வினாவுத்திரம்.. - குறட்பாக்களில்.
பாவில் கேள்வி (வினா ) கேட்டு பதில் (உத்திரம்) தருவது - வினாவுத்திரம் ஆகும்..
1) தள்ளாட்டம் தந்தைக்கேன்? திண்டோள் தருணற்கேன்?
இல்லாத கண்ணாடி யாம்.
தந்தை ஏன் தடுமாறுகிறார்? கண்ணாடி இல்லையாம்.
இளைஞன் ஏன் தள்ளாடுகிறார்?
கள் நாடி , அது இல்லையென்பதாலாம்.
- Diwakara Tanujaha
2)
மக்கள் மகிழ்வெதற்கு? மாரதி பாடெதற்கு?
இக்கு தனுசக் கவிக்கு!
மக்கள் மகிழ்வது தனுசரின் கரும்பு (இக்கு) போன்ற கவிதைக்கு;
பெருமைமிகு ரதி துன்பமடைவது (பாடு)
கரும்பு (இக்கு) வில்லோன் (தனுசு) சிவனின் கண்ணால் (அக்கு) எரிந்ததற்கு (அவிக்கு)!
- கா விசயநரசிம்மன்
3) இக்கு இருப்பதேன்? திக்கு திரிவதேன்?
சொக்கு படவே கடி..
இக்கு - கரும்பு இப்பது எதற்கென்றால் சுவையால் சொக்கப் படவே கடி.
திக்கு - திசைகள் திரிவார் (ஊர் சுற்றுவதேன்) ஏனென்றால் சொக்கும் கடி(புதிது) படவே .. சொக்கும் புதுமை துய்க்கவே..
- பவித்ரன் கலைச்செல்வன்
4)ஆனந்தம் சேர்ப்பதெது? ஆகாயம் காட்டுவதென்?
ஆணவம் ஈவதென்?மா லை.
ஆனந்தம் சேர்ப்பது - மாலை -திருமணம்
ஆகாயம் காட்டுவது - மாலை சாயங்காலம்
ஆணவம் ஈவது - மாலை . பதவியினால் வரும் மாலை.
- பவித்ரன் கலைச்செல்வன்.
5)ஊரினர் ஓடுவதென்? ஒண்டுவதென் காதலர்?
நேரிடுங் கௌவை நினைத்து.
ஊரிலுள்ளோர் ஏன் ஓடுகிறார்கள்? காதலர்கள் ஏன் பதுங்குகிறார்கள்?
கௌவை - பாம்பு, பழிச்சொல், அலர்
-Diwakara Tanujaha
6)
பழவேம்பன் ஐயுறவேன்? பாய்ந்துநாய் ஓடேன்?
குழலின் வெறிபிடித்த தால்!
வேம்பை அணிபவனான பழைமையான குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சந்தேகமுற்றது எதனால்?
கூந்தலின் (குழல்) மணம் (வெறி) பிடித்ததால்!
நாய் பாய்ந்து ஓடுவது எதனால்?
ஊதுகுழலால் வெறி பிடித்ததால்!
(இது மீயொலி ஊதுகுழல். Galton's whistle)
- கா விசயநரசிம்மன்
7)
பாண்டியன் துன்புற் றதேனக் கீரனும்
பாடுபட்ட தேன்தருமிக் கே..
பாண்டியன் சந்தேகத்தால் துன்ப பட்டதும் நக்கீரன் சிவனாற் சுடப்பட்டு பாடாய் பட்டதும் .அந்த தருமிக்காகவே..
- பவித்ரன் கலைச்செல்வன்
8) மாரன்கை ஏந்துவதென்? வாரணம் உண்பதென்?
ஊரெல்லாம் உண்பதென்? இக்கு..
மன்மதன் கையில் இருப்பது - கரும்பு
யானை உண்பது - கரும்பு
ஊரெல்லாம் திண்பது - கரும்பு.
-பவித்ரன் கலைச்செல்வன்
9) சொக்கன் சினந்ததேன்? சூரியன் சீறியதேன்?
நக்கீர நாவன்மை யால்!
சொக்கன் கோவப்பட்டது நக்கீரன் வாதத்தினால் (நாவன்மை)
சூரியன் கோவப்பட்டது (அமுதத்தை) நக்கும் ஈர நாவை உடைய (பாம்பின்) வஞ்சத்தால்!
(ஈர நா - இரண்டாகப் பிளந்த நாவினையுடைய பாம்பு = சுவர்பானு என்ற அசுரன், இவனே ராகு-கேது ஆகிறான்!)
- கா விசயநரசிம்மன்
10)
பரிதிவரை வந்ததேனோ? பாவைசூடல் ஏனோ?
அருகிலுள்ள மாலையெண்ணி யே!
சூரியன் (பரிதி) மலையை (வரை) நோக்கி வந்தது மாலைப்பொழுதை எண்ணி!
பாவையான கோதை நாச்சியார் (ஆண்டாள்) மலர் மாலையைச் சூடியது, திருமாலை எண்ணி!
-இராஜ்குமார் ஜெயபால்.
11)பொடித்ததேன் தண்டுலம்? புல்கியதென் பெண்மை?
இடித்ததால் என்றே இயம்பு.
அரிசி ஏன் தூளாயிற்று? பெண்மை ஏன் அணைத்துக் கொண்டது?
இடித்ததால்.
- Diwakara Tanujaha
12)
புத்தனாய் ஆவதெவண்? புத்தாழ்வான் ஆவதெவண்?
சத்தோங்கு மாலின்கீழ் தங்கு!
(சத்து ஓங்கும் ஆல் கீழ்... ஆல் = ஆலமரம்
சத்து ஓங்கும் மால் கீழ்... மால் = திருமால்;
சத்து = வீரியம் / உண்மை)
- கா விசயநரசிம்மன்
13)வெறுப்பதேன் செத்தபின்? துன்பமேன் பெண்ணுள் ?
கருப்பதேன்மே கம்?வாடை யால்.
பிணவாடை . வாடையில் பிரிவு. வாடைக் காற்றால் மேகம் கருக்கிறது ..
- பவித்ரன் கலைச்செல்வன்
14) விற்பதென்? விற்றால் பெறுவதென்? நேசர்தாம்
அற்பமென நீத்தலென்? பொருள்.
விற்பது - பொருள்
விற்று பெறுவது - பணமெனும் பொருள் (செல்வம்)
அடியார் அற்பம் என்று நீக்குவது - செல்வம் என்கிற பொருள்.
அடியார் அற்பமென நீத்தலில் என்ன? பொருள்.
- பவித்ரன் கலைச்செல்வன்.
15) கவிதைகள் பொங்குவதேன்? காகம் தவிப்பேன்?
அவியாத கற்பனை யால்!
(கவிதை பொங்குவது தீராத கற்பனையால்;
காகம் வருந்துவது சமைக்க இயலாத கல் பனையால்!)
- கா விசயநரசிம்மன்
16) இல்லாள் புலப்பதேன்? 'எக்சுரே' காட்டலெவண்?
நில்லாத ஊடலா லே!
(விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்!)
😊😊😊😂😂😂🙏🙏
(This is my favourite by far 😂😂)
- கா விசயநரசிம்மன்
17) மின்சாரம் பாய்வதெவண்? விண்ணிரா ஈர்ப்பதெவண்?
கொண்டதொரு மின்னூட்டத் தால்!
விண்ணிரா = விண்+இரா (இரவு வானம்)
மின்னூட்டம் = electric charge / விண்மீன் கூட்டம் ('மீன்' - மின் என நின்றது குறுக்கல்!)
- கா விசயநரசிம்மன்
18) அப்பூதியாரும் அப்பனும்!
நாவரசன் மாய்ந்ததேன்? நல்லீசர் சாய்ந்ததேன்?
பாசவிடம் கொண்டதால் பார்!
அப்பரின் பால் கொண்ட பேரன்பு மற்றும் மரியாதையால் 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகளார் தம் பிள்ளைக்கு நாவுக்கரசன் என்று பெயர் சூட்டினார்.
திருநாவுக்கரசரே அவர் வீடு தேடி வந்து, சின்ன நாவரசனோடு நான் உண்ணுவேன் என்று சொல்ல, வாழையிலை பறிக்கப் போன இடத்தில் நாகம் தீண்டி மகன் இறப்பான். திருநாவுக்கரசர் விவரம் தெரிந்து பாம்பை அழைத்து, விடத்தை முறித்து, மகனை மீண்டும் எழவைப்பார். இது கதையின் சுருக்கம். விளக்கமாப் படிங்க (திருவருட்செல்வர் படத்திலும் இக்கதை வரும்)!
எமனின் பாசம் மற்றும் பாம்பின் விடம் கொண்டதால் நாவரசன் மாண்டான் அன்று என்று பொருள்!
சிவன் உலகைக் காக்க பாசமாக விடத்தை உட்கொண்டார். உட்கொண்டதும் பார்வதி தேவி தொண்டையைப் பிடிக்க, விடம் கீழுமிறங்காது, இறைவன் வாயை மூட, வெளியேறாத ஆலகால விடத்தின் தாக்கத்தால் மூர்ச்சையானார்.
அவர் மீண்டும் கண்திறந்த நாளையே பிரதோஷம் என்று வழிபடுகிறோம்!
- இராஜ்குமார் ஜெயபால்
19) பென்சில் வரைதலெவண்? மின்சாரம் செய்வதெவண்? வைரமென் றாகும். கரி..
- பவித்ரன் கலைச்செல்வன்
20) மதுரையன் சின்னமென்? ஆழ்கடல் வாழ்வதெது?
கண்ணியர் கண்ணொத்த மீன்..
- பவித்ரன் கலைச்செல்வன்..
21) கயிலையன் ஆடையென்? ஆதிமூலன் காத்ததென்?
மண்ணிற் பெரிய கரி.
- பவித்ரன் கலைச்செல்வன்..
22) துகளலை ஆவதெவண்? துச்சரை என்றும்
இகழ்வதேன்? ஈரியல்பி னால்!
ஈரியல்பு - dual nature 😊
- கா விசயநரசிம்மன்
23) பரிபரிபரி!
கால்செல்லா நின்றதேன்? வார்கேடேன்? போர்தோற்பேன்?
கால்செலாக் கெட்டபரி யால்!
வார் - கடையும் கயிறு
கால் - நடக்கும் கால்கள், அடிப்பகுதி, காலம்
பரி - நடை, ஒழுக்கம், குதிரை!
கால் செல்லாது நின்றது காலின் நடை தளர்ந்ததால்!
கடையும் கயிறு கெட்டது மத்தின் அடிப்பகுதி ஒழுக்கம் கெட்டதால்!
போரில் தோல்வி கால்களால் செல்லும் குதிரை மாய்ந்ததால்!
- இராஜ்குமார் ஜெயபால்..
24) காதல் சுவைப்பதேன்? காலம் இனித்தலெப்போ(து)?
ஏதமில் ஆர்மோனத் தால்!
காதல் சுவைப்பது ஆர்மோன்களால் (harmones);
காலம் இனிப்பது ஏகாந்தத்தால் (ஆர்+மோனம் = பொருந்தும் ஏகாந்தம் / தனிமை)
ஏதமில் - குற்றமில்லாத (இரண்டுக்கும் பொருந்தும்!
- கா விசயநரசிம்மன்
25) எரியூட்டும் சக்தியேன்? மீக்கான் அழிவேன்?
கரிபெயர்ந்து போனதால் காண்
கரி - கனிமம், யானை
- இராஜ்குமார் ஜெபால்
26) நம்முணவு வெந்ததேன்? நம்மூர்க்கு ஆப்புயேன்?
அம்பாய்க் கரிக்கால் தணல்!
அடுப்பில் உணவு வேக அம்பைப் போன்ற தூண்டுகோலால் கரியிலிருந்து வெளிப்படும் நெருப்பு காரணம்!
ஊர்களுக்கு பேராபத்து யானைகளை விரட்ட, அவற்றின் கால்களில் எறியப்படும் வெடிகள்!
- இராஜ்குமார் ஜெயபால்
27) களிறு கலங்கியதேன்? கீழேவீழ் வானேன்?
ஒளிர்கைப் பிடிவிட்ட தால்
ஆண் யானை ஒளிபொருந்திய தன் பெண் யானை கைவிட்டத்தால் கலங்கியது!
ஒளிரும் கைப்பிடி தவறியாதால் கீழே விழுவர்!
- இராஜ்குமார் ஜெயபால்
28)சங்கரனுக் கேதுபுகழ்? மாலவனின் கையிலென்ன?
ஐங்கரனுக் கேனுருவம்? சண்முகர்க்கு ஏதுதொழில்?
தங்கப்பிள் ளைக்கமுது வார்ப்பது ஏன்சொல்லாய்?
சங்கத்தைப் பற்றியதால் சால்பு!
5 வினாக்களுக்கு ஒரே விடை:
சிவனும் சண்முகனும் தமிழ்ச்சங்கத் தலைவர்களாக இருந்தனர்!
ஐங்கரனான விநாயகன் முகம் சங்கினைப் போலுள்ளது!
திருமாலின் கையில் வாழ்வின் சுழற்சியைக் குறிக்கும் சங்கைப் பற்றியுள்ளார்!
பிள்ளைக்கு அமுது தேவை என்று உணர்த்த பிள்ளை ஊட்டிவிடும் சங்கைப் பிடித்ததால் பெற்றோர் உணணர்ந்தனராம்!
- இராஜ்குமார் ஜெயபால்
29)6 வினாக்களுக்கு ஒரே விடை:
நம்பி விதைத்ததேன்? வால்ட்டிஸ்னி சொன்னதென்ன?
கம்பிநீட்டும் மீனுண்டோ? சக்கரைக் கொள்வதெப்போ?
அம்புலி வந்ததேன்? ஆர்மரம் மாண்டதேன்?
தும்பி பறக்கும் துணை!
(1) ஏன் உழவர் நம்பி விதைத்தனர்?
(2) வால்ட் டிஸ்னி என்ன கதை சொன்னார்?
(3) தாக்குதலுக்குத் தப்பிக்கும் மீன் உண்டோ?
(4) சக்கரை எப்போது கிட்டும்?
(5) (பௌர்ணமி) நிலா வந்தது எதற்காக?
(6) பெரிய மரம் மடிந்தது ஏன்?
தும்பியின் பொருள்கள்:
(1) தட்டான்
(2) யானை
(3) கடல்மீன்
(4) கரும்பு
(5) ஆண் வண்டு
(6) கொற்றான் (இலையற்ற parasitic கொடி வகை)
(1) தட்டான்பூச்சியாகிய தும்பி நிறைய பறந்தால் மழை வரும். மழை வருவதைக் கணிக்க இன்றும் இது செம்மையான உத்தி!
எனவே, உழவர் நம்பி விதைத்தனர்!
மேலும், தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளைத் தட்டான்கள் வேட்டையாடிக் கொல்வதால், அவற்றின் துணையால் தாவரங்கள் பாதுகாப்பாக வளரும் என்று நம்பி விதைத்தனர்.
(2) Dumbo என்ற பறக்கும் யானையின் கதையைச் சொன்னார் Walt Disney.
(3) பெருங்கடல் மீன்கள் பலவும் தாக்குதலின் போது, காற்றில் எம்பிப் பறப்பது போலக் குதித்துத் தப்பிக்கின்றன.
(4) கரும்பு (தும்பி) வண்டிகளில் ஆலைகளை நோக்கிப் பறந்து சென்றால் தானே சக்கரை கிடைக்கும்!
(5) ஆண் வண்டுகள் பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் பெண்துணை தேடிப் பறந்தன.
(6) கொற்றான் என்ற ஒட்டுண்ணிக்கொடி மரத்தைத் துணையாகப் பற்றி வான்நோக்கி வளர்ந்து (பறந்து), மரங்களைக் கொன்று விடுகின்றன!
- இராஜ்குமார் ஜெயபால்
30) கற்றார்க்கு நற்றுணையென்? கல்லார்க்கு காவலென்?
மற்றார்க்கும் நன்றாம் பணிவு..
- பவித்ரன் கலைச்செல்வன்
31)
விதைக்கு பயனெதுவோ? வித்தைக்கு பேரெதுவோ?
தான்புதி தாய்முளைத் தல்..
- பவித்ரன் கலைச்செல்வன்.
Post a Comment