கிராமத்து காதல்

அத்தமக நெஞ்சக்குள்ள அணுவணூவா புகுந்துபுட்டா
அடிகரும்பா கள்ளியிவ அடிமனசில் இனிச்சுபுட்டா.
அணுவெல்லாம் கணுவாச்சு கணுவெல்லாம் கரும்பாச்சு.
கருவாயன் பேச்சாக கள்ளிமனம் இரும்பாச்சு.

கண்ணவெச்சி தாக்கிபுட்டா ரத்தமேதும் சிந்தலயே
பஞ்சாயத்து ஒத்துக்குமோ பாதகத்தி செய்கையத்தான்.
பஞ்சுகுள்ள கங்கப்போல பத்தவெச்சி போனததான்.

பசுமேல சத்தியமா படுபாவி அந்தபுள்ள
கண்ணால எம்மனச கலப்பேரா உழுதுபோட்டா.
கள்ளிவெத வெச்சிபுட்டா களைபோல முளைச்சுபுட்டா.

முன்னமட்டும் முள்ளவெச்சி முளப்பாரி உள்ளவெச்சா
முள்ளென்ன வேலியாடி வேலிதாண்டா கொடியாடி.
கள்ளுறும் பாறையோடி கன்னிவொம் பார்வையுந்தான்.

கடலக்காய் பாசக்காரி வெங்காய மோசக்காரி
வெடலபுள்ள வெள்ளரிக்கா நடுச்சாம அவரக்கா
வெத்தலையா செவந்தபுள்ள வெவகாரம் பண்ணிப்புட்டா.
விடியாத மூஞ்சனத்தான் சூரியனா மாத்திப்புட்டா.

வெரசாதான் பத்திக்கிட்டேன் தண்ணீரா அணைச்சுக்கடி
கிழக்கால பாத்திக்கட்டி நெல்லுசோறு போட்டுடலாம்.
வௌங்காத வௌக்கணச்சு வெடிகாலம் வெட்கபடலாம்.

தாகத்துல நாவிருக்க தண்ணீரா வந்துக்கடி
தடுமாறும் நேரத்துல தடியாத்தான் தாங்கிக்கடி
தழும்பாக காலமெல்லாம் தளிர்மேனி ஒட்டிருப்பேன்

விழுதான புள்ளைங்க விட்டுட்டு போயிடத்தான்
பழுதான தேகமொடு கனியாத பேரப்புள்ள
வந்தாலும் என்காதல் மாறாதடி மரவள்ளி

நொந்தாலும் வீரன்டி விடமாட்டேன் உன்னயுமே.
வயசிருக்கு வருசமெல்லாம் நமக்கிருக்கு கிறுக்கேற
வயகாட்டு வௌச்சலா வெரசாநீ வந்துசேரு...




Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post