முருகன்

செவ்வாய் கிழமை ஆதலால்.. 

#கட்டளை_கலித்துறை

அறுமுக வேளே அரணவன் வித்தே பரம்பொருளே
குறுநகை கொண்டே குறைபல தீர்க்கும் பெருமிறையெம்
வறுமையை நீக்கி வளமைகள் சேர்க்கும் திருவருள்செய்
மறுமுறை வாழ்வில் மனம்வர மாட்டா தருள்பவனே..1

சிறுவாய் தனிலே சிவனார் செவியில் ஒருபொருளை
பெறுவா யெனவே புதிதாய் மொழிவாய் முறுவலோடு
பொறுப்பாய் அடியன் புரியா திழைக்கும் பிழைகளையே
அறுப்பாய் சிதையும் அவலச் சதையுள் உடலினையே .. 2

அடியன் எனக்கோர் அரணாய் துணையாய் வருபவனே
கடியுன் குமரா கடம்பா  சிவனார் கதிரழகே
வடிவேல் முருகா வயலூர் வரதா குகனவனே
விடிவாய் வருவாய் வினைகள் கலைவாய் அருட்கரத்தே.. 3

தடைகள் தகர்த்தே தயையால் காப்பாய் வருந்துயராம்
படைகள் எனையே படராத வண்ணம் துணையிருப்பாய்
கடையில் இணையாய் கடைசேர்த் திடுவாய் எனினுமுன்
அடைப்பில் அணைப்பில் அருளில் எனைகொண்டு வைத்தவனே.. 4

ஏரகன் வேலனெனை ஏந்திய கந்தன் சிறப்பெலாங்கொள்
தாரகன் வேந்தன் திரிபுரச் சுந்தரி மைந்தனவன்
சூரனை வென்றவன் சூற்பகை கொன்றவன் திருபழனி
சாரலில் நின்றவன் சோலையின் நாயகன் வேலவனே.. 5

அர்த்தமென வொன்றினை அப்பனுக்கு சொன்ன சுவாமிநாதன்
நர்த்தன நாயகன் நெற்றியில் வந்த சித்தனெங்கள்
தர்மத்தின் காவலன் தாரணி தோளன் வள்ளியொடு
சர்வத்தை ஆள்பவன் சக்தி மகனாம் திருமருகே.. 6

ஆறா றதையும் அளித்தே படைத்தாய் அருகிருந்து
ஆறா றதையும் அழித்து செழிப்பாய் அமரலோகம்
ஆறாய் அமைத்திட்டாய் ஆற்றுப் படுத்திட உடன்வருவாய்
ஆறாய் பிறந்த அறிவுச் சுடரே குகவடிவே.. 7

அறியா பருவத்தே அறிவாய் விழைந்தாய் முருகனேஉன்
அறிவுச் சுடரில் அடியைக் கொடுத்தாய் இறைவனேநின்
அறிவுக் கழலை அடியேன் பிடித்தேன் வழித்துணையாய்
அறிவுத் திசையில் அருளால் செலுத்த வேண்டினேனே.. 8


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post