ஏகர் பதிகம்

பெண்ணென்று தோன்றிய 

  பொம்மான்நீ அல்லவா

என்நெஞ்சில் ஆடிடும்

   ஏகன்நீ அல்லவா

என்னையும் ஆளவே

  எந்தையும் ஆனவா

தன்னையும் தந்தவா 

  தீயேந்தி நின்றவா 1


மண்மீது வாழவே

  மாயங்கள் செய்தவா

 விண்மேவி கோளமாய்

  வித்தைகள் செய்பவா

எண்ணத்தில் நிற்பவா

  என்னுள்ளில் மூள்பவா

வண்ணங்கள் கோடியும்

  வைத்துன்னை தேடவா 2


பண்ணோடு பாடவா 

  பாவங்கள் நீங்கவா

பெண்ணொரு பாதியாய்

  பூண்கின்ற ஆண்டவா

கண்வாங்கிக் கொண்டவா

  காலங்கள் ஆனவா

மண்தாங்கி சென்றவா

  மங்காத சோதியா 3


நின்னையும் நம்பியே

 நித்தம்நான் வாழ்கிறேன்

என்னையும் தாங்கிடு

 எவ்வங்கள் நீக்கிடு

பன்மையொன் றானவா

 பந்தம்நீ அல்லவா

நன்மைநீ அல்லவா

 நான்பாடும் நாயகா 4


 தென்னன்நீ தாண்டவா

   தொன்மைநீ தூயவா

 மன்னன்நீ அல்லவா

  மாயங்கள் நீக்கவா

 இன்னல்கள் நீக்கவா

  இன்பங்கள் கூட்டவா

கன்னல்நீ அல்லவா

 கண்டங்க றுத்தவா 5


தீமைகள் தீரவே

 தீயாகி ஓடிவா

சீமைகள் கொண்டவா

சொக்கத்தீ ஆண்டவா

காமத்தை கொன்றவா

 காமாட்சிக் காண்டவா

ஏமத்தை வெல்லவே

 என்னைநீ ஆளவா 6


பொய்யாகி போவதா

 புண்ணேறி நோவதா

மெய்யாகி நின்றவா 

 மேன்மைகள் கொண்டுவா

வெய்யாத சோதியே

 வெண்ணீறு மேனியே

என்வாழ்வின் தோனியே

ஏகத்து ஏணியே 7


எங்கேயும் தோன்றுவாய்

 ஏதேதோ மாற்றுவாய்

சங்கேதுங் சங்கரா

 சங்கேதம் தீர்க்கவா

நங்கூரம் ஆகவே

  நெஞ்சில்நீ ஊன்றிடு

அங்கோரு கோயிலாய்

  ஆனந்தம் தந்திடு 8


கல்லாக நிற்பது

  கட்டாயம் நீயிலை

சொல்லாத பேருனை

 சிற்பத்தில் காண்கிறேம்

பொல்லாத வாழ்வினில்

 பொய்யாக வாழ்கிறேன்

நில்லாத காலமே

 நித்தம்நீ காத்திடு 9


என்னாதி மூலமே

  ஏகத்து நாதனே

உன்பாதம் சேரவே

 உள்ளத்தை தாங்கினேன்

தன்னோடு ஐந்தினை

 தட்டாமல் ஒதினேன்

உன்னோடு தூசென

 உன்பாதம் சேரவே 10





  



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post