இல்லறத்தோர் சமூகத்தோடு இயைந்து வாழும் போது ஒருவருக்கொருவர் உதவுதலும் சேவையாற்றுவது இயல்பு என்பதால். ஒருவர் செய்த நன்றுகளை அறிந்து மதித்தல் என்பது நல்ல சமூகம் நீடிக்க அவசியமாகும் . அதன் நோக்கில் செய்நன்று அறிதல் என்ற நன்றுகளின் தன்மையை உணரும் பொருட்டு பேராசான் விளக்கம் செய்கிறார்..
101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
உரை : பலரால் செய்யப்படாமல் இருந்த பொழுது ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது பூமியையும் வானலோகத்தையும் உருவாக்குதலை விடவும் கடினம். என்று செய்த உதவிக்கான மதிப்பை குறிப்பிடுகிறார்.
102. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
உரை : தேவைப்படும் காலத்தில் செய்த நன்மை சிறியதே என்றாலும் உலகத்தை விட மிகப் பெரியது..
103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
உரை : வருபயனை வேண்டாமல் ஒருவர் செய்த உதவி ஒப்பிட்டு அளந்தால் அந்த நன்மை கடலைவிட பெரியது. கடல் உலகை விட பெரியது என்பது குறிப்பிடதக்கது.
104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
உரை : தினை போன்று சிறிய நன்மை செய்தாலும் அதன் பயன் அறிபவர் பனைமரத்து அளவு போல கருதுவர். பனைமரம் உயரம் மட்டுமல்ல பல காலம் பயன் தரக்கூடியது ஓலை கீற்று பழம் நுங்கு மரத்தண்டு என பலவகையில் பயன் தருவது. அதுபோல சிறியஉதவியும் பலவகையில் பலகாலம் பயன்தருவது.
105. உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
உரை : உதவி செய்த செயலால் அளக்கப்படுவது இல்லை உதவியானது உதவி செய்பவரின் குணத்தை வைத்து மதிக்கப்படுவது.
106. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
உரை: அறிவிலும் ஒழுக்கத்திலும் குறையில்லாதவர் செய்த நன்மையை மறந்து விடக்கூடாது. அதுபோல துன்பத்துள் உறுதுணையாய் இருந்தவர் நட்பை விட்டுவிடக்கூடாது.
107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
உரை: தன் துன்பத்தை துடைத்தவர் நட்பை ஏழேழு பிறப்பும் எண்ணுவர் நல்லோர்.
தன் மேல் விழுந்த பழியை துடைத்தவர் நட்பை ஏழேழு பிறப்பிலும் எண்ணிப்புகழ்வர் நல்லோர் .
108. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
உரை: ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல குணமல்ல . அதுபோல நல்குணத்தார் ஒருவர் செய்த தீமையை அன்றே மறந்துவிடுவர்.
109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
உரை : தன்னை கொலை செய்ததற்கு இணையான கெடுதலை ஒருவர் செய்தாலும் அவர் செய்த ஒரு நன்மையை நினைக்க அந்த தீமையால் வந்த மனநிலை மாறிவிடும்.
110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
உரை : எந்த நன்மையை அழித்தவருக்கும் அந்த பாவம் தீர்க்க ஒரு வழியாவது இருக்கும் . ஆனால் ஒருவர் செய்த நன்மையை மறந்து அவர்க்கு கெடுதல் செய்பவனுக்கு அந்த பாவத்தை தீர்க்கும் வழியில்லை.
Post a Comment