இல்லறத்தோர் சமூகத்துடன் இணைந்து வாழ .உதவியும் நன்மையும் வளரும் அதே அளவில் பொய்மையும் தீமையும் வளரும். அவ்வகையில் நன்மை நீடிக்க தீமையை தடுக்க வேண்டும் அதற்கான முறையில் அனைவரும் நடுநிலையில் இருக்க வேண்டும். ஆதலால் உலகம் நல்வழி பட நடுநிலைமை அவசியம் . அதனால் பேராசான் நடுநிலைமையை விளக்கம் செய்கிறார்.
111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
உரை : நண்பர் பகைவர் உறவார் அயலார் என அனைத்து பிரிவிலும் இயைந்து நன்மை என்கிற பகுதியில் நிற்பதே நடுவுநிலைமைக்கு தகுதியாகும்.
112. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
உரை : நடுவுநிலைமை உடையவனின் செயல்கள் மற்றவற்றுக்கும் சிதைவு ஏற்படா வண்ணம் காவலாய் இருக்கும்.. தீமை வளராமலும் நன்மை தளராமலும் பாதுகாப்பது நடுவுநிலைமையின் செயல்பாடு ஆகும்.
113. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
உரை : நன்மையே தருவதாயினும் நடுவுநிலைமை தன்னை விடுமாறு ஆன செயல்களை அப்போதே கைவிட வேண்டும்.
114. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
உரை : தகுதி உடையவர் தகுதியில்லார் என்பது அவரவர் நடத்தையால் விளையும் புகழும் பழியும் காட்டி விடும்.
115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
உரை : நன்மையும் தீமையும் எப்போதும் இல்லாமல் இல்லை தன் நெஞ்சத்தால் நடுவுநிலை தவறாமை சான்றோருக்கு அழகு.
116. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
உரை : தன் நெஞ்சம் நடுவுநிலைமை தவறி கெடுதல் செய்தால் தான் அழியப்போகிறேன் என்று அறிக.
117. கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
உரை : நடுநிலை நின்று நன்மை பயத்தவன் வறுமை பட்டாலும் உலகம் அவனை கெட்டுப்போனதாக கருதாது.
118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
உரை : சமம் செய்து சீர்மை காக்கும் தராசு கோல்போல் இருந்து ஒருபக்கம் சாயாமை சான்றோர்க்கு அழகு.
119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
உரை : உள்ளம் அரணாக நின்று நடுநிலை செய்யாமல் போனவர் சொல்லும் அரணாக நில்லாது போகும்.
120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
உரை : பிறருடையதையும் தம்முடையது போல கருதி நடுவுநிலைமை தவறாது விற்பனை செய்வதே வாணிகம். என்கிறார் வள்ளுவப் பெருந்தகை
Post a Comment