shivam - thandagam

வல்லானை வாழ்வுதரும் வீரட் டானை
   வெண்காட்டில் நின்றாடும் வெய்யோன் தன்னை
நல்லானை காலமதின் நாதன் தன்னை
   நெல்லையின் நாயகனை நம்மை ஆளும்
வில்லானை வில்லாலடி பட்ட வித்தை
   விந்தான சோதியினை வீடு தந்த
இல்லானை யாவிலுமே உள்ளான் தன்னை
   இம்மையிற் காப்பானை சென்ற டைவோம்... 1

உள்ளார உள்ளானை உலகு செய்த
  உமையானை ஊடாடும் மனத்தில் வைத்து
கள்ளாகுங் தேனானை ககன மூல
   கருவாகி காமனைதீ யால்சுட் டானை
புள்ளேகும் வேலன்தான் போற்றும் மானை
   புவியார்க்கு பூந்தாள்தான் தந்திட் டானை
அள்ளல்மேல் பூத்திட்ட அள்ளிப் போல
    அடியார்க்குள் பூத்தானை சென்று சேர்வோம்.. 2
மாலுந்தி வந்தோனும் மதனும் எண்ணா
  மாசோதி என்றாகி அடியை தாங்கி
காலுற்ற மார்கண்டன் கதையை மாற்றி
   காலாலே எத்திட்டு மறலி கொன்ற
மாலுடைக் கண்ணயைும் மலராய் கொண்ட
  மாயையின் கேள்வன்தான் மனதின் உள்ளே
பாலுறை நெய்யைப்போல் கரைந்து விட்டான்
    பாசத்தை பற்றெல்லாம் களைந்து விட்டான்... 3
 
ஆயோனோ கண்தந்து அருளக் கண்டான்
      ஆசைக்கோன் உன்கண்ணின் சுவாலை கண்டான்
தாயோடு பாகத்தாய் திசையன் என்றாய்
   தானாகி யானாகும் தனிமை சொன்னாய்
காயோடு வித்துள்ள கதையை காட்டி
    காயத்தே நின்றுள்ள கருணை காட்டி
நாயோடு கீழானேன் நமரன் என்று
   நானாகி என்னுள்ளே நிறைந்த பேரே.. 4


காற்றாகி நில்லாது கசிந்து ஆடி
  காயத்தின் ஊற்றானாய் கரையும் வாழ்வில்
நேற்றோடு என்னையும் கழித்தே ஈசா
   நெற்றிச்செந் தீயாலே நெறிசெய் தாளும்
ஊற்றாகி உள்ளத்தில் உறையும் சோதி
  ஊடாக ஆற்றும்சக் தியினை தந்து
மாற்றாக மற்றொன்றில் மயங்க வைத்து
  மாயஞ்செய் மாயம்யா தெனவே சொல்லேன் ...5


உற்றார்க்கே உற்றானாய் விறகு தாங்கி
   உற்றத்தோ ழன்போல்நீ உதவும் போது
கற்றார்தாம் கற்றென்செய் திடுவ ரோயென்
  கற்றைக்கொற் றத்தானை கரியன் தன்னை
மற்றார்க்கும் முற்பட்ட முதலோன் தன்னை
   முற்றும்தன் நெற்றிக்குள் முடிப்பான் தன்னை
வெற்றுச்சொல் முற்றுமாய் மொழியு மோஓர்
  வட்டத்துள் கட்டத்துள் வருமோ அஃதே.. 6
   

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم