அப்பாவும் நானும்ம் பலமுறை தோற்றிருக்கிறோம் பலமுறை ஜெயித்திருக்கிறோம் ஆனால் எங்கள் கொண்டாட்டங்களில் இரண்டிற்கும் பேதமில்லை. எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய வாழ்க்கைக்கு அப்பா ஒரு சாராம்சம். எங்களை தனித்தனியே பார்த்தவர் என்பது வெகுசிலரே . சிலநேரம் அப்பாவின் மீது கோபங்கள் மனகசப்புகள் வாக்குவாதங்கள் வரும் அது இயல்பு . அதில் கூட எனக்கு அதிகாரம் அதிகமிருந்தது. அப்பாவை தள்ளிவிட்டு வளரும் பிள்ளைகள் மத்தியில் நாங்கள் அப்போவோடே வளர்ந்தோம். அதனால் வாழ்க்கை எங்களை பயமுறுத்தவில்லை. எதிர்காலத்தை பற்றி அப்பா கவலையே படவில்லை நிகழும் காலத்தில் நன்றாக நடந்தால் போதும் என்றிருந்தார். சுமேரிய சிந்துவெளி நாகரீகங்கள் போல அப்பாவின் நாகரீகமும் பண்பாடும் வியக்கதக்கவை. அப்பா ஒரு ரகசியம். ஒரு குழந்தைக்கு மறைத்து வைத்திருந்து தரும் பிறந்தநாள் பரிசுபோல அப்பா எங்களுக்கு பின் பல ரகசியங்களை செய்திருக்கிறார் இந்த இறப்பும் அவற்றுள் ஒன்று என நம்புகிறேன். அப்பா ஒரு தீர்க்கதரிசி வாழ்க்கை என்னும் தென்றல் எப்போதாவது புயலையும் வீசிப் போகும் என்று கணித்திருந்தார் அதற்காக எங்களை பக்குவப்படுத்தியிருந்தார். இங்கு பல அப்பாக்கள் பல சொத்துக்களை சேர்த்துத் தருகிறார்கள். அப்பா எங்களுக்கு தந்த சொத்து தைரியமும் நம்பிக்கையும் தான். மரணம் பற்றிய கவலை அப்பாவுக்கு ஓராண்டுக்குள் தான் இருந்தது. அப்பா ஒரு அதிசயம். அவரது வாழ்க்கையை பிறர் நினைக்கவும் வாய்க்காது. பெரும் பணமில்லை வசதிகள் இல்லை என்றெல்லாம் உலகம் அளக்கலாம் அவரளவு வாழ்க்கையை அனுபவிக்க இன்னொருவரால் முடியாது தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்திருந்தார். இலக்குகள் இன்றி ஓடுவது என்பது மூடத்தனம் என்பர் இங்கே ஓடுவது விருப்பம் . எனக்கும் அப்பாவுக்கும் பொருத்தவரை அனைவரின் மனதிலும் நினைவிலும் இருந்து மறைந்து போவதை தான் மரணம் எனக் கருதினோம். அப்பாவை ஒருமுறை பார்த்தவரும் கூட மறக்க மாட்டார் என்பதால் அப்பாவுக்கு மரணமேயில்லை. என்ன செய்வது இயற்கையின் புத்தகத்தில் சிலபக்கங்களுக்கு முன்பே அப்பாவின் பெயர் இருந்திருக்கிறது. அப்பாவும் நானும் எப்போதோ எடுத்த முடிவு இது
." இதோ அப்பாவுக்கு பதில் நான் ". என்பது.
ஆதலால் அப்பாவின் சார்பாக அவர் வாழ்வில் நன்மையிலும் தீமையிலும் இருப்பிலும் செழிப்பிலும் கிடந்தும், கடந்தும் போன அனைவருக்கும் கோடிக்கோடி நன்றிகள் பிரியங்கள் ஆசிர்வாதங்கள் . இதுவரை ஆலயங்களில் கடவுளிடம் அப்பாவிற்காக வேண்டியிருப்போம். கைமாறாக அவர் இறைவனிடமே சென்று வேண்டுகிறார்.
எல்லாருக்கும் எல்லா வளமும் நலமும் அமையட்டும்.
Post a Comment