சுஜாதா பிறந்தநாள் நினைவுகள்

ஹி இஸ் மை வாத்யார். 


சுஜாதா என்ற எழுத்தாளன் அன்றும் இன்றும் பெருமளவில் இலக்கியவாத எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் வட்டத்துள் ஒதுக்கப்படுவது பலவகையில் காணமுடிகிறது.. 


இங்கு வாசகர்கள் தன் மேதைத்தன்மையை தாம் வாசிக்கும் புத்தகத்துள் காட்டுவது என்பது பிரதானமாக பல எழுத்தாளர்களை நசுக்குகிறது. அதன் போக்கில் தான் சிந்தாந்த வட்டத்துக்குள் எழுத்தாளன் சிக்குப்படுகிறான். திராவிட முற்போக்கு எழுத்தாளன் ஆரிய எழுத்தாளன் இடதுசாரி வலதுசாரி என எழுத்தாளனுக்குள்ளும் சாதி மற்றும் அரசியல் திணிக்கப்பட்டு விடுகிறது.. 


ஒருமுறை என் நண்பர் நூலக வட்டத்துள் ஒருவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் . அவர் பெரும் வாசகர் புத்தகப்புழு என்றெல்லாம் கட்டியம் கூறி அறிமுகப் படுத்தினார். நான் என் பங்குக்கு அறிமுகபடுத்திக் கொண்டு நலம் விசாரித்தேன். புத்தக வாசகர்களுக்கே உண்டான ஒரு பழக்கத்தில் இப்ப என்ன வாசிக்கிறீங்க? எனக்கேட்க . சுஜாதா வின் கடவுள் இருக்கிறாரா? தொகுப்பு என்று பதிலளித்தேன் .. 


அவரோ ஒரு அட்டைப்பூச்சியை பார்ப்பது போல பார்த்துவிட்டு. தத்யேவஸ்கி படிச்சிருக்கியா? என்றார்.. அது புத்தகத்தின் பேரா? ஆசிரியர் பேரா? என்பது கூட அப்போது தெரியாது . இல்லை என்றேன் . இலக்கியங்களை வாசித்ததே இல்லையா? என்றார் அலட்சியமாக.. எது இலக்கியம் என்றே புரியாதவனை இப்படி கேட்டால் எப்படி என்றேன்.. 


இன்றுவரை நான் வாசகனா இல்லையா என்பது கூட வேண்டாம் ஆனால் தன்னை மேதையாக காட்டிக்கொள்ள இயல்பாக அதுபற்றி அறியாதவனிடம் அளப்பது தான் வாசகர்களின் யுக்தியாக இருந்திருக்கிறது.. அவர்களை பொருத்தமட்டில் கம்பராமாயணமே குமுதத்தில் வந்தால் இலக்கியமல்ல.. என்ற போக்கில் சுஜாதாவை அவர்கள் ஏற்பது இயலாத ஒன்றுதான்..


என்னை பொருத்தமட்டில் ஒரு வாசகனுக்கு எடுத்தவுடன் சித்தாந்தங்களை கொண்டு தந்து அவனை துரத்துவதை விட வாசிப்பின் சுவையை தந்து இழுப்பதுதான் உகந்த வழி. அதைதான் சுஜாதா செய்தார். 


வழக்கமான வர்ணனைக்காவியக் கதைகளை மடக்கி சிறுசிறு செய்திகளில் முடித்துப் பார்த்தார்.. 30 பக்கங்களில் முன்னுரை மட்டுமே வந்திருந்த வேளையில் 40 பக்கங்களுக்குள் கதையையே முடித்துவிட்டார். அந்த சுறுசுறுப்பு தான் வாசகனை முதற்கட்டமாக இழுத்தது. பின் வரிகளில் பயன்படுத்தும் கவர்ச்சி யுக்திகளை கொண்டு வாசக வட்டத்தை பெரிதுபடுத்தினார்.. பின் பேர் கண்டாலே வாசிக்குமம்படியான கூட்டத்தை சேர்த்தப்பின் தான் தன் பாணியில் இலக்கியத்தை சுருக்கித் தந்தார்..


அதைவிட அறிவியலை முடிந்தவரையில் தமிழ்வாசகர்கள் கையில் கொண்டுவந்தார்.. இலக்கியத்திற்கு பல்லாயிர எழுத்தாளர்கள் இருக்கும் போது தனக்கான பாதையை மாற்றி வாசகர்களை சேர்த்துக்கொண்டார். அவர் எழுத்துநடையில் உள்ள சுவாரஸ்யம் நவீனம் இன்றுவரை வாசகரை சேர்த்துக் கொண்டேதான் இருக்கிறது.. 


க்ளோசர் ப்ளாட் , ரிவர்ஸ் ப்ளாட், ஸ்ரிங்க் வியூ ப்ளாட் , ஸ்ப்லிட் ப்ளாட் என சுஜாதாவின் கதைகளை கொண்டும் சிலபல ஆய்வுநூல்கள் எழுதலாம்.. இதை எல்லாவற்றையும் விட மிடில்கிளாஸ் காரர்களுக்கான விலையில் பெரு்பாலும் இலவசமாய் கிடைத்தவர் சுஜாதா. ஆளுமையாக இருந்தும் அடக்கமாக இருந்தார்.. 


இன்றைய எழுத்தாளர்கள் அனைவருக்குள்ளும் இலக்கிய சாயல் உண்டோ இல்லையோ சுஜாதா சாயல் உண்டு.. 



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post