என்மனம் தான்கெட ஏதோ வினைகள்தாம்
உன்மனம் தானே உவப்பின்றிப் போனதோ
என்நிலை பாராது ஏதுன் பணியோ
இன்றுனைக் காணவில்லை யே.. 1
முன்வினை செய்வினை என்வினை என்றுநீ
சொன்னவை காரணம் சேருமோ சொல்லிடு
நின்மலர் பாதமே நித்தமும் நான்தொழ
என்னிடம் கோபமேன் சொல். 2
தென்பழனிக் கந்தனே தேன்திணை திண்பனே
துன்பமே என்னையே தீய்ப்பதை கண்டுநீ
இன்பமே கொல்வதா இத்துயர் கண்டுநான்
இன்னமும் வாழ்வதோ வீண். . 3
கன்னலாய் தென்றலாய் கைதரு வாயென
இன்னலில் உன்னைநான் இன்னமும் நம்பினேன்
என்னருள் ஈசனார் ஏரகச் செல்வனே
முன்னம்நீ வந்திடு வா. 4
வன்மைகொள் கர்மங்கள் வீழ்த்திட வந்ததே
நன்மைகொள் வேளையும் நானிலை என்றதே
என்மைகொள் என்கவே எப்போதோ தந்தபின்
இன்றுனைக் காணமே ஏன் . 5
இன்மையில் என்னுயிர் இங்கங்கு ஆடுதே
உன்மயில் வாகனம் உன்மொழி கேட்கலயோ
வன்கரத்து வேலுந்தான் விட்டேக மாட்டாதோ
தென்புறத் தாண்டவா வா. 6
தென்னவர் தந்தநல் தண்டமிழ்க் காட்படும்
தென்தமிழ் சங்கத்து தோன்றலே உன்மனம்
என்தமிழ் கேட்கவே ஏற்பிலை என்றதோ
என்னுயிர் கொண்டநீவா யிங்கு .. 7
அன்றொரு நாளதில் அன்பினுக் காளாய்
உன்னைநீ தந்ததும் உள்ளம் மறந்ததோ
என்பிழை என்னவோ ஏதானும் மன்னித்து
இன்றுநீ இங்குடன் வா. 8
மன்னவா மண்ணெலாம் முப்பொழு தாள்பவா
என்னவா கேட்டுந்தன் எண்ணமும் மாறாதோ
வன்களத்து வீரரை வென்றுநீ நின்றதால்
வன்மனம் தீரலை யோ. 9
குன்றதில் நின்றவா கும்பிடும் ஆண்டவா
தென்பொதிக் காண்டவா தண்டமும் கொண்டவா
என்விதிக் காளென என்னைநீ விட்டதால்
என்பயன் கொண்டாயோ சொல். 10
Post a Comment