எனதருமை சஞ்சயா எனதுள்ள சஞ்சலம் நீங்க நீ உன் ஆற்றலால் அறிந்து எனக்கு சொல்வாய். என்றான் அத்தினாபுரத்து ராசன். திருதிராட்டன்.
மன்னவன் வேண்டிட மதியினில் தோண்டிச் சொல்பவன் சஞ்சயன் . இதுவரை மன்னவர்காய் புவிமீது தேரோட்டியவன் இப்போது மதிமீது தேரோட்டுகிறான்.
அஞ்ஜெயன் மதியோட்டும் ரதமேறி நானும் பகர்வேன் ஒரு காதைக் குள்ளமைந்த கீதை.
போதையற போதமுற பேதமற கோதை எங்கள் ராதை கொண்ட கண்ணன் சொன்ன கீதை.
தத் வம் அசி . சத் யம் மயி எல்லாம் நித்யமென சொல்வேன். நீங்கள் செவி தாரீர்.
அதுவொரு போர்களம். அடல்நிறை வீரர்கள் புடைசூழ்ந்த படைக்களம். பீமரும் பீஷ்மரும் புகழ்திகழ் துரோணரும் நின்றெதிர்பவர்களை உண்களம்.
ஆரம்பம் ஆகட்டும் என்றே ஊதினான் சங்கை அன்றே கங்கை பெற்ற வேங்கை.
ஆகட்டும் ஆகட்டும் என்று ஊதினான் கண்ணன் கார்முகில் வண்ணன்.
சமர்செய்யும் முன்னம் எதிர்ப்போர் தமைக்காண வேண்டினான் அருச்சுனன். வில் வீரம் அருச்சிக்கும் விருத்தன்.
கண்ணன் ஓட்டினான் தன்தேரை கொண்டு காட்டினான் சாவோரை. வீரம் மிகுத்து வென்ற சேதியை யாரிடும் சொல்வனோ அவரெல்லாம் கொன்று நான் யாருக்கு வாழ்வது கண்ணா. சாவுக்கும் தீதிது.
அள்ள முடியா அளவில் பலரும் உதிரம் சிந்தி அகிலம் ஒப்பா உயிரை விட்டால் என்னவாகும்?. ஆடவர்தாம் குன்றி எஞ்சும் பெண்களுக்கு அரணின்றிப் போகும் அகிலமே நோகும். தந்தையில்லா பிள்ளையெல்லாம் தத்தம் வழியில் போகும் தர்மம் என்னவாகும்?. உற்றார் இல்லாது வாழும் உலகம் நரகம் அதில் எங்கே நிம்மதியும் நன்மையும்?.
அச்சச்சோ அச்சூதா நான் செய்யேன் இப்பாவம் விட்டுக்கொள் ஆயிரம் சாபம். நிகழும் விளைவை எண்ணி எண்ணி நெஞ்சம் வேகிறது உடலில் எல்லா அணுவும் நோகிறது அஞ்சி வேர்க்கிறது , காண்டீபம் கனக்கிறது. வேண்டாம் கண்ணா வேண்டாம் ஐவர் வாழ அகிலம் அழிவதா? அதற்காய் நாமும் அம்பால் சுடுவதா?. என்றே துடித்த அருச்சுனன் . நடுங்கி விடுத்தான் காண்டீபம்.
அடடே அருச்சுனா , அறங்கள் பேசுகிறாய். அன்றே கேட்டேன் போர் தான் என்றாய் . இன்றோ பேடி போலே மாய்ந்தாய். எத்தனை போரில் வென்றாய் அதில் எத்தனை உயிரைக் கொன்றாய். இன்றோ உன்னவர் உறவினர் என்றதும் நியாயத் துலாபாரம் சாய்கிறதோ?.
கேலி செய்யாதே கோவிந்தா என்நிலையில் நின்று பார் எங்கும் ரத்த வெள்ளமும் மக்கள் பிணங்களும் அதை கொத்தித் தின்னும் கழுகுகளும் காக்கைகளும் கூகைகளும் எரியும் உடல்களும் சாம்பல் மேடுகளும். இத்தனையும் விலைகொடுத்து வாங்கும் வெற்றியினால் நன்மை என்ன மதுசூதனா?.
அழியும் அழிவை பற்றி மட்டுமே சிந்திக்கிறாய். அழிவிற்கு பின் வரும் புது ஆக்கத்தை ஏன் சிந்திக்க மறக்கிறாய். சிதைந்த காடு அழிந்தால் தான் புதிய வயல்களும் வனங்களும் உருவாகும். திரண்ட மேகங்கள் அழிந்தால்தான் நிறைந்த மழையானது மண்ணில் விழும். அழிவு என்பது அழிவுமட்டுமல்ல புதியதொரு ஆக்கம் என அறிவாய்.. அதுவே அவசியமான ஞானம் ,ஆகையால் அவசியமற்ற எண்ணங்களை அழி இல்லை பெறுவாய் ஊரார் பேசும் பழி.
அச்சுதா மாதவா கேசவா மதுசூதனா கோவிந்தா வாசுதேவா. அருச்சுனன் நான் மடமை நிறைந்த மூடன் தான் ஆனாலும் உன்னை நம்பி சரணடைந்த சீடன் நான். என்னை திருத்தி ஞானம் புகுத்து . நன்மை தீமை ரெண்டும் பகுத்து.
ஆகட்டும் பார்த்தனே . அறிவறிந்து கேள் . என்று ஆரம்பித்தான் பகவத் கீதை. நாம் பயணிக்க வேண்டிய ஞானபாதை .
(இது தூயதமிழா இருக்கும் . இன்னும் சிம்பிளா பண்ணலாம்னா சொல்லுங்க)
Post a Comment