#செவ்வாய்கிழமை #சேவற்கொடியோனுக்கு
ஆறிரு தோளும் அறுமுகத் தழகும்
கூறிடு வேலும் குகவடி வதுவும்
ஏறிடு மஞ்ஞும் எழில்மிகு குமரம்
நீறிடும் போது நினைந்திட சுகமே 1
ஏரகத் திறைவன் எம்மானுக் காசான்
சீரகத் ததிலே சிற்றம்ப லத்தே
வேரெனத் துளிர்த்து விந்தையு மாகி
பூரணத் தடங்கும் பேராற்றல் தானே 2
வேறெனத் தகுமோ வேலந்தன் கருணை
ஆறனெ அரணாய் ஆனத்தன் அருளை
பேறெனப் பெறுவோம் போற்றித்தான் மறந்தும்
வேறென நினையான் வேலன்தான் துணையே3
ஆகமம் முழுதும் ஆனதோர் உருவன்
போகமா முனிவர் போற்றியக் குமரன்
மாகமால் மருகன் மாயவன் முருகன்
தாகமால் அறுத்து தன்னையுந் தருவன் 4
அடர்சடை திங்கள் அரவமும் பூண்ட
நடமிடுந் தேசன் நகைதனில் வெந்த
பொடியது பூசிப் பொழில்மிகு மேனி
வடிவது தந்த வரமிவன் தானே 5
எங்கிலும் நிறைந்து எம்மையும் ஆண்ட
கங்கினில் பிறந்து கந்தனைப் பாட
சங்கினில் பிறந்த சங்கதம் தன்னை
இங்கனம் முழங்கு இன்பமுண் டாக 6
அவ்விரு மலரை அடியெனக் கொண்ட
செவ்வியக் குமரன் செழிப்பினைக் காண
எவ்விய மழிய எமபயம் நீங்க
பவ்வக் கரையில் பவந்தரு வானே 7
நெஞ்சக் கமலம் நீரில் மிதக்க
அஞ்சல் இலவென் றங்க பிறந்த
மஞ்சள் சுடரை மங்கா ஔியை
கொஞ்சத் தமிழால் கோயில் அமைத்தே. 8
தன்னை உருக்கி தம்மில் புகுவான்
மன்னன் அவனை மண்ணில் அறிவார்
என்னப் புகழ்வார் ஏதென் றுரைப்பார்
சின்னக் குமரன் செய்யும் செயலை 9
இன்னவன் என்றவன் இனியத் தோற்றம்
சொன்னவர் உள்ளரோ சொரூப வேளை
என்னவன் வேலனோ எதிலும் ஒட்டான்
தென்னவன் கந்தனில் திளைப்போம் இன்றே 10
Post a Comment