வேலன்பால் வெண்பா.

தமிழ்காப்பு :
சேயென் செயல்பல வெல்ல வருள்வாயே
தாயுந்தன் சொல்தந்து நல்லன்பும் தான்தந்து
ஆயப் பொருள்நயத்தில் வேலற் புகழ்பாட
நேயத் தமிழெனக்கு காப்பு.

கணபதியை வேண்டல் :
ஆணை முகத்தோடு காணாற் தலைவனாய்
பானை வயிற்றொடு பண்டம் விரும்பிடும்
ஞானத் தலைவனை முந்தி வணங்கியே
முற்றும் சிறந்திட வேண்டு.

ஈசனருள் பெறல் :
தேசுடை சோதியே தேவரின் நாயகனே
மாசில் பெருமையே மாவிரு ளும்நீயே
ஆசி லறிஞனே நின்னரும் பிள்ளையின்
பேறினை பாட வருள்..

1) ஆவினன் குடி:
வானார் படைக்குமே  வான்புகழ் தந்திட்டு
வானார் தலைமகள் வானையை சேர்ந்திட்டு
தேனார் திணையவர் தேவியை பெற்றிட்ட
கோனார் தலைவன்தாள் போற்று.

2) விளையாட்டு :
கவ்வை யமர்ந்தாய் கடம்பா வழிவந்த
ஔவைக் கருளிட அன்பிற் சிறந்தோனே
நாவால் தமிழ்செய்ய நாவல் கொடுத்திட்டு
பாவால் புகழ்தந்த சித்து.

3) செந்தூர் புகழ்.:

போரெனத் தோள்விரித்து போர்வீரங் காட்டிட
வீறெ னெழுந்திட வீர ரழிந்திட
பாரென சாட்சிக்கு பார்த்த கடல்பாடுஞ்
சீரென நின்றசெந்தூர் காண்.

4) பரங்குன்றப் பேறு:

பரமனின் பிள்ளை பரங்குன் றமர்ந்து
புரந்திட கேட்டிடும் பக்தர்க்கு நன்மை
புரிந்திடும் வேல னெதிரார்க் கருணை
புரிந்திடுவான் குன்றத்தில் வீற்று

5) பழனி :
சீருள் முருகனும் சீற்றத்தால் ஆண்டியென
ஓருடை யுற்றிட ஒவ்வா பெருநோய்க்கு
பேருடை நல்மருந்தாய் நின்றதோர் குன்றது
பாருள் பழனி மலை..

6)தணிகைப் பேறு:
வெம்மயிற் தோன்றி பதுமனைக் கூறாக்கி
அம்மயில் மேலமர்ந்து வீறுதணிப் பேறுடை
அத்தலமே சென்றிட நூறுபகை தூளாகும்
அத்தலப் பேர்தணி கை.

7) சுவாமிமலை தலம்:
அயனை பொருள்கேட் டருஞ்சொல் மறைச்சொல்
அயனின் படைத்தொழிலிற் கச்சா மொருசொல்
நயமாய் பரமனுக்கு மாசானாய் ஆன
வியனே சுவாமி மலை.

8) பக்தர்க்கு வருதல்:
ககனக் கயிலை கடந்து கடம்பன்
குகனா யடியார்க்காய் குன்றமர்ந்த கந்தன்
அகத்துறை அன்பிற் ககப்பட்ட வேலன்
பகட்டின் றருள்வானே வந்து

9) பதுமையை வென்றல்.:
அணையாத  சோதியனை அப்பனெக் கொண்டு
இணையாய் குறமகள் வள்ளியை ஏற்க
துணையாய் கணபதியை யானையாய்     கொண்டு  
திணையவர்த் தேவியை வென்று

10) தமிழ்மொழி வளர்த்தல் :
கயற்கொடியோன் தன்சபையில் கற்றோர்க்கு கல்வி
அயன்முதலோன் தன்மருக னுற்றார்க் குணர்வாய்
அகத்தியர் செய்த யிலக்கணநூ லீசர்
நிகழ்த்தி யரங்கேற்றங் காண்.

11) தமிழ்க்கடவுளாதல் :

அப்பன் வடஞ்செல்ல அம்மை யுடஞ்செல்ல
சுப்பன் குமரனாய் தன்னை தமிழுக்கு
தெப்ப னிளவல் தமிழென்று ஆனதால்
ஒப்ப னொருவனு மில்.

தெப்பன் - தெப்பகுளமெங்கும் உறையும் கணபதி..

12) தமிழரைக் காத்தல் :

சேனுயர் சோலையோன் சேவற் கொடியோடு
ஏனு மயில்மேல்ப் புலவ ரருணகிரி
ஊனுரு பாடலால் துன்புற் றமிழர்தம்
வானுயர் கோயிலாம் பத்து

13) கீரனார்க் கருளல் :

பாட்டுப் பொருள்கேட்டு ஆற்று படச்செய்த
பாட்டுப் படைவீரர் கீரர்க் கருளுரு
காட்டிப் புகழளித்த கந்த குருவிற்கு
பாட்டிற் புனைந்த படை.

14) பாலதேவராயர்க்கு அருளல் :

திக்கிடும் தன்குரலால் சொக்கிடும் பாப்புனைந்து
ஒக்கும் மனிதர்க்கே ஓர்மம் பயிற்சித்த
பால னரணமதைப் பாடிடக் கேட்டுநம்
வேலவன் தந்தது காப்பு.

அரணம் - கவசம். (கந்தசஷ்டி கவசம்)

15) அருணகிரிக்கு அருளல் :

அருணம் பிறந்து அறம்பிறழ்ந்த நேசர்
அருணத்து ஆலய வாயிலில் வீழ
அருகிருந்து காத்த அறுமுகன் வேண்ட
அருணகிரி தந்த புகழ்.

16) போகரின் தொண்டு:.

பண்டுதனை கண்டதமிழ் விண்டுதற் கண்டிட
அண்ட மறிந்த அறிஞர்கள் சித்தர்கள்
தொண்டு புரிய கொடுவிட நஞ்சினைக்
கொண்டு புனைந்த மருந்து

17) நவமருந்து:
பிண்டத்து ஒன்பும் பிறந்தார்க்கு பத்தாென்றும்
அண்டத்து ஒன்பும் அகிலத்து ஐம்பூதங்
கண்டு தெளிந்து கருமம் புரிந்திட
எண்பதும் ஒன்ற நவம்.

உடலின் ஒன்பது துளையும்  . பதினொரு வாயுவும் . அண்டமாகிய நவகோள்களும் அகிலத்தில் உறைகின்ற ஐந்துபூதமும் கண்டு தெளிந்து தேவயை புரிந்து 11 ஆயிர மூலிகைகளை எண்பது கலவையாக்கி அவற்றை ஒன்பதாக செய்ததே நவபாடாணம்..

18) அகத்துள் வேலன் :

அலைந்தோடி குன்றேறி கண்டோர் தமக்கும்
மலைதேடி தாள்சேர்ந்த மாந்தர் தமக்கும்
அகத்து ளுறையும் சுழுமுனை தன்னை
அகமெனக் கொண்டா னவன்.

19) வேண்ட பலித்தல்.:

ஆயிரமா யன்பர்கள் ஆலயத்தை நாடிடுவர்
பாயிரமாம் பல்நூறு பக்தியொடு பாடிடுவர்
தோள்தன்னில் காவடித் தாங்கி வருவரே
நாள்தன்னில் பாரி லிருந்து.

20) இருப்பிடம் :.
குன்றுள் ளிடமனைத்தும் கந்தனவ னுள்ளானே
நின்றுள் ளகத்துள் பயத்தைக் களைவானே
நெஞ்சுள் நிறைந்து கதியை தருவானே
மஞ்சள் உமையாள் மகன்.

21)வாழ்த்து.
இனிதெனக் கேட்ட யிளவலும் வாழ்க
கனியெனக் கேட்ட குமரனும் வாழ்க
முனித்தவர் தம்முள் முயற்சியாய் வாழ்க
இனித்தெம்முள் ளேயிருக்க வாழ்த்து .

22) போற்று :
ஆதியிற் வந்திட்ட ஆறுமுக னாரென்று
சோதியிற் வந்த குமரன் தனையுமே
நாடினார்க்கு வெற்றியும் நன்மையும் தந்தானே
பாடித் தினமுமே போற்று.

23) பதுமனை வென்றல். :

அயனிடம் வேண்டி அதர்மம் புரிந்த
மயனின் மருகன் மறங்காட்ட வென்று
மயிலொரு பக்கமாய் சேவற் கொடியும்
எயிலென நின்றசெந் தில்.

24) இடும்பனை வென்றல் :
இடும்பெனில் நின்னை நினைத்திடப் போதும்
இடுபனை வென்ற இடும்பா யுதனாய்
கொடும்பிணி நீக்கி குடியினை காப்பாய்
தொடும்வினை யெல்லாம் ஒழி.

25) வருணம்கொண்டு உயிர்காத்தல்..:

தேவர் படைதலை தானுமே பானுகோபன்
ஏவலிட்ட பானத்தால் நீரில்லா மக்களை
தேவர் தலையோன் தனதா யுதபானம்
ஏவப் பொழிந்த மழை ..

26) நாகத்தை வெல்லல் :

அன்றொரு காலத் தமிர்தம் கடையவே
குன்றினை மத்தாய் வடமான நாகத்தை
வென்றதன் கர்வமதை வென்ற குருபரன்
நின்றுயிர்க் காப்பான் நமை.
.

27) போர்புரிதல்.:

வீர முணர்த்திட வீரவே லேந்தியே
சூரக் களமதில் சூழ்பகை தானழித்தே
ஈரக் கருணையும் ஈசற் கிணையெனத்
தேரத் தருவோனைப் போற்று.

28)தாள் பணிதல்.:

தாயினுக்குச் செல்வன் தமிழிற் கிறைவனனே
சேயெனக் காத்திட சேர்ந்தெம்முள் வாழ்வான்
திருவிளை யாடல் புரிந்து சிரிக்கும்
குருபரன்  தாளினை சேர்.

29) காதல் கரம்பிடித்தல் :.

வேழனை வேண்டிக் குறமகள் தன்னையும்
வேழம் துறத்திடச் செய்து குமரன்
கிழவனாய் வந்துறத்தும் வேழமிடம் காத்து
கிழவனாய் வள்ளிக்கைக் கோர்த்து.

30) முருகம்
ஞால முளவும் யிளமையும் மாறானை
கால முளவும் முதுமைப் பெறானவன்
ஆலம் விழுங்கிய  ஈசனாரின் பிள்ளையே
காலனையும் விஞ்சினான் வென்று.

31) ஏற்றல் விண்ணப்பம்
அறுவரெனத் தோன்றி அறுவாய் வளர்ந்து
அறுவிரு நோக்கும் அறுவிரு தாளும்
உறுவினை நீக்கு  முருவினைக் காட்டி
மறுமையின்றி செய்யுமெனை ஏற்று.

32)வேலன் கருணை
கந்தன் கடம்பன் கதிர்வேல் முருகனே
செந்தில் குமரன் திருமால் மருகனே
எந்தை யிறைவன் கருணைக்கு அண்டமே
நிந்தைசெய் தும்தருவான் வாழ்வு.

33)வினைநீக்க வேண்டல்:.

விந்தை மிகுந்துள வித்தக வேலனே
சிந்தை துளிர்திடும் சித்தன் குருபரனே
கந்தை யுடுத்தும் கதிர்காமக்  கந்தனே
முந்தை  வினைமுழுதும் நீக்கு.

34) வேண்டுதல் :.
அகத்துள் ளுயிராய் புறத்துள் பொருளாய்
நிகழ்த்து மிறையாய் நிமலன் குருவாய்
அகத்துள் ளிருந்து அறத்தினைக் காக்க
குகனையே வேண்டிப் பணிந்து.
.

35)சரண்புகல் :.

மாதவம் செய்யேன் மகத்துவம் காண்கிலேன்
ஆதவன் போலென் னகத்தி  லுறைந்துள்நல்
ஞானமும் நல்கிடும் ஞானவேலா ஞானமே
ஆனதோர் சித்தாச் சரண்.

36)
கண்ணிற் கனன்றிட வந்தக் கதிர்வேலே
பெண்டிர் விரும்பிடும் பேரிளங் கந்தனே
தண்டினை யேந்திய தண்டா யுதபாணி
எண்ணில் மறத்தின் தலை.

37) அருள் வேண்டல்:.
பொய்கைப் பிறந்த மலரது தாங்கிய
வெய்யுறைச் சோதியே விண்ணார் தலைவனே
ஓதியர் பாடிட வேதிய ரேத்திடும்
சோதியே செல்வ மருள்

38)
மாண்புறை நல்லறமும் மாந்தருள் நற்புகழும்
யாண்டும் பெரும்பேறும் யாமுள் ளொளிபட
காண்பவர் கண்ணில் களிப்பு முவப்பொடு
ஆண்டுகள் பல்வா யருள்.

39)
குன்றில் குடியுள் குறமகள் கேள்வனாம்
குன்றா கருணை தருகும் குமரனாம்
நன்றால் நமையும் நிறைப்பான் அவனுமே
நின்றாடுங் கோயிலைக் காண் .

40)
கொடுஞ்செயல் செய்யும் அசுரரை வீழ்த்தி
கடுங்கோபம் நீங்கிட காத்திருந்த கோயில்
நெடுங்கடல் தானும் நொடிபிரி யாதாள்
தொடுங்கோயில் செந்தூரே பார்

41)
குருபரன் உன்னை குருவெனக் கொண்டால்
திருமகள் தந்து உமையவள் காத்து
உருத்திரன் வாழ்த்திட தேவர்கள் போற்ற
இருக்குமோ யேதும் குறை .

42)
விரும்பியே நாடினேன் வேலனைச் சேரக்
கரும்பின் யினிதாம் கடம்பன் கருணை
திரும்ப துணியேன் திருமுருக வேலை
அரும்பும் இனிய மனது.

43)
களத்தினில் சக்திக் கருணையில் ஈசன்
உளத்தினில் கந்த னுவந்திடும் நேசன்
வளத்தினில் குன்றா விளைவினன் சுப்பன்
உளத்தே யிருப்பான் உயர்ந்து.

44)
செங்கல்வ ராயன்  குறிஞ்சினுக் காண்டவன்
அங்கா ரகனின் தமையன் புவியுயர்
செந்தில்நா தன்செவ்வேல் கந்தன் குறைவிலா
சிந்திசை நேசனைக் காண்

45)
வெள்ளா டெனவந்த தீயனை வென்றுபின்
வெள்ளாட் டினைதன் விருப்பமுள் வாகனமாய்
துள்ளாட் டமாய்திரி யும்கரகு வேலரே
உள்ளார்ந்த அன்பினுக்கு காப்பு.

46)
விழுங்கிய தீயனை வேரொடு வீழ்த்தி
மழுவினை ஏந்தி யெமனையும் வென்று
கழுகினத் தோனைக் களைந்தறுத்த வேலா
விழுந்தேன்யான் நின்தாள் பணிந்து.

47)
சேனுயர் சோலையாம் சேரனின் தேசத்தே
வானுயர் கோயிலினை கொண்டுதமிழ் காத்திடும்
காத்தவ ராயனே கார்த்திகை மைந்தனே
சாத்தானை வென்றா யழித்து.

48)
தமிழுறை சிங்கை யதனிலே தன்னின்
தமிழர்க்கு காவலாய் சீலனாய் நின்றாய்
தமிழரை தொல்லைசெய் தீயரை வென்றத்
தமிழின் தனிப்பெருந்தெய் வம்.

49)
காவடி யோடுனை காண வருவோரை
சேவடி தன்னையே சேர வருவோரை
தேவராய் காத்துபின் தோழனாய் என்றுமே
காவலும் செய்தாயே நின்று

50)
வேலுடை வேந்தனே  தேவசேனை கேள்வனே
வேலுடை தண்டபாணித் தெய்வமே செந்திலே
தோளுயர் தொன்மக் கொறவனே தோகைபுள்ளும்
வாளுடை வன்போர்த் தலை.

நூற்பயன் :

கற்றிடக் கேட்டிட காதலு முற்றிட
கந்தனாய் நின்றவன் தன்னின் வரலாற்றை
கானமாய் கீதமாய் பாடுவோர் தம்முள்ளே
தீனமாய் நிற்குமிப் பா

இப்பா விரும்பியே பாடுவார் தாமுமே
ஒப்பா ரொருவரு மில்லா நிலையுமே
தப்பா தருள்வானே தண்டா யுதனுமே
அப்பா வெனநீர் வணங்கு

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post