அரவொடு மதியும்

பலநாள்  ஆச்சு பரமனை பாடி 

அரவொடு மதியும் அணிந்தநம் சடையன்
இரவொடு பகலும் இருமையும் உடையன்
சிரத்தொடு பணிவார் சிறப்பினுக் கடியன்
உரமொடு உயிரும் உருவதும் அவனே 1

வரமொடு சாபம் வகையறி பெரியன்
நிரந்தர மெய்யன் நிலைபெறு மதியன்
புரங்களை வேய்த்த புதுநகை அழகன்
கரங்களை சேர்த்தே கயிலையில் புகுவோம்2

அழிவினைக் கூட அருள்கிற இமயன்
இழிவினை மீற இகத்துணைப் பரமன்
கழிவினை நீக்கி கருணையில் நனைத்து
மொழியினை கேட்டு மகிழ்கிற மறையன் 3

புகழ்பல சேரும் பெரும்பொறை இறைவன்
இகழ்பவர் தாமும் இயங்கிட அருள்வன்
அகழ்பவர் ஆழம் அறிந்திட அறியன்
நிகழ்பவை யாவும் நிகழ்த்திடும் நெறியன் 4

கருணையோர் வாரி கடந்திட அறியன்
பொருநையின் கேள்வன் பொழில்மிகு ஔியன்
அருணையின் சோதி அடியவர் அரசன்
இருமையின் ஆதி இருத்தலின் தலைவன். 5

ஒருமுறை பாடி ஔியடை பலருள்
திருமுறை பாடி திகழ்பவர் பலருள்
வருங்கவி பாடி வருபவர் பலருள்
ஒருவனாய் கூடி ஔிர்பவன் சிவனே 6

எழில்மிகு ஈசன் எமதுயிர் நேசன்
செழுமையில் கூடி சருகிலும் வாழ்வன்
பொழில்மிகு தஞ்சை புகலிடம் கொண்டு
இழிவுடை நெஞ்சில் இருந்திட வேண்டும் 7

தடைபல வருமென தனித்துணை எனதிறை
படைபல வருகையில் பெருந்துணை சிவனடி
கடைநொடு வருகையில் கரந்தரு மெனதுயிர்
உடையவன் உரியவன் உமையவன் ஒருவனே 8

இனியொரு காதல் மளிர்வதும் உண்டோ
முனிமுதற் சித்தன் மனமுறை வேளை
இனியெவர் என்னை இழுத்திடல் ஆமோ
கனிமனத் தீசன் கவர்ந்ததன் பின்னே 9

உமியென சூழ்ந்து உயிர்தரும் ஆதி
இமையென காத்து இருளறு சோதி
அமிழ்தமாய் ஆகி அருள்கிற வேதி
தமிழ்தர போதும் தனைதரும் ஈசே 10

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post