனை பல உரைகள் எலும்பு என்று சொல்கின்றன. ஆனால் எல்லா தினங்களும் என்பதை என்றும் என்பது போல் எல்லா பொழுதுகளையும் என்பும் என்று குறிப்பதனால். அன்புடையர் எப்போதும் பிறருக்கே உரியவர்.
73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
உரை: அன்போடு இணைந்த வழக்கம் என்பது இன்றியமையாத உயிர்க்கு எலும்பினை கொண்ட உடம்போடு ஆன தொடர்பு போன்றது..
பிற உரைகளில் என்பினை எலும்பு என்று குறிக்கின்றனர். ஆனால் உயிரானது என்றாவது எலும்புடம்பை விட்டு போகும் தன்மை உடையது என்கிற எண்ணம் கொண்ட வள்ளுவர் இப்படி வைக்கலாகாது என்பதை அறிவார்.
அன்பினோடு இயைந்த வழக்கம் என்பது அன்பினை பெறும் அவ்வுயிரோடு எப்போதும் இணைந்த தொடர்பு.
74. அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
உரை: அன்பினை தருகிற ஆர்வம் உள்ளது என்றால் அது நம்மிடம் எதையும் எதிர்பாரா சிறப்புடை நண்பர் என்னும் உறவினை தரும்.
75. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
உரை: உலகில் இன்பமொடு வாழ்பவர் எய்துகிற சிறப்பு என்பதே அன்போடு அமைந்த வாழ்க்கைதான்.
76. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
உரை: ஒருவன் அறத்தோடு வாழ்பதற்கு காரணம் அன்புதான் என்பார் அறியாதவர். வீரத்திற்கும் அன்பே அடித்தளம்..
இங்கு மறம் என்பது வீரம் என்று குறிப்படைகிறது ஆனால் நாம் இங்கு அறமில்லாத வாழ்வு என்று தான் கொள்ள வேண்டும். ஒன்றன் மேல் கொண்ட அளவற்ற அன்புதான் பாவத்தை கூட செய்யத்தூண்டும்.
77. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
உரை: எலும்பில்லாத புழுமுதலிய ஊர்வனைகளை வெயில் காய்த்து வருத்துவதை போல அறத்தை வருத்தும் அன்பின்மை. அதாவது அன்பில்லாமல் செய்கிற அறம் கூட வருத்தும்.
78. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
உரை: அன்பு மனதில் இல்லாத உயிர்களின் வாழ்க்கை பாலை நிலத்தில் பட்டுப்போன மரம் தளிர் விட்டது போல எவருக்கும் பயனில்லாதது..
79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
உரை: இல்லறத்தார்க்கு புறத்துறுப்பான விருந்து கடமை அறம் தானம் இதெல்லாம் என்ன பயன் தரும்? உடம்பின் அக உறுப்பான உள்ளத்தில் அன்பு இல்லாதவர்க்கு.
80. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
உரை : அன்பின் வழியாகவே உயிர் நிலைபெற்று வாழ முடியும் அது இல்லாதவர்க்கு வெறும் எலும்பை தோலால் போர்த்திய உடம்பு தானே தவிர்த்து மனம் இல்லை .
إرسال تعليق