உற்ற துணையவள் உள்ளத் துறைபவள்
கற்ற கலையில் கவிதை வடிவினள்
சிற்றம் பலத்தே சிவகாமி காணவே
மற்றவை போகும் மறந்து.
நெற்றி திலகமும் நெய்போல் கருணையும்
முற்றில் முடிவில் முழுதாய் துணைவரும்
வற்றி வருந்திட வான்மழை போல்வரும்
பற்றி இருக்கு மருள்.
அருளுடை நாயகி அம்பலத் தன்னை
திருவடி சேர்ந்தால் தினந்தினம் இன்பம்
கருவெனக் காப்பாள் கடுவினை தீர்ப்பாள்
முருகும் இளமை தந்து.
வணங்கும் அடியவர்க்கு வந்துதவும் தாயே
இணங்கி அடியார்க்கு இன்பமருள் வாயே
மணந்தநன் மங்கையர்க்கு மங்களம் தந்தாய்
அணங்கும் அன்பர்க் கன்பு
கண்ணை கொடுத்தாண்ட கண்ணப்பர் தம்போல்
கண்ணை கொடுக்கலா கேனென்னை தாயென
எண்ணம் கொண்டென் என்புருகு மன்பினால்
வண்ணம் கொடுத்தே வாழ்த்து.
வையத்தே உயர்ந்த வைத்தியன் தன்னின்
தையலே துணையென சைவமாய் வைணவி
ஐயன் அருளொடு ஐம்பூத சக்தியாய்
மையங் கொண்டாய் இணைந்து.
வெய்யன் துணைவனாய் வெண்ணை திருடனும்
உய்யத் தமையனாய் உமையே கொண்டாய்
தெய்வ திருவென தெய்வத் துயர்வேயான்
உய்ய வருள்வாய் வழி.
முன்னை பிறப்பதன் மூண்டத் துயரெல்லாம்
என்னையும் பிள்ளையென எண்ணிக் களைப்பாயே
அன்னை எனவழைக்க அபயமாய் காவல்செய்
நின்னை அடைந்தேன் சரண்.
தாயாய் உமையே சரணாய் புகுந்தேன்
சேயாம் எனக்கும் செயலி லுதவிடும்
மாயா உலகதன் மாயை அறுத்தெனை
தாயாய் காத்தனைப் பாடு.
ஆயக் கலைதந்து ஆர்வம் மிகத்தந்து
நேய மனந்தந்து நேசம் பலதந்து
காய கடந்தீர்க்க காலன் வருங்கால்
நேய திருவருள் தா....
Post a Comment