கட்டியகாரன்:
அமருங்க அமருங்க அமரரே அன்பரே
அமருங்க அமருங்க தேவரே வேந்தரே
அமருங்க அமருங்க மக்களே மகான்களே..
தடம்பிடித்து இடம்பிடித்து அமரனும் அமரனும்
அர்ஜீனர காட்டுவோம் அய்யோத்தியும் காட்டுவோம்
அர்த்தநாரி கதையுந்தான் அப்படியே காட்டுவோம்.
வந்துடுங்க மகாசனமே வந்துடுங்க மகேசர்களே.
அந்தபுரத்து அரசியையும் அப்பாலுள்ள அரக்கியும்
வந்துநீங்க கண்டுகளிக்க வாருங்க வாருங்க..
காட்சி -1
அந்தபுரத்தில் அரசி சோழவளம் பாடுதல் ;
தோழியே காணாயோ தோற்றமதை பாடாயோ
தோழியே கண்டாயோ சோழவளம் கண்டாயோ
நெற்பரந்த கழனிதனை சொல்லிப் பாடாயோ
விற்பறந்த போர்களத்தைச் சொல்லிப் பாடாயோ
அல்லிக் குளத்துயரே அம்பரம் கறுத்திட
அம்புலித் தன்முகம் பார்ப்பதை பாடாயோ
செம்புலி வென்றச் செங்கணான் புகழ்பாடாயோ..
நம்பினற் கருளிட நாதனும் இருப்பதை கூறாயோ
செம்மண்போற் சிவந்த செங்கண்ணான் புகழ்பாடாயோ..
தோழி:
பாடக்கேட்டீரோ தேவி பாடுநற் கலையறியேன்
கூறக்கேட்டீரோ தேவி கூறநற் சொல்லறியேன்
செங்கண்ணான் புகழ்சிறப்பை செப்பலிடல் ஆகுதலோ
செங்கதிர் வான்விரவும் காலம் போதுமோ
அறியேன் அறியேன் அபலையானே அன்புத்தோழி..
அரசி :
வெய்யுண்ட பகலவன் தழுவிட மலரும்
வெண்புரவி கடலென நிற்கும் தேசமடி
பண்ணிசையோ பலவடிவம் பண்பாடோ புகழ்சேர்க்கும்
கண்படா தூரமெல்லாம் கழனியாற் செழிக்கும்
எண்படா புகழுறை எம்மக்கள் தேசமடி..
........
காட்சி 2:
அரக்கியான சூர்பனகை கானகத்தில் உலாவர ராமனை பார்த்தல்.
நெடுந்துயர் சோலையுட் நெடுமரம் மலர்தூவ
கடுந்துயர் காணாத் தடுத்திடும் எழிற்சோலை
இடும்பைக்கு உற்றோர் இன்மருந்தாகும் என்சோலை..
அம்பைக்கும் ரம்பைக்கும் அமையா சொர்க்கமே
அம்புலியும் உலவிட ஆசைகொளும் கானகமே.
அப்புறத்தே ஆறோடும் இப்புறத்தே கூயில்பாடும்.
வான்மழைக்கு இச்சோலை காற்றிடத்து தூதனுப்பும்..
(வரும் வழியில் தொலைவில் ராமனைக் காண்கிறாள்)
அன்றொரு காலத்தே அயன்தந்த ஆசியோ
இன்றிவனைக் காணவே அன்றவன் கண்ணளித்தானோ
குன்றிலாப் பேரெழில் கும்பிடச் செய்திட
நன்றிலாக் காமமும் நதிபோல் ஊற்றெடுக்க
வாருறை மாலனோ மதனோ வேலனோ
தேருறை தேவனோ துறவியோ வீரனோ
ஆருயிர் சேர்ந்திட்டான் எம்முறை ஏற்பானோ
வாயவிழ்திட மொழியென் தவம்செய்ததோ
சேய்மொழிக் கொஞ்சவோ கெஞ்சவோ
பேயென்று அஞ்சுவானோ சாபமதை நீக்குவானோ.
போவென்று துரத்துவானோ பொய்கைக்கு அழைப்பானோ
மாதவனோ மதனோ வேதப்பெரு மீசனோ.
ஏகனோ ஏமனோ ஏந்துவானோ ஏய்பானோ.?..
Post a Comment