மெட்ராஸ் குறவஞ்சி

#குறத்தி_நாட்டுவளம்_பாடல்

வடபழனி எம்மூரு வந்தவாசி எம்மூரு
அடயாறு எம்மாறு அமைந்தகரை எங்கரை
சிடபாக்கம் எம்பாக்கம் சிறுசேரி எங்கேரி
மடவாக்கம் எம்மூடு மயிலாப்பூர் எம்மதே..

எழும்பூரு எம்மூரு எக்மோரு எம்மூரு
தொழுந்தூரு எம்மூரு தொறபாக்கம் எம்மூரு
புழலேரி எம்மேரி பூண்டியுமே எம்மூரு
கழலூரு எம்மூரு கயிலாயம் எமதே..

தாம்பரம் எம்மூரு தாழையூரு எம்மூரு

மாம்பலம் எம்மூரு மவுலிவாக்கம் எம்மூரு
மேம்பாலம் கொண்ட மெரினாவும் எம்மூரு
சேம்பர்ப லகொண்ட சென்னை எமதே..


ராஜேஷ் பச்சையப்பன் #விருத்தம்


#சென்னை_குறவஞ்சி #தோழி_தலைவியிடம்_தலைவனின்_வருகையை_சொல்லல்

குலசாமி கேயிலுக்கு குறும்பாடு சோறுபோடு
மலசாமி மாரிக்குந்தான் மருவாத கொடுத்துபோடு..
நலத்தோட வாழவெக்க நறும்பூவ சேர்த்துபோடு
பலத்தோட மாமங்காரன் பந்தாவா வாரான்பாரு..

தெள்ளனம் பாடிகிட்டு தெரிஞ்சவங்க வரதபாரு
வெள்ளாடு பலநூறு வெரசாதான் வரதுபாரு
எள்ளாட்டம் கண்ணுபாரு எறும்பாட்டும் மீசபாரு
தள்ளாட்டம் இல்லாத தருமராசா வரதபாரு..

சொல்லாத சேதியெல்லாம் சொகமாத்தான் சொல்லப்போரான்
இல்லாத வார்த்தையத்தான் இசையாக உளறப்போரான்
பொல்லாத போதவந்து பொசுக்குனு சாயப்போரான்
கொல்லாம கொல்லப்போற கொஞ்சமாச்சும் விட்டுவை..

மரமாடி  மலர்தூவ மயிலாடி மழைதூற
அரசனாட்டாம் வாரான்டி அசந்துபோக போறான்டி
சரசமெல்லாம் கேட்கபோறான் சத்தமுத்தம் வாங்கபோறான்
அரசமர ஆணவிட்டு அவனசுத்த போறநீயே..

உனக்காக வாரான்டி உசுராக வாரான்டி
மனசத்தான் தாரான்டி மருவாத தாரான்டி
சினங்காட்டி தொலயாத சீமதொற வாரான்டி
மனங்காட்டி தொலயாத மானமது முக்கியன்டி

படங்காட்ட போறான் பயங்காட்ட போறான்டி
வடமாட்டம் வலையாத வசமாகி தொலயாத
நடமாட்டம் இல்லாத நெலந்தேடி போகாத
சடமாட்டம் ஆடாத விடமாட்டான் உன்னத்தானே.


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post