கலித்தாழிசை

கந்தனை கருணைமிகு விந்தனை குகனை
தந்தையின் குருவாய் சிந்தனை தந்தனை
எந்தையை அருள்தரு விந்தையை வேலனை
சிந்தையில் வைத்தனை வந்தனை செய்வனை காப்பானே..

குருவென நின்ற திருமகன் எங்கள்
கருமலை  நிற்கும் முருகவேள் எம்மை
அருளொடு தாங்கும் அருட்புனல் தன்னை
அருணைக் காளாய் அருள்தரும் அறுமுகன் அவனே..

மருவில் இளையோன் மருந்தாய் உயிர்க்கு
வருகும் மயிலோன் வருவேல் துணையாய்
இருக்கும் கருணை தருகும் குமரன்
இருக்கும் இதயத்துள் இடும்பை யெனவென்று யிலையே

மயிலேர் குகனை அயில்வேல் கரனை
எயிறொன் றுடையோன்  களிறான் இளையோன்
துயில்மால் மருகன் பயில்வார்க் காசான்
பயிலும் மனதில் படரும் அவனின் தாளே.

முருகன் குமரன் முனைவேல் கரனும்
உருகும் உளத்தே உறைகும் முறையே
அருகும் அரணாய் அறுமுகன் வரவே
உருகும் உளமோ டுலகும் உணர்விணை இலையே

அலைவாய் கடலும் அடியை பணியும்
தலைவா தண்தாள் தருகும் நொடியில்
நிலையா உலகில் நிலையா தமைக்கே
நிலையாய் நிலையும் முருகா உனது நினைவே..

நாதா நயனா நடனார் தலைக்கே
ஓதா மறையின் ஒற்றை பொருளை
வேதா சூதா யாதாய் உணரவுரை
பாதா சரணம் புகுந்தார்க்கு யாண்டும் துணையே..

ஒன்றாய் அறுவாய் குன்றின் தலைமேல்
நின்றாய் நிறைவாய் குன்றா நலமும்
நன்றாம் குணமும் அன்பாய் அருளும்
தென்றல் சுமந்த கன்றே பணிந்தேன் உனையே.

பூசந் தனிலுனை பூசைக் கழைத்திடும்
நேசந் தனக்குனை நாளும் வழங்கிடும்
பாசந் தனையிங்கு பாடும் முறையினை
தேசத் தொருவர் தெரிந்துளரோ மொழிவாய் குகனே..

அகிலந் துகிலாய் அணிந்தாள் மைந்தா
அகிலந் தனையே சுமந்தோன் மருகா
அகிலம் அசையவே அசைவோன் சுடரே
அகிலத் துனைபோல் அரணாய் துணையொன் றிலையே..




إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم