புத்தகம் பெற்றிடப் புத்துயிர் பெறுவோம்நாம்
புத்தகந் தன்னினால் புண்ணினை மாய்த்தோம்நாம்
புத்தகங் கற்றுநம் புண்ணியம் சேர்த்தோம்நாம்
புத்தகத்தால் பெற்றோம் உயர்வு...
புக்கில் பெற்ற புதுவுயிர் போலவே
சிக்கும் கருத்தை சிறைபட செய்ததே
மக்கும் மனித மடைந்த பெரும்பயனே
ஒக்கும் ஓன்றிலா நூல்
தொகுதிக ளாயிரம் தொன்மைக ளோடும்
பகுதியிற் பாற்படு பண்,பா பலவும்
வகுத்திங்கு வகைபட வகுப்பித்த வாரே
மிகுத்திங்கு யாதுநூலி ணை.
அரங்கம் நுழைந்து அரங்கேற்ற மான
அரண மறிவும் அருளு மதற்கு
வரங்க ளீடென வந்திடு மோசொல்
தரணியிற் மற்றோர் சிறப்பு ..
தனியென நின்று தரணிக் குதவும்
நனிபுகழ் கொண்ட நல்லறம் காக்கும்
இனிதுடை நூலதற்கு இணையென வொன்றை
முனித்திட லாகுமோ சொல்.
வாகாய் நயமுள வாக்கா யுலகினில்
பாகா யினித்திடும் பாரினை உய்விக்கும்
நோகா மலிதுநம் நோய்பல வென்றிடும்
ஆகா வெனுமொர் படிப்பு..
தேனா யினிக்கும் தேன்மா விதுவன்றோ
வானார் தமக்கும் வாய்க்கா வரமிது
கோனா துய்ப்பவர் கோனென வாழ்வாராம்
ஆனால்ப் புத்தகம் எளிது..
படிப்பார் தமையே பார்புகழச் செய்கும்
படியா யுனையே பரனுக் குயர்த்தும்
படியா திருத்தல் பயனிலை யென்பேன்
படிப்போம் நிதமு மிணைந்து..
வாசிப்பாய் நின்னரும் வாழ்வினை மேலோங்க
வாசிப்பாய் என்னரும் வாசகனே தோழனே
நாசிபோல் வாசியுயிர் நிற்கும் வரைவாசி
நேசிப்பாய் புத்தகம் தன்னை
கண்டுயிர் சிந்தும்நற் கல்வியினி வாழட்டும்
உண்டுயிர் வாழ்தலைபோல் உள்ளங்கற் றுக்கொளட்டும்
வண்டுண் மலர்தேனாய் வந்துவாசி நின்றன்
கண்கள் தேயுமாறு நோற்று...
Post a Comment