எதிர்காலத்தின் தே(வை)வதை

மூன்றறை அங்குல துருப்பு சீட்டில்
மூன்றாம் அறைக்காண அனுமதி அச்சல்.
மூளைமுதல் உடலணு யாவும் படபடப்பு
மூர்ச்சை யாகிவிடுவேனோ என்கிற அச்சமும்.

முன்பொரு நாளெனக்காய் பிறந்தவள் ஒருத்தி
முதலிரவில் துணையிருந்து முழுமதி திருத்தி
முகுர்த்த நேரத்தை சுபமாக்கிய சுந்தரி
முகத்தில் மலர்ச்சி அகத்தில் மகிழ்ச்சி..

பிறந்தது பெண்ணென்றால் அன்றே உனக்கும்
பிறந்தது மரணம் என்றானொரு மூடமுனிவன்
பிறக்கவே வேண்டாம் கலைத்துவிடு என்றாள்
பிறக்கட்டுமே என்றேன் தேம்பித் துணிந்தாள்

அன்றிருந்தது மனதிடம் இன்றது மரணபயம்
அன்பிருக்கு அவளுக்கும் ஆசையிருக்கு எனக்கும்
அன்னமாய் ஒருபெண் அமைந்திட வேண்டினோம்
அன்னையாய் அவளை வளர்க்க எண்ணிணோம்..

அருகில் தானந்த அறையில் தானவள்
அருகிருந்தவள் அணைத்திருந்தவள் அமைதியாய் உறங்குகிறாள்.
அருகிருந்தது தொட்டில் அலைகிறது மனம்.

ஆணோ பெண்ணோ அதிகரிக்கிறது பயம்
ஆணாய் இருந்தால் ஆயுளுண்டு பயம்
பேணாய் தலையெங்கும் பேய்போல் திரிகிறது
பேணா தவங்கள் பேணுமோ என்னை..

உறங்கிய உடனாள் உளறினாள் அவளச்சம்
கிறங்கிய சிந்தையில் கிறுக்கின எண்ணங்கள்
இறங்கிய மனதில் இறப்பின் வீரம்
வறண்ட நாவுல் வறட்சியில் மனமும்.

விழித்தாள் என்னவள் விழித்து துடித்தாள்
விழிகள் சிந்தினாள் விவரம் அறிய
விழைந்தாள் இன்னும் இருவருக்கும் தெரியாது
விவரம் இதுவென விவரிக்க வந்தாள்.

அஞ்சியஞ்சி அருகழைத்தாள் விஞ்சிவிஞ்சி அழுதாள்
அஞ்ச வேண்டாம் ஆறுதல் நானென
வஞ்சி விசும்பல் உடைத்து அடங்கினாள்
கொஞ்சிக் கொண்டே கொண்டுவந்தாள் செவிலி.

நெருங்க நெருங்க நெஞ்சில் பிரளயம்
நெருடும் அச்சம் நெஞ்சில் உச்சம்
நெருங்கிட கண்டேன் நெஞ்சத்தாள் துடிப்பும்
நெருங்கிட கண்டேன் நெஞ்சினுள் அன்பும்.

தந்தையாய் ஏந்தினேன் தாயிற்கு சந்தேகம்
எந்தையின் உணர்வை தானமாய் பெற்றேன்
சிந்தையில் ஏதுமில்லை சிந்தினேன் கண்ணீர்.
எந்தன் ரத்தம் என்கையில் பெண்ணாய்..

ஊறிய  இன்பவெள்ளம் உதடில் தெரிய
தேறினாள் அன்னையாள் தேம்பல் சரிய
நாறியான் இறப்பதைவிட இக்கனம் இறப்பதிலென்ன.
மாறியான் வாழ்ந்தால் இதைவிட சிறப்பதென்ன.

வாவா என்றன் வாழ்வின் சாரமே
வாவா எங்கள் வாழ்க்கை தவமே
வாவா எங்கள் வானவர் பரிசே
வாவா என்றன் வார்த்தை பொருளே

நாளை நீயும் நாட்டில் சிறக்கும்
நாளை தாயும் காண்பாள் நடக்குமந்
நாளை யானும் காணாது போகலாமிந்
நாளே போதும் ஏதும்வேண்டேன் கண்ணே.

அப்பன் எந்தன் வாழ்வை நீயும்
அப்பனுக்கும் சேர்த்தே வாழ்வாய் நாளும்
அப்பனுனை ஆசிர்வதிப்பேன் சொர்கமோ நரகமோ
அப்பனுக்கு இதுவே போதுமடி செல்வமே.

நின்றன் பேரெழில் நிமலமாய் வளரும்
நின்றன் பின்னொரு விடலை கூட்டமலையும்
நின்றன் குரலுக்கு பலசனம் ஏங்கும்
நன்றே கண்ணே நாளை உனதே.

என்னை அடைந்தாள் அன்னை இனிமேல்
உன்னை அடைக்கலம் என்றே புகுவாள்
தன்னை தொலைக்காதே அன்னைக்கு நீயுலகு
என்னை தொலைத்தவள் உன்னை பெற்றாளே.

வஞ்சம் தன்னை நெஞ்சம் சேர்க்காதே
தஞ்சம் வந்தால் தர்மம் மறக்காதே
கொஞ்சம் வாழ்க்கை கொஞ்சமடி அது
கொஞ்சும் உன்னை கொஞ்சுமடி குயிலே.

ஏழை எந்தன் ஏழருச் செல்வமே
வாழை போல் வாழ்க்கை வளருமே
கோழை யானல்ல என்வீரம் நீயே
தாழைப் பூவே தங்க நிலவே.

நாளைக்கு உன்னை பரிசாய் தந்தேன்
நாளைக்கு நீயே நன்மை செய்வாய்
தாளை சேரும் சிற்றுயிர் காப்பாய்
நாளைக்கு நீயே எதிர்கால தேவதை.

மரணம் என்னை தின்கட்டும் உயிரே
மரணத்தின் மடியில் யான்போகிறேன் முகிலே
அரணமாய் அப்பனிருப்பேன் அன்னைக்குள்ளே வாழ்ந்திருப்பேன்
வரமாய் வந்தாய் வளமே சரணம்..

இறைவ பொருளே தெய்வ வரமே
கறையும் என்னை கரையில் சேர்த்தாய்
மறையும் என்னில் மையம் கொண்டாய்
நிறையும் மனதொடும் மரணம் புகுந்தேன் .

என்னவளே யானுனது என்பிள்ளை என்விழுது
மன்னவனை கரம்பிடிப்பாள் மகிழ்ந்து நீயுதவு.
என்னில் பாதிநீ உன்னில் பாதியவள்
தன்னின் பாதியான் அன்னில் மீதிநீயே.

இயற்கை ஒருநாள் தின்கும் அதுவே
இயல்பை ஒருநாள் மாற்றும் அதனால்
இயல்பாய் வாழ்வாய் இருப்பேன் அரணாய்
இயற்கை மீறியிதுவென் இன்புள சத்தியமே..

இங்கனம் இறப்பென்னை தழுவுங்காள் இதயமே
இங்கனம் இன்பமுத்தமிடு என்றன் விழுதே
அங்கனம் என்னுயிர் அமைதி பெறட்டும்
அங்கனம் என்னான்மா அச்சரம் பெறட்டுமே.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post