யானாடும். - the shivam


#நடராஜர்_நீராட்டு முன்னிட்டு.. 

துவக்கி வைத்த : இராஜ் குமார் ஜெயபால் அண்ணாக்கு நனி நன்றிகள்.. 

படங்கள் : பக்தி முக்தி - என்று உள்ளூர் வாட்சாப் குழு

படத்தலம் : தருமபுரி குமாரசுவாமி பேட்டை  சிவசுப்ரமணியர் ஆலயம்..   

யானாடும் ஆடல் கண்டே
 யாவுமே ஆடக் கொண்டான்
தானாடும் ஆடல் கொண்டே
  தம்மடியார் ஆடச் செய்தான்
வானாடும் மேகக் கங்கை
 வார்சடையில் சூடிக் கொண்டான்
கானாடு காத்தான் ஆடி
 கோளோடு தூளா னானே.. .. 1

உற்றானை உள்ளத் துற்று
 உலகத்து நமை கற்று
பற்றான பந்தம் விட்டு
  பல்வினையால் கட்டி சேர்த்த
 புற்றான தேகம் விட்டு
   புல்லாகி புத்தாய் நின்று
முற்றாத ஆட்டம் தன்னில்
  முற்றாகி நின்றா டியே.. 2

யானாடும் ஆடல் கண்டு
 யமக்காக வந்து நின்று
மானாடும் கையைக் காட்டி
  மதிசூடி மங்கை பங்காய்
தேனாகி சித்தம் நின்று
  திகம்பரத்தே ஆடும் தில்லை
கோனாடும் ஆடல் ஒன்றே.. 3

ஒன்றாகி முன்னே ஆடி
  ஒன்றனிலே பன்மை ஆகி
நன்றான பாவம் காட்டி
   நாதனேநீ ஆடும்  வேளை
இன்றாகி நேற்றின்  தொடர்
  இந்திரத்தின் சித்தில் சிக்கி
மன்றாடும் மாந்தர் தம்முள்
  மன்னாவுன் கன்றும் நானே.. 4

வில்லாடி வெல்லேன் உன்னை
  வித்தையா லும்வெல் வேனே ா
இல்லாமல்  ஞான சிந்தை
   இல்லாமல் ஞாதம் தேடி
செல்வேனோ  செம்மை உன்னை
 சொல்லாடி வெல்வே னோநான்
கல்லாத  ஏழை யன்றோ
  காணாயோ எம்மை  யோனே.. 5

அழுதழுதே என்னை உள்ள
 அழுக்கினையே உன்னை எண்ணி
அழுதழுதே தூய்மை செய்தேன்
   அதனுள்ளே தெப்பம் வைத்தேன்
வழுவிலாத வெய்யா நீயும்
  வந்தமர வேண்டிக் காத்தேன்
முழுநிலவாய் முற்றாய் என்றன்
  மனக்குளத்தில் நின்றாய் இன்றே.. 6

கருத்தருத்து சித்தம் திருத்து
 கருவூர்நல் லானே என்னை
உருப்படுத்து உள்ளே உன்னை
 உருக்கிவைத்து என்னை நன்றாய்
உருப்படுத்து வில்லின் அம்பாய்
 உறைமுறையை சொல்லாய் வைத்து
பெருவுலகில் என்னை எய்தி
  பொறுத்தருள்செய் என்ன வாவே.. 7

பற்றாகி பற்றும் பற்றே
பற்றாய்நீ பற்றா தென்னை
வெற்றாக விட்டால் என்செய்
 வெற்றுடலாய் நிற்கும் ஆன்மா
முற்றாத ஊழாற் றில்தான்
  முன்னையே விட்டாய் என்றால்
பற்றாது உன்னை பற்ற
பற்றதுவும் பற்றா தாமே... 8

ஆடுகின்றாய் என்னை வைத்து
 ஆடுகின்றாய் சூது ஒன்றை.
தேடுகின்ற நேரம்  என்னை
  தேடலிலே விட்டு ஆடும்
ஓடுகொண்ட உன்னை நாட
  ஓடுவதுன் ஆட்டம் என்றே
ஆடுகின்றோம் நம்மை வைத்து
   ஆடுகின்றோம் ஆட்டம் ஒன்றே.. 9

ஊழாகி ஊழன் றாடும்
  ஊழானாய் ஊழி மூலா
பாழான பற்றை தந்து
  பாழான பற்று மானாய்
யாழாகி யானாய் பாட
 யாழாகி யாவு மானாய்
வாழாத வாழ்வாய் உன்னை
வாழ்விலேயே கண்டேன் யானே.. 10.. 

  ...

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post