யாரையான் நோவது யாரொடு போவது
போரைவெல் வேலவன் போவென விட்டபின்
யாரைநான் நோவது யாரொடு போவது
கூரைபோ லுள்ளவன்போ னதால். 1
தேரையாய் உன்கரத் துள்ளேநான் வாழ்ந்திட
வேரைநீ வெட்டியே விட்டதால் நோகிறேன்
பாரைதான் ஆள்கிற பாணியே உன்னிடம்
யாரையான் நோவதோ சொல். 2
கீரையாய் தோன்றினேன் கிள்ளியே போயினர்
வேரைநீ காவாது விட்டதால் வீணென
கோரைபுல் லாயெனை கோபமாய் விட்டதால்
யாரையான் நோவதோ சொல். 3
ஊரையான் தேடிலன் உள்ளொளி தேடிலன்
தேரையான் தேடிலன் தேயவே ஓடிலன்
தாரையாய் சிந்திலேன் தாரகம் அறிந்திலன்
யாரையான் நோவதோ சொல் 4
வாரையும் தாண்டியே வல்பகை தீர்த்தவா
பாரையும் காக்கவே போர்படை கொண்டவா
கூரையாய் நீயுள்ள கூட்டையே கொண்டபின்
யாரையான் நோவதோ சொல் 5
சாரையாய் வந்திடும் சாமளத் திங்களை
நாரையாய் பார்த்துநான் நாவினுள் பாடினேன்
ஊரையோ உன்திருக் குன்றதில் வைத்தவா
யாரையான் நோவதோ சொல். 6
தோரையாய் சீரென தோகையுள் மாமயில்
சாரையாய் நின்றுனை சாமியாய் கொண்டதே
நீரையான் ஊற்றியே நித்தமும் பூசிக்க
யாரையான் நோவதோ சொல். 7
போரையும் வென்றவா போதொடு பூசிக்கும்
ஊரையும் காப்பவா ஊடியே நின்றபின்
யாரையான் நோவது யாரொடுப் போவது
யாரையான் நோவதோ சொல். 8
காரையுள் தோன்றினாய் காமருள் கோனதாய்
நீரையே கோயிலாய் நீயமர்ந் தாக்கினாய்
வேரைநீ விட்டபின் வேறுயார் பற்றுவார்
யாரையான் நோவதோ சொல். 9
நாரைகள் கூடிடும் தாங்கலைக் கொண்டவா
பேரைகள் ஓசையில் போரையும் வென்றவா
சூரைகள் செய்தவா சூட்சமம் ஆனவா
யாரையான் நோவதோ சொல்..10.
Post a Comment