அப்பாவின் முக்திக்கொரு பதிகம்

அப்பாவின் #முக்திக்கொரு_பதிகம்

 இந்தைப் பிறவியில் இறப்பினை எய்த
எந்தை இனியொரு பிறவியில் லாதே
விந்தை வியந்திடும் விரிசடை யோனே
சிந்தை இறங்கியே சிவமருள் வாயே. 1

முன்னம் பிறவிகள் முடிந்ததோ இலதோ
இன்னும் பிறவிகள் இருப்பவை பலதோ
என்பால் பொருட்டுநீர் எனதுயிர் வழங்கி
தென்பால் இருப்பரை தனிலெடுத் தருள்க . 2

அபயம் அருளும் அண்ணா மலையோய்
உபயம் எனவே உன்னில் கொடுத்தேன்
அபயக் கரத்தால் ஆற்றுப் படுத்தி
சபையில் நிறுத்து சிற்றம் பலனே 3

பாகம் ஒன்றைப் பார்வதிக் களித்து
தேகம் ரெண்டாய் தோன்றிய சுடரே
சோகம் என்னை சாப்பிடும் நிலையில்
யாகம் என்றே எந்தை கொடுத்தேன். 4

வருத்தம் எனையும் வாட்டும் போதும்
விருத்தம் எனவே வந்தேன் இங்கே
திருத்தம் பலவும் தோன்றும் போதும்
இருத்து அவரை இதயத் துள்ளே 5

வண்ண மணிகள் மங்கும் ஔியே
எண்ணத் துளிகள் எங்கும் நிறைந்தாய்
கண்ணன் தனையே கண்ணில் வைத்து
கண்கள் எனவே காப்பாய் தினமே. 6

விண்ணில் வாழும் விண்ணோர் தம்மில்
கண்ணன் தன்னை கண்ணாய் வைத்து
மண்ணில் மீண்டும்  வாரா வண்ணம்
விண்ணில் இருத்தி ஆள்வாய் ஈசா. 7

ஆதிப் பொருளே ஆரம்பச் சுடரே
சோதிப் பிளம்பில் சேர்த்துக் கொள்வாய்
தேதி தினங்கள் தோன்றா வண்ணம்
நீதி அருள்வாய் நித்திய சுடரே. 8

சித்தம் தெளிய சிகரம் இருப்போய்
பித்தம் தெளிந்தார் பிறப்பை அறுக்க
நித்தம் பணிந்தேன் நிமலத் திருவே
அத்தம் அருவாய் அப்பன் தனக்கே 9

பொருந்தும் முக்தி போற்றித் தருவாய்
விருந்தும் விண்ணும் வேண்டித் தருவாய்
மருந்தும் மாயம் மாறித் திரிவோய்
விரும்பும் முக்தி வாரித் தருவாய். 10

1 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post