நற்றொரு சந்தன மரபுறம் தரித்து
உள்ளொர் எண்ணிக்கையில் நரம்புகள் செரித்து
நல்லோர் விரல் மேவிசைக்க காத்து
நற்றொரு யாழினை வீண் செய்வாயோ...
நாததலைவனே சொல்
நான் வீண்பழி சுமக்க காரணம் சொல்..
மாததிங்கள் கழிந்திட
மனதின் திசை செல்லாது வீணாகுதே சொல்...
திறமற்று கிடந்தாலும் இன்பம் மிஞ்சும்
திறமுற்று படைத்து தொலைத்தாய் - பிஞ்ஞனே
திறங்கொண்ட என் அறிவாற்றலை கொண்டு
திசைபரந்த ஞாலம் நன்மை பெறுதல் எப்போது...
நின்னை சரணடைந்தேன் நாயேன் நான்
நின்காலடி திசையில் நன்றியோடு கிடப்பேன்...
நின்செயல் செய்யாது நின்சொல் செயல் செய்வேன்...
நின்னை சரணடைந்தேன் ஈசனே மாதொரு பாகனே..
ஆசைகள் உண்டு அகில உயிர்களுக்கு
பூசைகள் உண்டு அவை உள்ளவரை என்
தசைகள் உண்ட சிற்றுயிர்களும் தமிழ் பாட வேண்டும்
வசைகள் பொழிவோரும் என்னிறப்பை கண்ணீர் சிந்த வேண்டும்.
பரமனே நற்றறிவை வேண்டினேன் நானிங்கு
பாருலகின் ஞானமெல்லாம் உய்ய வேண்டினேன் நீயிங்கு
பாரபட்சமின்றி அருள்வாய் என்பதை நம்பி வந்தேன்...
பரமனே பற்றிலாது பாசங்கொண்டு அருள்வாய்...
அஞ்ஞானம் தனை அகற்றி உன்சோதியால்
நஞ்ஞானம் தனை புகுத்தி நற்சேதியால்
உஞ்ஞானம் தனை செருகி நற்தேதியால்
எஞ்ஞானம் தனை மெருகிட செய்வாய்...
Post a Comment