சிதம்பர ரகசியம்

தமிழ் கூறும் உலகிற்கெல்லாம் தெரிந்த ஒரு வார்த்தை தான் சிதம்பர ரகசியம். அது குறித்து பற்பல விளக்கங்கள் ஆய்வுகள் பொழிப்புரைகள் , கண்ணோட்டங்கள் காணொளிகள் என ஒரு பெரும்பட்டாளமே இருக்கிறது. இருந்தும் என் மனக் கருத்தையும் அந்த வார்த்தைக்குள் சேர்க்க விரும்பினேன். அதுவே இந்த கட்டுரை.

சைவ சமயத்தில் கோயில் என்றாலே அது சிதம்பரம் தான் 5 சபைகள் 9 வாயில்கள் கோபுரத்தின் மீது 20 ஆயிரத்து 600 தங்கத்தகடுகள் 72 ஆயிரம் ஆணிகள் என்று நமது உடம்பின் சாரமாகவே விளங்கும் சிதம்பரம் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது தான்.

அதையெல்லாம் விட சிறப்பாக பேசப்படுவது அந்த ரகசியம் . அதனை பலர் பலவிதமாக சொல்வர் சிதம்பர ரகசியம் என்பது பூமியின் காந்தவிசையின் மையப்புள்ளி நடராஜர் காலடியில் என்றும் , சிதம்பர ரகசியம் என்பது தேவார திருவாசக ஏடுகளை ரகசியமாக வைத்திருந்தது என்றும், மணிவாசகர் தில்லை வெளியில் கலந்தது என்றும் , சித்சபையில் இருக்கும் நடராஜர் அருகில் இருக்கும் ஒரு இடம் என்றும் சொல்வதுண்டு.
பஞ்ச பூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாகும். அதனால் தான் சொல்கிறேன் சிதம்பர ரகசியம் என்பதே ஆகாயம் தான் என்று.
சித்+ அம்பரம் - சிதம்பரம் - சித் என்றால் அறிவு ,அம்பரம் என்றால் வெளி , என்கிறது வடமொழி.  தமிழிலும் சித்து+ அம் + பரம் என்று விளக்கினால் சித்திகளில் அந்த பரம்பொருள் என்ற பொருளாகும்.

ஆகாயத் தலமான சிதம்பரம் நமக்கு சொல்வது ஆகாய தத்துவத்தையே . நடராஜரின் சிலையும் அந்த தத்துவத்தையே காட்டுகிறது. நடராஜர் என்பது பஞ்சபூத சின்னம் காட்டும் சிற்ப வடிவமாகும் அதாவது கையில் நெருப்பும் விரிசடையில் இடை கச்சை அலைவில் காற்றும் தலை சுமந்த நீரும் கால் நின்ற உடலாய் மண்ணும் காட்டி பிறர்க்கு காட்டமுடியாத அந்தரத்தை ஆகாயத்தை காலை தூக்கிய வடிவில் காட்டுகிறார்.

நடராஜர் இப்படி பஞ்ச பூதத்தையும் காட்டி நிற்கும் கோலம் அற்புதமானது . இந்த அறிவே சித் என்னும் புறஉலக அறிவாக சொல்லப்படுகிறது . புறஉலகில் பஞ்சபூதம் பற்றி அறிகிறவன் உணர்கிறவன் ஞானி ஆகிறான் . அகஉலகில் உணர்கிறவன் யோகி ஆகிறான்.

ஆகாய தத்துவம் என்பது என்ன என்றால்? . ஒரு பொருள் இருப்பதை நாம் அறிவோம் அது இருக்கும் இடவெளியை நாம் அறிய முடிவதில்லை அது நிற்க ஒரு வெளி தேவை அதுவே ஆகாயம் . ஆதலால் ஆகாய பூதம் என்பதே அனைத்திற்கும் அடித்தளம் அது அளவற்றது உயிரளவில் மனமும் அறிவும் ஆசையும் ஆகாயத் தன்மை உடையவை .

ஒருவன் ஆகாயத்தை புரிந்து கொண்டால் அனைத்தையும் கடந்தவனாகிறான் முழுமையான முக்தியும் பெருகிறான். இறைவன் என்பதே நீர் வளி நிலம் நெருப்பு என்கிற ஆற்றல்கள் ஆட இடந்தரும் ஆகாயம் தான் ஏனெனில் இறைவனும் அளவற்றவன் வடிவற்றவன் நிலையற்றவன் யாவையும் ஈர்த்து வைத்துக் கொள்ளக்கூடியவன்.

இந்த ஆகாய தத்துவத்தை அருவுருவாக சொல்வதே சிதம்பர ரகசியமாகும். தில்லை பெருவெளி சென்றார் மீளவும் வருவரோ என்கிற வாக்கே அடியார்கள் ஆகாய வெளியில் கலந்துவிட்டனர் என்பதை குறிப்பதே..


அறிய விழைபவர்கள் ஆகாய பூதத்தை உணர முற்படுங்கள் ஞானம் உங்கள் கையில் சிக்கட்டும்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post