சண்முக சட்கண்டம் - 19 - சரவண பவ

 சரவண பவகுக வடிவழகா 

 சடுதியில் வருகிற திருக்குமரா

அரவணை யினிலறி துயிலுடையோன்

  அரிமுக மருமக னெனுமுருகா

குரவரண் சுடுபொறி வருமறுவா

  குறமகள் மனமதி லுறைக்கடம்பா

இருடிகள் குலமழித் தருள்புரிவா

  இமையவர் புகழ்குரு வெனப்பணிந்தே..1




குணமணி யெனகுரு மணியெனவே

  குடியுயர்ந் திடகொடி பிடித்தவனே

மணமக ளெனகரி மகள்தனையே

  மணப்புரி யவேமலை பிளந்தவனே

வணபவ சரவண பவசரணே

  வினைபடு மடியவர்க் கொருமருந்தே

கணப்பொழு தினில்மலைப் பிளந்தவனே

  கடகட வெனகணை தொடுப்பவனே.. 2


அமரரை அடைத்தவன் தனையுடனே

  அறிந்துரு வெனஅரு கினிலமைத்தே

சமரரை பொடிபட வெனகளைத்தே

  சமநிலை படநிலை யருள்பவனே

குமரிள குருபர குகவடிவே

  குலகொடி யவள்கரம் பிடித்தவனே

நமனெதிர் படபிடி யிளைஞனுக்காய்

  நமனுயிர் கொளும்சிவன் திருமகனே. 3


எமதுயிர் மனமுழு தியங்கிடவே

  எழிலொடு வலிபொருந் தியதுணையே

உமதருள் பெறவரு மடியவர்க்காய்

  உளமுரு கிடபணி பவர்கடியாய்

தமதென உனைவுற வெனகொளுவார்

  தனிபட துணையென உடன்வருவாய்

கமலம லரிதழில் பிறந்தவனே

 கருணையில் கடலுரு கிடும்குகனே. 4


மலைமகள் முருகவெ னநிதமுமே

  மனமது மலர்ந்திட துதித்திடவே

அலைமகள் சுமந்திட மலர்ந்தவனே

  அனுதினம் அமரரின் நினைவினிலே

கலைமகள் வணங்கிடு இளையவனே

  கலைகளும் புகழ்ந்திட பிறந்தவனே

நிலைபெரு பிறப்பில பொருளதனை

  நினைபவர் குடன்வழங் கிடும்முருகே. 5


அருணயன் அறிவென அவர்விழிதான்

  அருளென வருசுடர் அறுமுகனே

வருமழைக் கிறையவன் தருமகளின்

  வளைகரம் வரைதனில் பிடித்தவனே

அருந்தவம் முனிபவர்க் குறங்கிடவே

  அடர்வனக் குறமகள் மணம்புரிந்தாய்

இருவினை அதனினை இலதெனவே

  இருந்தழி அடியவர் துணைப்பொருளே 6


உரகமும் துரகமும் ரதபதாதி

  உதறிட சிதறிட உறைபவனே

விரகமே வினைபடு அணங்கவர்தாம்

  விரதமே இருந்திட கருணைசெய்வாய்

மரகத வடிவனே மதிகதிரே

  முருகிள குமரனே கடம்பிறைவா

சிரகரி முதறபொருள் விரும்பிடு

  சிறுவனே சிதம்பரர் இளங்கதிரே. 7


அறுமுக வடிவனே அருளமுதம்

  அரும்பிட அடியவர் புகழ்பெறுவோய்

நறுமண மலர்நிறை குளமதிலே

 நலமுற நகுமுக சிறுவழகே

உறுதியும் உரியவா உமைமகனே

  உயர்குணத் தமிழ்மகள் புகழ்பரமே

வெறுமன புலமதில் விளைகதிரே

  வருந்தினம் பெருந்திரை பதம்பணிந்தே 8


மறந்துனை துதிப்பதை மறந்தவர்க்கும்

 மருந்தென விருந்தென விரிபவனே

திறந்திடு மனதினில் திறம்படவே

 திகம்பர நிலைதரு திருமுருகே

உறவென உனைப்பிடித் தவர்தமக்கே

  உடன்வரு துணையென வருபவனே

பறந்திடு மயிலதில் வருபவனே

  பரங்கிரி தனில்பதம் படர்ந்தவனே. 9



இறந்தவர் பொடியணி இமயவர்தன்

  இமைதிறந் தெரிகழல் தனிபிறந்தே

அறந்தரு அமரிடை சமர்புரிவோய்

  அவுணரின் படைபொடி படசுடுவோய்

புறம்புனை புதுகவி தருந்தமிழின்

  புகழ்மலர் தொடுசரம் அணிந்தருள்வாய்

குறநகர் மதுமலர் புனைபவனே

 குறிஞ்சியின் தலைமகன் குலகுருவே. 10





Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post