சண்முக சட்கண்டம் - 17 - வேலோடும் மயிலோடும்

 வேலோடும் மயிலோடும் விளையாடும் கடவுளே

காலோடும் ககனோடும் குறைதீர்க்கும் இறைவனே

மாலோடும் அயனோடும் முடிகாண சிவன்தரு

கோலோடும் கொடியோடும் குடியாளும் கடம்பனே. 1


தோலோடும் துடியோடும் தினமாடும் மகதேவர்

போலோனே புவிமீது பகையாடும் பகலவன்

போலோனே பழிபடு படைகளத் திடையொளிர்

வேலோனே வழிபட வணங்கிட இனியவா. 2


நூலோடும் நுதியோடும் நுதற்பாடு பொருளினை

சூலோடு சுழன்றாடும் சிவனோட விளக்கியே

சேலோடு அலையாடு செழுமாழி அமர்ந்தவா

ஆலோடு அமர்தானின் அருமைகொள் முருகனே. 3


ஆலோடு வினையோட அமர்ந்தாளும் கரிமுகன்

வேலோடு வினையோட வரமீந்த மலைமகள்

தாலோடு வினையோட தமையாளும் சிவன்தரு

ஆலோடு மதியருள் அருகோனின் இணையனே 4


பாலோடு பருப்பிட்டு பழமோடு தருவனே

சீலாடு சினமாற சரணங்கள் புரிவனே

தாலாடு தமிழோடு தினந்தோறும் பணிவனே

கோலோடு கொடியோடு குறைதீர புகழ்வனே. 5


நாளோடும் நலமோடும் நிதம்வாழ வழிபுரி

வாளோடு விளையாடும் இருள்வீழ வினைபுரி

தோளோடு துணையாகும் திருஞான வடிவென

 தூளோடு துரும்பான திருவான முருகனே 6


ஆளோடும் அரவோடும் அகன்றானின் குமரனே

கோளோடும் குணமோடும் குறைபட்ட மனிதரை

கோளோடு கனிவான கனியான இறைவனே

வாளோடு வருதுன்பம் வெகுண்டோட அருள்வனே. 7


ஏடோடும் மணியோடும் எழிலாக அமர்ந்தவா

காடோடும் மயிலோடும் குகையேறி வசிப்பவா

நாடோரும் நலிந்தோரும் நலஞ்சேர நினைந்துநீ

ஊடோடும் உளமோடும் உருவான கடவுளே. 8


ஆடோடு மயில்சேவல் அழகாக சுமந்திட

ஓடோடி வரும்வேளே ஒயிலோனே முருகனே

கூடோடு குகனாகி குறைதீர்க்கும் கடவுளே

வீடோடு வினைதீரும் வரம்தந்த வரதனே. 9


மாடோடு மயிலோடும் மலையாவின் குடியிலே

பாடோடு வருவோரை பயன்சேர்க்கும் சிறுவனே

சூடோடு சுவையான சுடரான கடவுளே

ஓடோடி வருவாயென் ஒலியோட்டம் உணர்ந்ததும் .10

  




Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post