தீர்த்தமலைப் பதிகம்

சேர்ந்துயென் நெஞ்சத்துள் சோதியன் ஆகினன்

ஆர்ந்தநன் ஞானத்தை அள்ளியுள் வைத்தனன்

தேர்ந்தநற் சிந்தையில் தேனென ஊறினன்

தீர்த்தங்கள் சூழ்கோயிற் தீர்த்தம லையனே 1


சார்ந்தவர் தம்முள்ளே சாந்துணை ஆனவன்

பார்மிசை ஆள்வான்தம் பாதமும் நல்குவன்

ஏர்மிசை மேவும்தொல் வேள்குடிக் காளவன்

தீர்த்தமும் சூமும்நல் தூமலை ஆண்டவன் 2


கார்மிசை மேகத்து கருநதி வாங்கியே

பார்மிசை யோர்குன்றுப் பனைதனில் தாங்கியே

ஊர்மிசை ஊற்றென உருசெயும் நாயக

தீர்த்தகி ரித்தெய்வ மதைதினம் போற்றுமே 3


வார்கடல் வாங்கியவ் வானதில் வைத்தவன்

சீர்முகில் ஊற்றியச் சீதளம் வைத்தவன்

தீர்த்தமும் ஆக்கியே பூதளம் தன்னிலே

தீர்த்தம லையென தேக்கிட வைத்தனே 4


யார்மிசை யான்படும் யாவுமே சொல்வனோ

யார்பதம் யான்நிதம் யாசகம் கேட்பனோ

யார்துணை யாய்வர யான்தினம் கேட்பனோ

தீர்த்தம லையென தோன்றிநின் றானதே 5


வேர்விடு தொல்வினை வளர்கிற நேரமே

தூர்எடு நன்கொடு துணையவன் ஆகவே

தேர்படு சிற்றிலை தொலைதலைப் போலுமே

தீர்த்தமே ஆடினார் திளைத்தனர் ஆகவே6


கோர்த்தநல் மாலையும் கோமகன் தாளையும்

பார்த்தநம் கண்களும் பார்வையும் வென்றிடும்

பேர்த்தெழும் ஞானமும் பேரிளஞ் சித்தமும்

தீர்த்தமாய் தந்தனன் தீர்த்தம லையனே 7


தீர்த்தனன் தீவினை தீர்த்தனன் தீயதை

கோர்த்தனன் நல்வழி கோர்த்தனன் கொங்கையோன்

சேர்ந்தநல் லாளொடு சேவகர் தூய்பட

தீர்த்தமும் ஆகினன் தீவினை மாயவே 8


பார்த்தனன் கைக்கொரு பாசுபதம் தந்தனன்

தார்படுத் தோளனை தாயினுந்தென் விந்தனை

யார்எடுப் பாரெனை யாவிலுமோர் கந்தெனத்

தீர்த்தநீ ராடினர் தீர்ப்பினை மாற்றியே 9


கூர்த்தநற் சிந்தனை கூடிட கைதரு

தேர்ந்தவிஞ் ஞானனை தேவமெய் ஞானனை

வார்த்தையில் லாதனை வாழ்த்திநாம் வாழ்வதால்

தீர்த்தமும் ஆடிலாம் தீவினை நீங்கவே 10



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post