தமிழ்கடவுள் - திறனாய்வு

கவிஞர் அறிமுகம் :

இவர்
அரிமுகம் கொண்ட
ஆறுமுக நேசர்..
அறிமுகம் தேவையில்லா
அறிந்த முகம் .. 

பாரே போற்றும் பாடலாசியர்
பேரே வேண்டாம்..

இவர் காவியம்..
ஒவியம் வரையத் தெரிந்த காவியம்..
இவர்தான் பெரியார்
என பெரியாரையே - அறிமுகம்
செய்தவர்க்கு அறிமுகமோ..

அவதார புருஷன் - வாழ்வில்
அழியா பழியை
தந்த பெயர் ..
அவதார புருஷன்
எழுதிய இந்த பெயர்...

கம்பநாட்டான் கவிஞராகாது எப்படி....
இவர்
ஸ்ரீரங்க ராஜனின்
பெயரை பெற்ற ரங்கராஜன். ராஜனுக்கு  ராஜன் - இந்த ரங்கராஜன்..

தெரிந்து விட்டதல்லவா .. இனி தொடர்வோம் வாலிப கவிஞரின் வான்புகழ் காக்கும் நூல்..

நூல் அறிமுகம் :

நூல் என்று ஏன் பேர் வந்தது என அகத்தியரை கேட்டவனின் வரலாறு இந்த நூல்... கச்சியப்பர் கண்ட கம்பரின் நெடுங்கால ஆசை.. கம்பநாட்டான் எங்கள் வாலியால் நிறைவேறியது.. காண்டங்களாய் பரந்த கந்த புராணக் கடலை.. கையடக்கமாய் சுருக்கி தந்த நூல்... தமிழே தமிர் கொள்ளும் கந்தனின் புராணத்தை.. தமிழ்க் கடவுள் என்றே விளித்து தந்த நூல்.. அணிந்துரைக்கே நெஞ்சை கரைக்கும் திறம் கொண்ட நூல்.. அணிந்துரை முனைவர் திரு இரா. செல்வகணபதி..

கரு :

இந்நூல் தன் கரு ஓர் பிரம்மாண்ட வரலாறு ... தேவாசுர போர் பற்றிய வரலாறு தந்தாலும்.. முக்கியமாக முழுக்க முழுக்க கதாநாயகன் எழில் கொஞ்சும் அழகன் முருகன்.. அவன் கருவானது முதல் குருவானது பகன்று திருவாய காரியம் செய்யும் வரை நகர்கிறது நூல்..

பாவகை / கவி வடிவம் ;:

உலகாளும் பரம்பொருளை கச்சியப்பர் தந்த படைபொருளை உலகாளும் புரிந்து கொள்ளும் படி எளிமையாக புதுக்கவிதையில் படைத்திருக்கிறார் வாலி... மரபில் வந்த முருகு புதுக்கவிதையிலும் அழகாகவே முருகுகிறது..

கவி நயம் :
  வார்த்தை வித்தகர் நம்ம வாலி.. இயைபுக்கு அவரே வாளி... அத்தகு கவிஞர் அவர் நேயக்கடவுள் கதை எழுதுகையில் சொல்ல வேண்டுமா?..

முதற் கவியாக கணபதியே காப்பு.. என்பதில்...

கூப்புக் கரத்தை குனியுன் சிரத்தை  நீ
தோப்புக் கரணம் தொடர்ந்துசெய்; - பாப்புனைய
யாப்புத் தருவான் ; அவ் யானைமுகன் நெஞ்சே!நம்
காப்பு; வராதுசோ காப்பு!..

இங்கே எதுகை மோனை இயைபு என எல்லாவற்றையும் கட்டி அடிக்கிறார்.. முதலே சிறப்பெனில்.. முழுதும் எப்படியிருக்கும்.. சக்கரையில்ல இவர் தேன்.. சர்க்கரை திகட்டும் தேன் திகட்டாது வாருங்கள்...

முன்பே சொன்னது போல் கச்சியப்பரின் கந்தபுராணத்தை கையடக்கமாய் தந்துளார்.. அதற்காய் கச்சியப்பருக்கு ஒரு கைகூப்பு... அங்கு கச்சியப்பரை ஏந்திநிற்கிறார் தன்னை துட்சமாக்கி.. சீடகுணம் குருமரியாதை...

முள்ளிருக்கும் பூவை முகரும்ஊர் பூவுள்ளே
கள்ளிருக்கும் பட்சத்தில் கச்சியப்பா! உள்ளிருந்து
நீயெனக் கோதுவையேல்
  நாவில் ஔிரும்சொல்;
வாயெனக்கு நீயாக வா..

கடைசி வரிக் கிண்டல் பாருங்கள்..

வா எனக்கு நீயாக வா.. என்கிறபடியும்..
வாய் எனக்கு நீயாக வா என்றபடி அயைத்திருக்கிறார்...

தன் பாடலாசிரிய திறத்தை தாலாட்டில் காட்டுகிறார்.. காவிய வாலிபர்... நல் தன்னில் இரண்டு தாலாட்டு உண்டு உமையான பார்வதிக்கு ஒன்று.. உமையவன் கொழுந்தான முருகனுக்கு ஒன்று..

பார்வதி தாலாட்டில் என்னை தைத்த வரி..

இம்மா நிலத்தார்க்கும்
இமையோர் நிறைந்திருக்கும்
அம்மா நிலத்தார்க்கும்
அன்னை நீதான்; நின் நிழலில்
சும்மா நின்றிருக்கும்
சிறியவளாம் என்னை நீ
அம்மா என்றழைக்கும்
ஆனந்தம் என் சொல்ல..

எப்படி. .சொல்வது என்றன் மனக்கிளர்வை.. கிழவன் தந்த கிளர்வை... வாலிப கவிஞரின் முதிர்ச்சி தென்படும் இதே பாடலில் முள்ளென மனதில் தைக்கும் வரி

மால் சுரக்கும் மணவாளன்
மணிமொழியும் விரும்பாது -
பால்சுரக்க வக்கில்லாப்
பாவையிடம் வந்தனையே!...

பிள்ளை இல்லா தாயின் வலியை வலிந்து காட்டி அடுத்த வரியில் தடவி செல்லும் முதிர்ச்சியை சொல்ல தமிழுக்கு வாயில்லை..

மற்றொரு தாலாட்டில் படிப்பவரை தாயாக்கி பார்க்கும் மாயம் செய்கிறார் கவிஞர்..

சின்ன சங்கரா சின்ன சங்கரா எமைச்
சின்னச் சின்னதாய் சிந்தும் சிரிப்பிலே
தின்ன சங்கரா தின்ன சங்கரா

என்று துவங்கும் தாலாட்டில்.. தாய்மை தவம் பெற்ற பயனை .. ஆண்மை கொண்டவரும் உணரும் வண்ணம் வைத்த தைத்த வரிகள்..

சங்கை எதுவுமின்றிச்
செவிலித்தாய் என்றிருக்கும்
மங்கை என்மடியில்
மன்னவனே நீ படுத்துச்
செங்கை விரல் தடவிச்
செங்காம்பில் வாய்வைக்கக்
கொங்கை செய்ததவம்
கொஞ்சமாமோ செவ்வேளே...

இவ்வகை கவிநயம் எவ்வகை எந்நா இயம்ப இயலும்.. கற்பதன்றி கவிஞரை எப்படி சொற்பதம் பார்ப்பனோ?.

சொல்நயம் :

புல்லுக்கு ஆறு சொல்லுக்கு நூறு என்பதர்க்கு வாலியே நிகழ்கால வாழி...

கந்தன் லீலைகள் என்று கவிஞர் சொல் லீலையினை பாருங்கள்...

உருகு உருகு என உசுப்பும்
முருகு - அம் முருகு
கொண்ட முருகு
முருகு கொண்ட முருகு முன்
மூவர்கொண்ட முருகு
ஒரு சருகு!

முருகு என்பது அழகு என்பதை எப்படி நயமாக கையாள்கிறார் பாருங்கள்..

மாயை வர்ணிப்பதில் நமக்கொரு மாய காட்சி தருகிறார் ...  மாயை எனும் பெண் தவமிருக்கும் காசிபமுனியை மயக்க செல்கிறாள் .. அங்கு அவள் அழகை வர்ணிப்பதில் வாலிப வாலியை உணரலாம்...

முனிவர் குடிலுக்கு
முன்பிருந்த குன்றின் மேலேறி..

வான் கொண்டநிலவு - ஓர்
ஊன் கொண்ட நிலவாய்.-
வையம் வந்ததோ - எனும்
ஐயம் வந்து..

அட்ட திக்கும் வெறிக்க
அழகு தெறிக்க.. கண்கள்..
கொட்டாது அவ்வழகை
கொடி செடி கொறிக்க..

ஓவென ஓசையுடன் வீசிய
ஓதை அவ் ஓவியப் பாவையின்...

உடுக்கையை உருவி - ஒவ்வோர்
உறுப்பாய்க் குறிக்க..
துகில்கள் மூடிய
நகில்கள்..

முட்டி முண்டி முன்னெழும் வண்ணம் - மெய்
மூரி முறிக்க..

பூப்பெய்திய -- பூந்தோப்பு எனும் தகவலை

மதர்த்த பிட்டத்திலும்
மார்பு வட்டத்திலும்
கொழுத்த துடையினிலும்
கொளகொளத்த இடையினிலும்

பருவம் - ஒரு
பட்டயமாய் பொறிக்க;
நின்றாள் - மாயையெனும்
நிருதர்குல மாது...

எப்படி இந்த வசியம்.. இதுவே கவிஞரின் விசயம்..

எதற்கு இந்நூல் ? / நூற்பயன்...

யாதாயினும் பயனுளின் கொளப்படும் என்கிறபடி.. இந்நூலால் என்ன பயன் நாம் படிக்க தேவையான காரணம் யாது ? என்கிற கேள்விகளுக்கு..

பக்தர் தம் கடவுளான கந்தனின் கதையை அருந்தமிழில் அருந்த இயலாமையினாற் புதுநடையில் பதியும்படி அமைந்தது..

கவி பயில்வோர்க்கு தக்கதோர் துணை.. சொல் தருவதிலும்.. பொருள் காட்சி மறைபொருள் என தரும் நூல்.. நகில்.. மூரி. போன்ற சொற்புலமை கற்க ஏதுவாய் அமைதல்..

தமிழ் ரசிப்பார்க்கு தகையான தீனி.. எளியநடை.. வலிய புலமை என எழுந்து நிற்கும் நூல்..

இந்நூல் இளங்கவிஞர்க்கு கவிநடையிலும் கதை சொல்ல முடியும் எனக் காட்டும் வழிகாட்டி..

உணர்ச்சியை படிப்பவர் மனதில் விதைக்கும் விதத்தை உணர்த்தும் பெருநூல்...

பொருந்து படலம் : (comparative phase )

மந்திரலோசனையில்... இராமயணத்தில் இராவணன் சொல்லும்..

இட்ட இவ் அரியணை இருந்தது என் உடல் .  என்று தளர்வாய் சொல்வானே.. இத்தளர்வை சூரபன்மனிடம் காட்டுகிறார் கவிஞர்....

தூதுவன் ஒருவன் வந்து -
தூள் செய்து விட்டானே..

ஊரை பல
பேரை என் -
வம்சத்தின்
வேரை...

என வருந்தும் சூரனிடம் காணமுடிகிறதல்லவா.. கம்பன் கவிதிறனை கற்ற வாலியின் கவி நயம் இது...

நூல் இறுதியில்.. 

வேலும் மயிலும் துணை ; உண்டோ
வேலுக்கும் மயிலுக்கும் இணை?

கருதிக் கருதிக்
கவலைப் படுவார் -
கவலைக் கடலைக்
கடியும் வடிவேல்!..

என்று மகாகவி பாரதியாரின் வரிகளோடு முடிப்பது வாலியின் வழக்கமான பாணியே..

சொல் குவியல் .. சொல் நயம் பொருள்நயம்.. கவிதிறம்... எளியநை.. வலிய வரைவு.. எனும் ஆறும் கொண்டு கந்தவேளின் கை வேலாய் தாக்குகிறார்
கம்ப வாலியை தாக்காத கந்த வேல்
நம்ப வாலியே ஏந்தும் இந்த வேல்..

வெல்வதேது வேல்முன்னம்
செல்வதேது தாள்முன்னம்..
சொல்வதேது வாலிக்குயான்...
ஒல்வருகும் நல்மதிப்பன்றி
சில்லென்று ஒரு காதலன்றி..

வேலும் மயிலும்.. போல்.. இவர்தம்.. சொல்லும் கவியும்.. பாப்புனையும் எனக்கோர் காப்பு...
யாண்டும் நேராது சோகாப்பு..

நன்றி... சுபம்....

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post