சண்முக சட்கண்டம் - 29 - தோழனெனவே அடைந்தேன்

 ஆழ அறிவால் நிறைந்து

  ஆதி சுடரை உணர்ந்து

சூழும் வினையால் உழன்று

 சூதர் கரம்மேல் சுழன்று

வாழும் பயன்தான் எதுவோ

  வானை மலர்சேர் குமரா

தோழ னெனவே அடைந்தேன்

  தோயும் மதுதேன் குணமே.1


யாழின் சுகமே குகன்நீ

 யாவர் புரிவார் உனையே

வேழ முகமே அணிந்த 

  வேந்தன் இளையோன் புவியின்

ஆழங் கடந்தே அடியார்

  ஆளத் திளைக்கும் குருலே

தோழ னெனவே அடைந்தேன்

  தோகை மயிலான் தனையே.2


கூழம் எனவே கிடந்தேன்

 கூடும் கழிவே மிகுந்தேன்

பாழும் பிறவி பலவும்

  பாவி பிறந்தே சலித்தேன்

ஏழும் மலைசூழ் பெரியன்

  ஏகன் விரும்பும் இறையை

தோழ னெனவே அடைந்தேன்

  தீயத்  துயரம் தொடாதே 3


தாழம் மலரதை தலையில்

 தாங்கும் சிவனின் தலைவா

யாழும் குழலும் நெருங்கா

 யாரும் அறியா சுருதி

வாழும் கணத்தில் வகையாய்

  வீசும் குமரக் குகனை

தோழ னெனவே அடைந்தேன்

  தோன்றும் குறைகள் இலதே 4


ஊழிற் உளிபட் டுழவும்

 உலகார் உணரார் அதனால்

சூழும் குளத்தில் கமலம்

 சுமக்க பிறந்து உலகம்

ஏழும் புகழ பகைவெல்

  ஏகம் படைத்த சுடரை

தோழ னெனவே அடைந்தேன் 

  தோயம் மிகுந்து மலர்ந்தே. 5


கோழித் துணையை விரும்பி

  கொடியில் சுமந்த குறும்பனா

தாழித் தமிழ்தேன் முழுதும்

  திகட்டக் குடித்த கடம்பன்

வாழி வளமொடு நலங்கள்

  வழங்கும் வடிவத் தனையே

தோழ னெனவே அடைந்தேன்

  தோல்வி துளியும் இலதே. 6


பேழை எனவே பலரை

  புகுத்தி சுமக்கும் புவிபோல்

வாழைச் சிசுவாய் விரியும்

  வழமைச் சருக்கம் திருத்தும்

கோழை எனக்கும் கொடுமை

  கடக்கும் துணையை எளிதாய்

தோழ னெனவே அடைந்தேன்

  தூயத் தமிழின் வழியே. 7


ஆழங் கடந்து பழைய

  ஆதிக் கடந்து நிலையாம்

ஊழைக் கடந்து உறையும்

  உடமைக் கடந்து புவிமேல்

ஏழைக் கடந்து நிலைத்த

  ஏகம் கடந்து எனக்கோர்

தோழ னெனவே அடைந்தேன்

  தாழ பரமம் வரவே 8


யாழின் சுவையாய் இசைசெய்

  யாவும் துகளாய் விலக

ஏழின் சுவரம் சுருதி

  எழுதி எனைசெய் தருளே

வாழும் தினங்கள் வளர

  வணங்கும் பிறையோன் பதமே

தோழ னெனவே அடைந்தேன்

   தொடரும் இனிமை பலவே 9


வாழை எனநான் வளரும்

 வகையில் பலரும் பயன்கொள்

கீழை பிறப்பும் கிளரும்

  ககனப் புகழுள் துகளாய்

ஏழை பிறப்பில் அடைய

  எழிலோய் உனைதான் அடநான்

தோழ னெனவே அடைந்தேன்

 தொகையில் துன்பம் தொலைவே 10









Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post