முருக பரம்பொருள் முகையின் எழிலது முகத்து நிறைபொருள் தெளிவோடு
உருகு மடியவர் உளத்து குளமதில் உவந்து பிறந்திடும் மலையோனே
அருகு மதிநதி அரவம் அணிந்தவர் அறிவின் சுடர்வழி வருவோனே
மருகு மருகென மனது உவந்திட முனகும் அரங்கனின் மருகோனே. 1
விரும்பு வரந்தரு வரத பெருங்குண விரலி கரம்பிடித் தருள்வோனே
அரும்பு முணர்வினை அகிலப் பெரிதென அமைந்து வளர்த்திடும் நெறியாலே
விரும்பு மடியவர் வினையில் விளைபவ விநோத வகைபட வருவோனே
கரும்பு சுவையனை கனிந்த பழமென கடலும் இனத்திடும் கரைக்கோனே. 2
செருக்கை வறுபட செரிந்த மனம்புரி செயலில் வருபவ கரவேளே
இருக்கம் களைந்திட இருந்து துணைபுரி இணைய வினைபுரி வடிவாகி
சருக்கம் எனக்கெதிர் சருக்கி விழவிடை செலுத்தும் சிறப்புடை செகத்தீசா
உருக்கும் துயர்வர உனக்கு பணிந்திட உருகி கரைந்திடும் பெருங்கோனே. 3
இருக்கும் இலதெனும் இருப்பை கருத்துரும் இனியர் கருத்திடை மடிவாரே
பருக்கும் பலவினை பதுக்கும் குணமதை பிதுக்கும் இறப்பினில் துணைசேரும்
எருக்கு மலர்யணிந் தெரியும் நெருப்பினில் எழிலாய் வருவோனே எழுதாத
முருகும் எழிலுமே முதலாய் முடிந்தினி முருகில் எவருமில தெனும்பேறே. 4
கருக்கும் உடலிடை கனக மெனதிகழ் கனன்று ஔிவிட புரிவாயே
ஒருத்த கருத்தினில் ஒருமி உனைநினைந் தொலிசெய் முனிவரின் தலையாய
விருப்பம் நிறைவுற வலிமை தருங்குக விருத்தன் குருபரன் மயில்வீரா
திருத்தம் தருபவ திகழும் திகம்பரன் தெறிப்பில் உருபட வருவோனே. 5
கருத்தி லமர்ந்தெனக் குரைத்த பொருளிருக் கநிலை நிறுத்திட வரவேண்டும்
பருத்த முலைகொழுத் தமது புசித்துணல் பிறவி பிறப்பறுத் தருள்வாயே.
இருப்பை இலதென இலதை இருப்பென இயக்க முணர்த்திட வரவேண்டும்
கருப்பை முதல்வரு கணக்கை தினங்கழித்து கரும வினைசெழித்து அழியாமல். 6
பருநெல் தனையுரித் திருப்பை குழைந்திளைத் திருப்பை உணவென பரிமாறி
முருங்கை இலையோடு முளைத்த மலரோடு முனைந்த ரசமமைத் துனக்கீவேன்
பிருங்கி ஒருமுறை பிரித்து வணங்கிட பிரிவு அறுபட இணைந்தோரும்
விரும்பும் இளையவ வரதன் இளவலே விளையும் வினையற துணையோனே. 7
மருகும் மனத்தினை மகிழ மனந்தரு முருகு மனமுடை முருகோனே
அருகும் அடியவர் அமர இடந்தரும் அழகு வடிவுடை வனவீரா
பருகும் பொருளென புனையும் கவியென சுவைக்கு உரியவ இறைபாலா
நெருங்கி யுனைதினம் நினைவு மருகிட நினைந்து வழிபடும் மனம்வேண்டும். 8
இரும்பு குணத்தனை இதய மிளகவே இரக்கம் கொடுப்பவா எனக்காக
தருணம் மறந்தினி தனிமை இழந்திட துணையும் வருபவா மலைவீரா
கருணை பெருக்கினில் ககனம் குளித்திடும் கடலை மிகுத்தவா கதிர்வேலா
குருணை அரிசியும் குழைதள் விருதமும் குடிமை பெறுபவா கடம்போனே. 9
இருக்கும் இகபர இருமை நிலையிலும் இணைந்து துணைதர வரவேண்டும்
வருந்தும் வரியவர் வருத்தம் தனித்திட வரங்கள் தருபவா வடிவேலா
அருமை தவமுடை அரிய அறிஞரும் அடியை பணிந்திடும் பெருஞான
பெருமை தருந்திரு தணிகை தலைவனே புலமை பிரியனே பெருமாளே.. 10
Post a Comment