துறவறவியல் - கூடா ஒழுக்கம்

தவமிருந்து உய்வார்க்கும் கூடா ஒழுக்கம் கேடே தரும் என்று அறிந்து விளக்குகிறார் பேராசான்..

271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

உரை: வஞ்சக மனம் கொண்ட ஒருவனின் பொய்யான  ஒழுக்கத்தை பார்த்து பிரபஞ்சம் முழுதும் எப்போதும் இருப்பவையாக இருக்கும் பஞ்சபூதங்கள் அவனுக்குள்ளும் இருப்பது எண்ணி சிரிக்குமாம்.

272. வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்.

உரை : வானளவு உயர்ந்த புகழ் நின்ற போதும் என்ன பயன்?  தன் நெஞ்சமே தானறிந்து குற்றம் செய்திருந்தால்.

273. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

உரை : தன்னை குற்றங்களில் இருந்து விலக்கி வாழும் வலிமை இல்லாதவன் பெற்ற தவம் என்பது புலியின் தோல் போர்த்தி பசு பயிர்களை மேய்வது போல தான் பொய் வலிமையால் மறைத்தாலும் எளிதாக கண்டறியக்கூடியது..

274. தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

உரை : தவ ஒழுக்கும் போய் தவறானவை செய்தல் என்பது புதர்பின் மறைந்திருந்து வேடன் பறவையை பிடிப்பது போல. நேர்மை இல்லாதது.

275. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்.

உரை: பற்றுகளை விட்டுவிட்டோம் என்று பொய்பேசி ஒருவன் தவறு செய்தால். துறவை ஏன் ஏற்றோம் என்று எண்ணி எண்ணி வருந்துமளவுக்கு பல கெடுதல் தரும்.

276. நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.

உரை: மனத்தினால் துறவாது துறவிபோல் ஏமாற்றி வாழ்பவனை விட இரக்கமில்லாதவன் யாருமில்லை.

277. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து.

உரை: புறத்தில் குன்றிமணி போல அறமாக நின்றவராயினும் மனத்தில் குன்றிமணியின் மூக்கு போல கருமை கொண்டு இருப்பவரும் உண்டு.

278. மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.

உரை: மனமது அசுத்தமாக வைத்துக்கொண்டு குணத்தை கொன்றுவிட்டு வெளியில் நன்னீரில் நீராடி மறைகளை மட்டும் பின்பற்றி வாழும் மனிதர்கள் பலர்.

279. கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்.

உரை: நேராக இருந்தாலும் அம்பு கொடியது அதுபோல புறத்தில் மட்டும் நேர்மையானவர்களின் செயல்கள் கொடியவை. வளைந்தாலும் யாழ் நல்லது அதுபோல புறத்தில் அசுத்தமாய் இருந்தாலும் அகத்தில் தூய்மையாய் இருப்பர் நல்லவர்.  இவ்வாறு மனிதர்களின் செயல்களை கொண்டு வகைப்படுத்திக் கொள்ளலாம்.

280. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.

உரை: தலை சிரைத்து மொட்டையடிக்கும் துறவும் வேண்டாம் . முடி நீட்டி சடைகொண்ட துறவும் வேண்டாம். உலகம் இழிவாக பேசும் செயல்களை விட்டுவிடும் துறவே துறவு.


 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post