வாங்கலயோ வாங்கலயோ என்பதவள் குரல்சின்னம் ...
பழம்பழமா கொண்டுவந்தேன் பணங்கொடுத்து வாங்கலயோ
என்பதவள் தாரகம் ....
ஒத்தரூவா தந்தா எண்ணித்தான் தாரேன்
அஞ்சுபத்துக் கெல்லாம் அள்ளித்தான் தாரேன்
அத்தமக காத்திருப்பா ஆசையோட பாத்துருப்பா
பத்துரூவா கொடுத்துத்தான் பழம்வாங்கி போராசா.
ஆடியது கழிஞ்சாக்க ஆவணில கல்யாணம்
அள்ளித்தான் நான்தாரேன் அவளுக்கு கொடுராசா.
பள்ளிகூடம் போவனும் பட்டுனு வாங்கிக்கயா
பிள்ளையெல்லாம் தான்தேடும் வெரசாதான் வாங்கிக்கயா.
முத்துமுத்தா எழந்தபழம் விக்கத்தான் வெச்சிருக்கேன்
கொத்துகொத்தா கௌச்சமரம் கொட்டாம நான்பரிச்சேன்
கடைவீதி தெருவீதி சுத்திவந்த கிழவி
பள்ளிகூட வாசலுக்கு வந்தநிக்க.
அப்பன்தந்த காசக்கு எழந்தபழம் நான்தாரேன்
வாசனைக்கே நாவூறும் வாங்கத்தான் வாபையா.
கொத்தாதான் நான்தாரேன் கூட்டாதான் தின்னுப்பா
தப்பாம படிச்சுதான் கிழவிக்கு சொல்லுப்பா
எட்டாத மரத்துக்கு ஏழெட்டு ஆள்வெச்சி
பட்டாத பழத்தத்தான் கொண்டாந்தேன் பாரய்யா
தட்டாம வாங்கிக்க தங்கமே செல்லமே
நிக்காம நான்போறன் வைரமே வெல்லமே.
ஆத்தாட்ட கொடுத்தாக்க நெய்விட்டு வடைசெய்வா
அக்காட்ட கொடுத்தாக்க அன்பாத்தான் விளையாடுவா
தங்கச்சி தானிருந்தா தனிப்பாசம் காட்டிடுவா
தங்கய்யா செல்லய்யா வாங்கித்தான் குடுத்திடய்யா.
.....
தேயும் நாட்களில் தேய்ந்து போய்
சாம்பலெனக் கரைந்துபோனக் கிழவி
நினைவினில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறாள்..
பழத்தைபோல் சுவைமிகுந்த நினைவுகளில்..
Post a Comment