மாகமென மோகமதில் நானலையும்
~ மார்க்கமதை வைத்ததென்ன காரணமோ
தாகமென பூவுலகில் நானிழிய
~ தானெனவே ஆணவத்தே வைத்ததென்ன?.
பூகமழும் வாசமென சில்நாள்தான்
~ பூமியினில் நானிருக்க காவாதே
யாகமென்றும் பூசையென்றும் போனதென்ன
~ யான்வணங்கும் பாதமுடை பேரிறையே.. 1
வாழுகிற நாளிலெல்லாம் வாழாது
~வாடுகிற நெஞ்சமதை வீடெனவே
வாழுகிற நாதனவன் வாராது
~வாடுகிற என்னுயிரை காவாது
வீழுகிற நாளதிலும் வாராது
~ வேறுதிசை மேவியவன் போனதெங்கே
பாழுமிந்த பாவியென்றன் பாசமதை
~ பாராது ஊர்மேவ போனதெங்கே..2
யாரெனத்தான் நானறியேன் எங்கெங்கும்
~ யாமிருப்பேன் என்றுரைத்த ஏதிலியை
யாரெனத்தான் தேடிடுவேன் ஓதுமறை
~யாவிலுமே தேடிடுதல் ஆகாத
பேரெனத்தான் எவ்விதத்தில் தேடிடுவேன்
~பேச்சுடையோர் தாமறியா ஞானமதை
ஊரெனத்தான் ஊடிநின்ற ஒன்றினைநான்
~ உள்ளொளியை ஏற்றாது தேடுவனோ?. 3
வாரணத்தார் என்பதுவோ வரிசிலையில்
~ வீற்றிருக்கும் ஆற்றலதோ புரியலையே
காரணத்தால் காண்பதுவோ கிரிமிசையில்
~ காவலுடை தீரனதோ அதுவிலவே
சீரணத்தால் உள்ளுவதோ சிரமதனில்
~சித்தமென உள்ளதுவோ விடையிலையே
பூரணத்துள் பூரணமாம் பிரிவிலாத
~ பூரணமும் அல்லதுவும் எனவினவ 4
கொண்டதொரு கேள்வியதால் பகுத்தறிந்து
~கோலமுடை கோலனவன் மாயமதை
கண்டதொரு ஊழ்வழியே பிரித்துணர்ந்து
~காணாத காலமதில் கலந்தகதை
அண்டமென பிண்டமென விரிந்ததென
~அன்றொருநாள் கற்றபின்னே அவனருளால்
உண்டதென உள்ளுணர்ந்து உறவறிந்து
~ ஊடியுள்ள உள்பொருளை உணருகவே 5
உணருகவே உணருகவே உணர்வழிய
~உணருகவே உமிலிருப்ப துணருகவே
குணம்பெரிய பொருளதனை குறைவதின்றி
~குழைந்துமன முருகுகவே உலகமாகு
கணம்பொருத்த பொருளதனை உணருகவே
ரணம்மறுத்து நலமருளும் நமதுசொந்த
~ ரசனையாகி வளருமதை உணருகவே. 6
சொந்தமென்று வந்தவொன்றை கூடியிந்த
~சொப்பனத்தில் நிர்மலமாய் ஆடிடவே
பந்தமொன்றை வைத்துமற்ற பந்தமதை
~பற்றுவிட பற்றிநீரும் சுட்டிடவே
விந்தமாகி வித்தகமாய் வேடிக்கை
~வைத்ததொரு வித்துயெனக் கண்டவுடன்
சிந்தனையுள் சித்தமாகி சுத்தமான
~சித்தமதை பெற்றவர்தான் கோடியாமே.. 7
அந்தவழி போகவென்று அற்புதத்தின்
~ ஆதிகண்டு அன்புமிக வாகிநின்று
மந்தமதி நீங்கவென்று சங்கடங்கள்
~ மங்குவகை யாகுமென்று எண்ணமெழ
முந்துவினை தீரவென்று முத்திபெற
~மும்மைதீர மூலவினை முற்றலாக
விந்துமனம் விந்துயென வேகமுற
~வந்தயிறை எவ்வழியே போனதுவோ. 8
மங்கையரின் மார்பதனில் கார்முகிலாய்
~ மோகமெழ காமமதில் வீழ்வதுவோ
கங்கையதில் மூழ்கிவந்து காலமெலாம்
~ கண்டபடி வாழ்வினிலே ஓடுவதோ
செங்கமல பெண்ணெதிரே வைத்திட்டு
~சிற்றிடையில் சிக்கிடவோ திக்கிடவோ
எங்கிருந்தோ இவ்வகையில் ஆட்டிவிட்டால்
~என்மனமும் ஆடுவதோ பராபரமே. 9
செர்க்கமென நகரமென செத்துவினை
~ சேரவரும் பிறவியெலாம் வேண்டிலனே
தர்க்கமொடு உரைபடுத்தி வாதிடவும்
~தேற்றமின்றி சிறுமதியால் தேங்கிடவே
வர்க்கமதில் படைத்துவிட்டு விட்டதென்ன
~ வீடதனை வந்திறங்கி ஈவதின்றி
சர்க்கரத்தை சுற்றியதாய் சுற்றவைத்த
~சூட்சுமத்தின் மர்மமென்ன பேரிறையே.. 10
Post a Comment