பக்திப் பாடல்கள் - புகழ்ச்சியா?..

தமிழ் கோரா தளத்தில் நண்பர் ஒருவர் ஒரு கேள்வியை முன் வைத்தார்.. பலரிடம் இந்த கேள்வி இருந்திருக்கிறது. ஆனால் பலரும் கேட்டோ கேட்காமலோ விட்டுவிடுகின்றனர்.. ஏன் சில வருடங்களுக்கு முன்பு எனக்குள்ளும் இந்த கேள்வி இருந்தது.. 

நாம் ஏன் கடவுளை புகழ வேண்டும்?.இதனால் அவருக்கு என்ன பயன்? அல்லது நமக்கு தான் என்ன பயன்? .. என்ற கேள்வியது.. 

உண்மையில் நாம் ஏன்  புகழ வேண்டும். பிறப்பு இறப்பு என எல்லாம் கடந்த ஒன்றை,  முற்றுமாய் முழுவதுமான ஒன்றை, புகழ்வதால் அதற்கு என்ன ஊக்கமோ? வளர்ச்சியோ? இருக்க போகிறது .. 

அல்லது புகழ்பவர்க்கே அருள் என்றால் அந்த பாரபட்சமும் , தற்பெருமையும் சிறுமை குணம் அல்லவா?.  அது கடவுளுக்கு இழுக்கு அல்லவா? . அவ்வாறிருக்க ஏன் இந்த புகழ்ச்சி?. இப்படியான கேள்விகள் நாம் ஆன்மீகத்தின் துவக்க நிலையில் இருந்து பார்க்கும் போது தோன்றுகிறது... 

ஆனால் பெரும் ஞானிகளும் முக்திபெற்றவர்களும் புகழ்ந்து பாடிய பாடல்களும் பூசைகளும் நமக்கு நிறைய கிடைக்கின்றன.. ஆக அது சரி என்ற நோக்கில் வந்தாலும். இந்த கேள்விக்கான விடையாக அது அமையாது. .. 

ஆம் நாம் புகழ்வது எள்ளளவும் எல்லாமும் ஆன பரம்பொருளை வளர்க்கவோ ஊக்கமோ செய்யாது.. அதே போல புகழ்வதும் புகழ சொல்வதும் இறைவனின் தேவையல்ல.. பலமுறை பாடலுக்காய் இறைவன் இறங்கி வந்தாலும் பாடச்சொல்லி கேட்டாலும் . அது இறைவனை அடையும் மார்க்கமாக இருக்காது. .. 

அப்படியானால் நாம் புகழ்வதால் என்ன பயன்?. புகழ்வதே தவறா? அல்லது அவசியமற்றதா?. என்றால் இல்லை.. 

புகழ்தல் என்பது தன்னை விட ஒன்றை உயர்வாய் உணர்ந்து பகிர்வது.. இங்கு புகழ்தல் என்பதை பசித்த ஒருவன் உணவை பெறாவிடினும் உணவின் நினைப்பும் ருசியும் சுவையும் அவனது பசிக்கு நல்ல தீனியாக அல்லது ஊக்கமாக இருப்பது மாதிரி உணரவேண்டும்.. 

ஆனால் நமது பாடல்கள்  செய்யுள்கள் பலவும் உண்மையில்  புகழ்கிறதா? என்றால் இல்லை.. 

போற்றி புகழ்ந்து பாடுவதால் இறைவனுக்கு துளியும் பயனில்லை..

ஆனால் அடியார்களுக்கு அனுபவம் கிடைக்கிறது. அந்த அனுபவத்தினால் உணர்ச்சி மேலிடுகிறது. உணர்ச்சி மேலிடுவதால் இறைவனை இன்னும் நேசிக்க முடிகிறது..

நாள்தோறும் என் நெற்றியில் திருநீறு அணியும் போதெல்லாம் மந்திரமாவது நீறு என்ற பதிகத்தை நினைக்கிறேன்.. அந்த உணர்ச்சியில் நான் நீற்றை பெருமையாக கருதுகிறேன்..

மற்ற சில பாடல்கள் இறைக்காதலை வளர்க்கின்றன.. ஒவ்வொரு முறையும் பித்தா பிறைசூடி பதிகத்தின் போதும் உனக்கா நான் ஆளில்லை என்றேன் என சுந்தரரை போல நானும் அழுகிறேன். . இது உணர்வியல் சார்ந்தது.

மேலும் சில இறைநிலையை உரைப்பனவாக இருக்கின்றன.. இறைவனை வடிவமாக உணர்த்த வேண்டிய நிலையில் மலை போன்றவன் சோதி ஆனவன் என புகழ்தல் போல உருவகிக்க வேண்டியுள்ளது.. அதற்காய் சில பாடல்கள் தோன்றின.


உனாய் உயிர் ஆனாய் உடல் ஆனாய் உலகு ஆனாய்

வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலையானாய்


என்று சுந்தரர் சொல்வது புகழ்ச்சிக்காகவா ?. இல்லை புரிதலுக்காகவா? 


வானாகி வளியாகி ஔியாகி என மாணிக்கவாசகரும் புகழ்ச்சிக்காகவா? சொன்னார்.. 


உண்மையில் பிறந்த பாடல்கள் எல்லாம் புகழ்ச்சிக்காக இல்லை. புரிதலுக்காகவே..  நம் உணர்தலுக்காாகவே. உணர்வதும் உணராமல் இருப்பதும் அவரவர் சூழ்நிலை அனுபவம் பொருத்தது.. உணர்ந்தார்க்கு உள்ளே உறைவானே அன்றி உலகெல்லாம் உள்ள ஆலயங்கள் அவனுக்கு அவசியமற்றவை.. 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post