துறவிக்கு உய்வழி இன்ப துன்ப நன்மதீய நிகழ்வுகளில் சிக்குள்ளாகாத நிலை என்பதால் தவம் உயர்ந்தது.. துறவிக்கு மட்டுமல்ல சகலருக்கும் அநாவசிய நேரங்களில் தவம் மிகவும் பாதுகாப்பானது.. என்பதால் தவத்தின் சிறப்பை விளக்குகிறார் பேராசான்.
261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
உரை : வந்த துன்பம் அனுபவித்தல் பிற உயிர்களுக்கு தொல்லை இல்லாமல் இருப்பதே தவத்திற்கு அறிகுறி.
262. தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.
உரை: செயல்களில் சிறந்தது தவம் என்பதால் அது அதற்கான குணமுடையார்க்கே ஆனதாகும். அக்குணங்கள் இல்லாதார் அதனை செய்வது தவத்திற்கு இழுக்கு.
263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்.
உரை: பலரும் தவம் செய்யாததின் காரணம் நோக்கி பார்த்தால் உயரிய துறவிக்கு உரிய உதவி செய்தலில் மகிழ்ந்து தான் தவம் செய்ய முயற்சிப்பதை மறந்தனர் போலும்..
இன்னொரு பார்வை : உரிய குணமுடையவர்க்கே தவம் என்பதால் மற்றார்க்கு அவர்தம் தவம் செழிக்க உதவுதலே தவமாகிறது.
264. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
உரை : தவத்தால் வரும் பயனானது பகைவரை ஒடுக்குதலும் அன்பரை உயர்த்துதலும் எண்ணும் நொடி முடியும்..
265. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
உரை: விரும்பியதை விரும்பியவாறே அடைவதால் செய்யப்படும் தவம் இங்கு பலராலும் முயலப் படும்..
266. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
உரை: தவம் செய்பவர்கள் தன் கடமைகளை மட்டுமே செய்வர் மற்ற அனைவரும் ஆசையில் சிக்கி பலவினைகளை செய்வார்..
267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
உரை: தீயில் சுடசுட மின்னும் தங்கம் போல ஔிவீசுவர் துன்பம் சுடசுட தவம் செய்வார்.
விளக்கம் : சுட சுட மின்னும் பொன் உலகில் மதிப்பு பெறுவது போல . தவமுடையார் துன்பத்தை ஏற்று தாங்க தாங்க தங்கமாக மதிக்கப்படுவர்.
268. தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
உரை: தன்னுயிரை விதி பறிக்காது தானே உடலைவிட்டு பிரித்து வாழும் தவம் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் பணிந்து வணங்கும்.
இன்னொரு உரை: தன்னுடல் பிரித்து உயிர்ஆக்கம் பெற இயங்கத் தெரிந்தவனுக்கு எல்லா உயிர்களும் அடங்கும் .
269. கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
உரை: எமனை வெல்லவும் முடியும் தவவலிமை உடையவர்க்கு .
இன்னொரு உரை: கூற்று - பேசும் அங்கு - இடத்தில் உதித்தல் - தோன்றுதல் . கைகூடம்..
Post a Comment