#மதுரைவீரன் பதிகம் #விருத்தம்
உனைத்தான் கும்பிட்டேன் உள்ளபடி நம்பிட்டேன்
நினைக்கும் செயலெல்லாம் நல்லபடி ஈடேற
வினைக்கும் வித்தாக வீரநடை போட்டிட
எனைதான் எப்போதும் எந்நாளும் காப்பாயே 1
இலக்கும் வந்தாலே ஈடேறும் உன்னாலே
துலங்கும் எல்லாமே தூயோனே எம்வீரா
கலக்கம் இல்லாமல் காப்பாற்ற வீரய்யா
வலக்கை வீச்சுந்தான் வந்திங்க நிக்காதோ 2
ஒழுக்கம் தவறாம ஓஞ்சனத்த வழிநடத்து
இழுக்கும் கெடுவோரை இந்தநொடி ஒழித்துவிடு
வழுக்கும் கணமெல்லா வந்துநீயும் பிடித்துகொள்ளு
எழுப்பும் சிவநெறியை ஏத்தமோடு காப்பாத்து 3
தடைகள் இல்லாம துல்லியமா வென்றிடவே
படைகள் வந்தாலும் பட்டழிந்து ஓடிடவே
உடைக்கும் துன்பங்கள் ஊடுருவி வந்தாலும்
கடைசி நேரத்தில் காவலென வந்திடய்யா 4
உழைக்கும் நம்மாள உயர்த்தி விடுமய்யா
தழைக்கும் பேறுக்குந் துணையா கிடுமய்யா
அழைக்கும் போதெல்லாம் அருகே இருமய்யா
பிழைக்க நல்லாத்தான் பிடிப்ப தருமய்யா 5
மதுர வீரய்யா மனசோட வாருமய்யா
குதிர ஏறய்யா குலத்தோட காவலய்யா
எதிர வந்தாலே எமனோடும் மோதுமய்யா
அதிரும் அண்டத்த அருளோட பாருமய்யா 6
வீரி மரத்தோரம் வீச்சறுவா கெடந்ததய்யா
ஏரிக் கரையோரம் ஏத்தயிடம் அமைஞ்சதய்யா
ஊரில் உனப்போல வீரமொன்னு கிடைக்கலையே
பாரில் சனத்தோட பாவமத கழவிடய்யா 7
மதுரை வீரந்தான் மஞ்சறுவா காரனுந்தான்
சதுரம் எட்டேழும் சாமியவன் காலடிதான்
எதுவும் ஒப்பாது எஞ்சாமி கோலமத
மெதுவா ஒத்துப்போ மேலயெதும் தொட்டுடாதே 8
வேண்டி நின்னுட்டா வேண்டியத கொடுத்துடுவான்
ஆண்டி ஈசனுக்கு அப்படியே வடிவிருப்பான்
பூண்ட சத்தியத்த பக்தியோட முடிச்சிடுவான்
சீண்ட நெனச்சிட்டா சீவனெங்க இருந்திடுமோ 9
அறியா புள்ளைய அறுவா காக்கட்டும்
கறியா வெட்டிதான் குடும்பம் தின்னட்டும்
வெறியால் வீரனும் விரும்பி காக்கட்டும்
நெறிதான் மாறிடா நெலம வாழட்டும் 10
வேலப் புடிச்சாத்தான் வேற வெறியாட்டம்
ஆல மரமாத்தான் ஆயுள் முழுசுக்கும்
கால விளையாட்ட காத்து கொடுத்தாட்டம்
போல துணையாட்டம் வீரா உன்னாட்டம் 11
சந்தனம் பூசிக்கிட்டு சாமத்துல வந்து
தந்தன தாளத்தோட தாவியாடு இங்கு
வந்தனம் கூட்டத்தை வாழவைக்குஞ் சாமி
சுந்தர ஈசனோட சொந்தமே நீயே 12
Post a Comment